வயிறு தொடர்பான உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோயைக் கண்டறிவது பற்றி டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பி.ராஜ்குமார் கூறியதாவது:
“மலத்தில் வெளிப்படும் ரத்தத்தின் மூலம் இந்நோயை அறியலாம். மலத்தில் ரத்தம் கலந்து வருவதற்கு மூன்று காரணங்கள் உண்டு. அவை பைல்ஸ், ஆசன வாயில் உள்ள கிழிசல், புற்றுநோய். ரத்தம் மலத்தில் கலந்து வருவதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எதையும் அலட்சியமாகக் கவனிக்காமல் விட்டுவிட்டால், நோய் முற்றிச் சிகிச்சை அளிப்பதும் குணப்படுத்துவதும் கடினமாகிவிடக்கூடும்.
மலத்தில் ரத்தம் கலந்து வருவது இரண்டு வகைப்படும். ஒன்று கண்ணுக்கே தெரியாது. மற்றொன்று சிவப்பாக நன்கு தெரியும். சிறிய புண் அல்லது கட்டியில் இருந்து ரத்தம் கசிந்து வருவதால் இது ஏற்படும். கண்ணுக்குத் தெரியாவிட்டாலும். அக்கல்ட் பிளட் என்ற பரிசோதனை மூலம் இதைக் கண்டுபிடிக்கலாம்.
மலத்தில் கண்ணுக்குத் தெரியும் வகையில் இருக்கும் ரத்தத்தின் நிறம், புற்றுநோய் இருக்கும் இடத்தைப் பொறுத்து மாறும். வயிற்றின் மேல்புறத்தில் கட்டி இருந்தால் மலம் கறுப்பாக இருக்கும். சிவப்பும் பழுப்புமாக இருந்தால் வயிற்றின் வலப் பகுதியில் கட்டி இருக்க வாய்ப்புள்ளது. இடப் புறத்தில் கட்டி என்றால் சிவப்பு நிறத்தில் இருக்கும். மலத்தில் ரத்தம் கலந்தது போலக் காணப்படும். இது எந்த வயதிலும் வரலாம்.
கொலனோஸ்கோபியைப் பயன்படுத்தி இதை அறியலாம். பொதுவாக ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொலனோஸ்கோபி பரிசோதனை தேவை. ஒருவருடைய ரத்த உறவினர்களுக்குப் புற்றுநோய் வந்திருந்தால், ஒருவருக்குப் புற்றுநோய் வர அதிக வாய்ப்பு உண்டு" என்றார்.
வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் வயிறு தொடர்பான உறுப்புகளில் புற்றுநோய் வருவதை முன்கூட்டியே தடுக்கலாம். பச்சைக் காய்கறி, பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். வெளி உணவைக் கூடியமட்டும் தவிர்க்க வேண்டும். சரியான நேரத்தில் உண்ணும் பழக்கம் இருக்க வேண்டும். நடைப்பயிற்சி அவசியம். எடை கூடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். தினந்தோறும் மலம் கழிக்கும் பழக்கம் இருக்க வேண்டும். மன அழுத்தம் ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வயிறு என்பது உணவு சேமிப்புக் கிடங்குதான். சிறுகுடலில்தான் செரிமானம் நடைபெறுகிறது. பெருங்குடலோ, உணவுப் பையோ இல்லாமல் வாழ முடியும். ஆனால், சிறுகுடல் இல்லாமல் வாழ முடியாது. உணவுப் பையில் புற்றுநோய் வந்தால் அதை முழுமையாக நீக்கிவிட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியும் என்கிறார் குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் குமார கிருஷ்ணன்.
“ரத்த வாந்தி அல்லது மலத்தில் ரத்தம் வெளியேறும் நிலையில் குடல் தொடர்பான அவசரச் சிகிச்சை செய்யப்படும். வாந்தி எடுக்கும்போது சில நேரம் வயிற்றில் இருக்கும் வாயுவால் ரத்தத்தின் நிறம் மாறிக் காபி நிறத்தில் வரும்போது, அப்போது சாப்பிட்ட உணவுதான் வருகிறது என்று தவறாக நினைத்துச் சாதாரணமாகக் கவனிக்காமல் விட்டுவிடுவார்கள்.
உணவுக் குழாய் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களே இத்தகைய வாந்தி, மலத்தில் காணப்படும் நிற மாறுதலுக்குக் காரணம். வயிற்றில் அல்சர் அல்லது புற்றுநோய் இருந்தால் கொஞ்சம் சாப்பிட்ட உடன் வயிறு நிரம்பிவிட்டது போன்ற உணர்வு ஏற்படும். சில நேரங்களில் எரிமலை போலக் குடலுக்குள் எரியும். உடலில் ஏற்படும் சிறிய மாற்றங்களையும் உடனுக்குடன் கவனித்து, சிகிச்சை பெற்றால் சாதாரண வாழ்க்கை வாழலாம்” என்கிறார் குடல் நோய், கல்லீரல் மருத்துவச் சிகிச்சை நிபுணர் டாக்டர் கே. மகாதேவன்.
0 comments:
Post a Comment