தோட்டத்து மூலிகையின் அருமை தெரியாது என்பார்கள். இயற்கை தந்த அபூர்வ வரங்கள் கைக்கு எட்டும் தூரத்தில் நமக்குக் கிடைத்துவிடுவதாலேயே, அதனுடைய அருமைகளை நாம் உணராமல் தவறவிட்டுவிடுகிறோம். சமீபத்தில் நண்பர் ஒருவரின் வீட்டுக்குப் போயிருந்தேன்.
வீட்டை ஒட்டிய இடத்தில் சோற்றுக் கற்றாழையை வளர்த்திருந்தார்கள். சோற்றுக் கற்றாழையின் மருத்துவ மகிமைகளை நன்றாக அறிந்த எனக்கு, அதைப் பார்த்த உடன் மட்டற்ற மகிழ்ச்சி. நண்பரை மனமாரப் பாராட்டினேன். 'இது என்ன செடின்னு எனக்குத் தெரியாது. சும்மா அழகுக்காக வீட்டில் வளர்த்துக்கிட்டு இருக்கோம்’ என்று அவர் சொல்ல, அப்படியே நொறுங்கிப்போனேன்'' - சித்த மருத்துவ நிபுணர் வேலாயுதம் நம்மிடம் பகிர்ந்த வேதனை இது.
சுமார் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோற்றுக் கற்றாழைச் செடியின் மகிமைகளை இங்கே பட்டியல் போடுகிறார் வேலாயுதம். ''சோற்றுக் கற்றாழை நல்ல குளிர்ச்சியைத் தரக் கூடியது. மாதவிடாயைச் சீராக்கி, அதீத உதிரப்போக்கையும் கட்டுப்படுத்துவதால், சித்த மருத்துவத்தில் இதற்கு குமரி அல்லது கன்னி என்று பெயர். சித்தர்கள் காலத்தில் பெண்களுக்கு இதை லேகியமாகச் செய்து கொடுத்தார்கள்.
இந்தச் சோற்றுக் கற்றாழை மடலின் முனையில் இருந்து வெளிவரும் பாலை 'மூசாம்பரப் பால்’ என்பார்கள். இந்தப் பாலில் இருந்து சில மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. உரிய வயதை அடைந்த பின்னரும் பூப்பெய்யாத பெண்களுக்கு 'மூசாம்பர மெழுகு’ கொடுத்து வந்தால், ஈஸ்ட்ரோஜன் சரியான அளவில் உற்பத்தியாகி, பூப்பெய்துதல் நடக்கும்.
கற்றாழை ஜெல்லை மோரில் கலந்து குடிப்பதன் மூலம் மஞ்சள் காமாலை கட்டுப்படும். ரத்த அழுத்தம் சீராகும். பித்தம் தணிந்து உஷ்ணம் குறையும். உடலுக்கு நல்ல எதிர்ப்பு சக்தியைக் கொடுப்பதால், இது 'காயகல்பம்’ மருந்தாகவே கருதப்படுகிறது.
கற்றாழைகொண்டு தயாரிக்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களில் ஆன்டி மைக்ரோபியல் (Antimicrobial) ருப்பதால் தலையில் உள்ள பேன், பொடுகு போன்றவை நீங்குகின்றன. கற்றாழை ஜெல்லுடன் சீயக்காய் சேர்த்துத் தலைக்குக் குளிப்பதன் மூலம் முடி வளர்ச்சி அதிகரிக்கும். ஜெல்லை முல்தானி மட்டியுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, முகத்திலும் உடலிலும் பூசிக் குளிக்கலாம்.
இதனால் சருமப் பொலிவும் - இளமையும் கூடும். ஜெல்லுடன் பனை வெல்லம் சேர்த்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால், நரை, திரை, மூப்பு நீங்கி நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ வழி கிடைக்கும். சோற்றுக் கற்றாழையைப் பயன்படுத்தும்போது அதன் மேல்புறம் இருக்கும் மடலை எடுத்துவிட்டு, உள்ளே இருக்கும் 'ஜெல்’லின் கொழகொழப்புத் தன்மை நீங்கும் வரை 10 நிமிடங்கள் நன்றாகக் கழுவிய பின்னரே பயன்படுத்த வேண்டும். சோற்றுக் கற்றாழை, இயற்கை நமக்கு அளித்த ஆரோக்கியத் தொழிற்சாலை.
0 comments:
Post a Comment