என்றும் இளமையுடன் தோற்றமளிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும், ஆசையாகவும் உள்ளது. லேசாக முகத்தில் சுருக்கம் வந்தாலே மனதும் சுருங்கி வயதாகிவிட்டதோ என்று அடிக்கடி கண்ணாடியைப் பார்ப்பவர்கள் பலருண்டு.
உடலையும், மனதையும் இளமையாக வைத்துக் கொள்ள மருத்துவர்கள் கூறும் முறைகளை பின்பற்றினாலே போதும் என்றென்றும் இளமையாகவும் புதுமையாகவும் தோற்றமளிக்கலாம்.
உணவில் கட்டுப்பாடு
நாம் உண்ணும் உணவே நமக்குள் அதிசயிக்கத்தக்க மாற்றத்தை செய்கிறது. நமது ஆரோக்கியத்தையும், தோற்றத்தையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.
நாளொன்றுக்கு ஐந்து கப் பழச்சாறு அல்லது காய்கறிச் சாறு உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். புருக்கோலி, காரட், ஆரஞ்ச் போன்றவைகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.
ரெட் மீட் உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று கூறும் மருத்துவர்கள் தினசரி மீன் உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர்.
தாவர எண்ணெய்களில் சமைத்த உணவையே உட்கொள்ள வேண்டும். தினசரி 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும் என்பது அவர்களின் ஆலோசனை.
ஆன்டி ஆக்ஸிடென்டல்
முதுமையை தவிர்ப்பதில் ஆன்டி ஆக்ஸிடென்டலுக்கு முக்கிய பங்குண்டு. நார்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகள், பருப்புவகைகள் போன்றவற்றை உண்பதன் மூலம் அதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்டல் இளமையை தக்கவைக்கின்றன.
ஸ்ட்ராபெர்ரி, மாதுளம்பழம் போன்றவை அதிகம் உண்ணவேண்டும். கிரீன் டீயில் அதிக ஆண்டி ஆக்ஸிடென்ட்டல் உள்ளன. இது நன்றாக செயல்வினை புரிந்து முதுமை வராமல் தடுக்கின்றது.
புகை, மது கூடாது
நம்முடைய லைப்ஸ்டைலை மாற்ற வேண்டும். அதிக புகைப் பிடிப்பது. ஆல்கஹால், போதை வஸ்துகள் உபயோகிப்பதும் முகத்தில் அதிக சுருக்கத்தை வரவழைக்கும்.
இரத்தத்தை விஷத்தன்மையானதாக்கி நிறத்தை மங்கச்செய்கிறது. எனவே இளமையை விரும்புபவர்கள் குடிப்பதை, புகைப்பதை விட்டொழிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
உடற்பயிற்சி அவசியம்
உடற்பயிற்சியே இளமையை தக்க வைக்கும் இனிய வழி என்கின்றனர் மருத்துவர்கள். தினசரி அரைமணி நேரம் உடற்பயிற்சி செய்வது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து தசைகளை இருக்கமாக்குகிறது. இதனால் முதுமை தோற்றம் ஓடியே போய்விடும் என்பது மருத்துவர்களின் கருத்து.
எளிய சோப், கிரீம்கள்
முகச்சுருக்கத்தை போக்கவும், தோலை பாதுகாக்கவும் எளிய வழிகள் உள்ளன. ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளும் சோப், மற்றும் இளமையை கூட்டும் கிரீம் போன்றவைகளை உபயோகிக்க வேண்டும்.
கூடுமானவரை சூரிய ஒளியில் நம் உடல் அதிக அளவில் படுவதானாலும் முகச்சுருக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தரமான சன்ஸ்கிரீன் தடவாமல் வெளியில் கால் வைக்க வேண்டாம்.
கவலையை துரத்துங்கள்
கவலையே நமது முகச்சுருக்கத்தை அதிகமாக்கி வயதான தோற்றத்தை தரும். எனவே எதற்கும் கவலை வேண்டாம்.
மகிழ்ச்சியான நினைவே நமது உடலினுள் நல்ல ஆரோக்கியமான ஹார்மோனை சுரக்கச் செய்யும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.
கவலைப்படும் படியாக சம்பவங்கள் நடைபெற்றால் அதை புறந்தள்ளிவிட்டு மனதை அமைதியாக்கும் இசையை கேளுங்கள், நல்ல புத்தகங்களை படியுங்கள். என்கின்றனர் வல்லுநர்கள். இதுவே உங்களின் இளமையை நீட்டிக்கும் வழி.
மூளையை உற்சாகப்படுத்துங்கள்
இளமையை தக்கவைப்பதில் மூளைக்கு முக்கிய பங்குண்டு. எனவே மூளையை சுறுசுறுப்பாக்கும் விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள்.
நினைவாற்றலை அதிகரிக்கும் செயல்கள், பிரச்சினைக்கு எளிதில் தீர்வு காண்பது போன்ற ஆக்டிவான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதன் மூலம் நமது மூளையை சுறுசுறுப்பாக வைக்கலாம். இதன் மூலம் முதுமை என்பது நம் அருகில் கூட எட்டிப்பார்க்காது என்கின்றனர் மருத்துவர்கள்.
0 comments:
Post a Comment