கோடைக் காலத்தில் சாதாரண நோய்கள் தாக்குவது மட்டுமில்லாமல், தீவிரமான சில நோய்களும் வரக்கூடும். அவற்றைச் சமாளிப்பது எப்படி?
$ மணல்வாரி அம்மை
கோடைக் கால வெப்பம் பெரியவர்களைவிட குழந்தைகளைத்தான் எளிதில் பாதித்துவிடுகிறது. முக்கியமாக, கோடையில் அம்மை நோய்கள் இவர்களைத் தாக்குவது வழக்கம். மணல்வாரி அம்மை அவற்றில் குறிப்பிடத்தக்கது. மீசில்ஸ் எனும் வைரஸ் கிருமிகளால் இது வருகிறது. இந்தக் கிருமிகள் கோடைக் காலத்தில் அதிக வீரியத்துடன் செயலாற்றும்.
முதலில் காய்ச்சல், வறட்டு இருமலில் தொடங்கும். மூக்கில் நீர் வடியும். இதைத் தொடர்ந்து குழந்தையின் முகமும் கண்களும் சிவந்துவிடும். முகம், மார்பு, வயிறு, முதுகு, தொடை ஆகிய பகுதிகளில் மணலை அள்ளித் தெளித்ததுபோல் இளஞ்சிவப்பு நிறத்தில் சின்னச் சின்ன தடிப்புகள் தோன்றும். இவற்றின் மீது காலமின் லோஷனைத் தடவி வர, 10 நாட்களில் தானாகவே குணமாகிவிடும். இந்தக் குழந்தைகளுக்கு அரிசிக் கஞ்சி, வெல்லத்தில் தயாரித்த ஜவ்வரிசிக் கஞ்சி, பால், மோர், தண்ணீர், இளநீர், பழச்சாறுகள் உள்ளிட்ட நீராகாரங்களை நிறையத் தர வேண்டியது அவசியம். அதே நேரத்தில் வீட்டைச் சுத்தமாகப் பராமரித்துக் குழந்தைக்கு நிமோனியா எனும் நுரையீரல் தொற்று வராமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
சின்னம்மை
இது வேரிசெல்லா ஜாஸ்டர் எனும் வைரஸ் கிருமியால் வருகிறது. கோடையில் இந்தக் கிருமி அதிக ஆற்றலுடன் செயல்படுகிறது. மாசடைந்த காற்று வழியாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் தொற்றிக்கொள்ளும் தன்மையுடையது. முதலில் கடுமையான காய்ச்சலும் உடல் வலியும் ஏற்படும். உடல் முழுவதும் அரிக்கும், அதன் பிறகு நீர் கோத்த கொப்புளங்கள் தோன்றும்.
இது குழந்தைகள், பெரியவர்கள் எல்லோரையும் தாக்கும். நோயாளியைத் தனியாக வைத்திருந்தால் மற்றவர்களுக்கு இது பரவுவதைத் தடுக்கலாம். இதன் வீரியத்தைக் குறைக்க வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் உள்ளன. வீட்டில் ஒருவருக்கு அம்மை வந்துவிட்டால், மற்றவர்கள் உடனே தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நல்லது. இந்த நோயுள்ளவர்களுக்கு நல்ல ஊட்டச்சத்துள்ள உணவு வகைகளையும், ஆவியில் வேகவைத்த உணவு வகைகளையும், நீர்ச்சத்து மிக்க பழங்களையும் அடிக்கடி தர வேண்டும்.
$ வியர்க்குரு
கோடைக் காலத்தில் நம் உடலின் வெப்பத்தைக் குறைப்பதற்கு இயற்கையிலேயே அதிக அளவில் வியர்வை சுரக்கிறது. அப்போது உடலைச் சுத்தமாகப் பராமரிக்காவிட்டால், சருமத்தில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக்கொள்ளும். வியர்வை நாளங்கள் பாதிப்படையும். இதனால், வியர்க்குரு வரும். வெயில் காலத்தில் தினமும் இரண்டு வேளை குளித்தால் வியர்க்குரு வராது. வியர்க்குருவில் காலமின் லோஷனைப் பூசினால் அரிப்பு குறையும். வைட்டமின்-சி மிகுந்த ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களைச் சாப்பிட்டால், சீக்கிரமே வியர்வை நாளங்கள் சரியாகி வியர்க்குருவிலிருந்து விடுதலை பெறலாம்.
$ வேனல்கட்டியும் புண்களும்
சருமத்தின் மூலம் வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை சரியாக வெளியேற முடியாமல் வியர்க்குருவில் அழுக்குபோல் தங்கிவிடும். அப்போது அங்கு பாக்டீரியா தொற்றிக்கொள்ள, அந்த இடம் வீங்கிப் புண்ணாகிவிடும். இதுதான் வேனல் கட்டி. மற்ற வயதினரைவிட, குழந்தைகளுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் கோடைக் காலத்தில் அடிக்கடி சருமத்தில் புண்கள் வந்து சீழ் பிடிக்கும். ஆன்டிபயாட்டிக் மருந்துகள், வலி நிவாரணிகள், வெளிப்பூச்சுக் களிம்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்தினால், இந்தப் பிரச்னைகளைத் தீர்க்கலாம். இவை வராமல் தடுக்க வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும். கிருமி நாசினி கொண்ட சோப்பைப் போட்டுக் குளித்தால், மீண்டும் இந்தப் புண்கள் வராது.
$ தேமல் தொற்று
உடலில் வியர்வை தேங்கும் பகுதிகளான மார்பு, முதுகு, அக்குள்களில் பூஞ்சைக் கிருமிகள் எளிதில் தொற்றிக்கொள்ளும். குறிப்பாக, மலாஸ்ஸிஜியா ஃபர்ஃபர் (Malassezia furfur) எனும் பூஞ்சைகள் சருமத்தில் தொற்றும்போது, அரிப்புடன் கூடிய தேமல் தோன்றும். தேமலைக் குணப்படுத்தும் வெளிப்பூச்சுக் களிம்பு அல்லது பவுடரைத் தடவி வந்தால் இது குணமாகும். இதன் தாக்குதல் அதிகமாக இருந்தால் பூஞ்சை எதிர்ப்பு மாத்திரைகள் தேவைப்படும்.
$ படர்தாமரை
சரும மடிப்புகளிலும் உடல் மறைவிடங்களிலும் காற்றுப் புகாத உடல் பகுதிகளிலும் அக்குள், தொடையிடுக்கு போன்ற உராய்வுள்ள பகுதிகளிலும் டிரைக்கோபைட்டன், எபிடெர்மோபைட்டன் போன்ற காளான் கிருமிகள் தாக்கும். இதன் விளைவால் படர்தாமரை எனும் சரும நோய் வரும். இரவு நேரத்தில் அரிப்பும் எரிச்சலும் அதிகத் தொல்லையைக் கொடுக்கும். கோடை வெப்பத்தால் உண்டாகும் வியர்வை, இந்தத் தொல்லைகளை அதிகப்படுத்தும்.
உள்ளாடைகளைத் தினமும் துவைத்துச் சுத்தமாகப் பயன்படுத்தினால் தேமல், படர்தாமரை வருவதைத் தடுக்கலாம். முக்கியமாக, குளித்து முடித்த பிறகு மீண்டும் பழைய ஆடைகளை உடுத்தக் கூடாது. மென்மையான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம். செயற்கை இழைகளால் ஆன ஆடைகளும் ஆகாது. இவை வெப்பத்தை வெளியில் விடாது. இதனால் அடிக்கடி வியர்ப்பதும் உடலில் ஈரம் நிலைப்பதும் தொடர்கதையாகிவிடும். இதன் காரணமாகத் தேமலும் படர்தாமரையும் நிரந்தரமாகிவிடும்.
$ கண்களில் எரிச்சல்
அக்னி நட்சத்திர வெயிலின்போது வீட்டுக்குள்ளேயே இருந்தால்கூடப் பலருக்குக் கண்களில் எரிச்சல் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக, கணினியில் பல மணி நேரம் தொடர்ந்து வேலை செய்பவர்களுக்குக் கோடைக் காலத்தில் கண்கள் சீக்கிரமே உலர்ந்துவிடுவதால், கண்களில் எரிச்சல் ஏற்படுகிறது. சிலருக்குக் கண்கள் சிவந்துவிடுவதும் உண்டு. இதைத் தவிர்க்க, கண்களை அடிக்கடி சுத்தமான தண்ணீரால் கழுவ வேண்டும். சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும்போது கண்களுக்குத் தரமான கூலிங்கிளாஸ் அல்லது சன்கிளாஸ் அணிந்து செல்வது நல்லது. ‘வைசர்’ கொண்ட ஹெல்மெட் அணிவதும் பலனளிக்கும். இது, வெப்பக் காற்று கண்களில் நேரடியாகப் படுவதைத் தடுத்துக் கண்களைப் பாதுகாக்கும்.
- கு. கணேசன், பொது நல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com
http://tamil.thehindu.com/