உஷ்ணம் போக்கும் கேப்பைக் கூழ் கேள்வரகு – ராகி களி - தமிழர்களின் சிந்தனை களம் உஷ்ணம் போக்கும் கேப்பைக் கூழ் கேள்வரகு – ராகி களி - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Thursday, July 4, 2013

  உஷ்ணம் போக்கும் கேப்பைக் கூழ் கேள்வரகு – ராகி களி

  உஷ்ணம் போக்கும் கேப்பைக் கூழ்
  கேள்வரகு – ராகி களி

  தேவையானப் பொருட்கள் :

  இரண்டு பேருக்கு

  4 டம்ளர்* தண்ணீர்
  2 டம்ளர்* கேள்வரகு – ராகி மாவு

  * 225ml அளவு டம்ளர்(காபி டம்ளர்).

  செய்முறை:

  அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் 4 டம்ளர் தண்ணீரை விட்டு கொதிக்க விடவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் கேள்வரகு மாவை கொஞ்சம் கொஞ்சமாய் கொதிக்கும் நீரில் போட்டுக் கொண்டே கிளறவும்.கட்டி கட்டாமல் கிளறுதல் முக்கியம்.(ரவா கிண்டுதல் போல.)

  பின்னர் மிதமான தீயில் வைத்து வேக விடவும்.மாவு அடியில் ஒட்டாது கிளறிக் கொண்டே இருக்கவும்.மாவு கட்டி கட்டியிருந்தால் உடைத்துவிட்டு கிளறவும்.மாவு கலவை இறுகி களி போல வந்ததும் இறக்கி பரிமாறலாம்.களி சூடாக உண்டால் ருசி அதிகம்.

  சாப்பிடும் முறை:

  களியை சிறு உருண்டையாக உருட்டி தொட்டுக் கொள்ள இருப்பதை தொட்டு அப்படியே விழுங்க வேண்டும் – மென்று சாப்பிட்டால் ருசி இருக்காது.களியில் ஒட்டியிருக்கும் காய் / கறியை வாயில் தனியே பிரித்து மென்று சாப்பிடுதல் தனி சாமர்த்தியம்.

  ஆறிய களியில் தயிர் ஊற்றி சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.சிறு உருண்டையாக பியத்து போட்டு தயிர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு கூழ் போல பிசைந்து சாப்பிடுங்கள்.

  சாப்பிட்டாச்சா?! என்னது களி கிண்டிய பாத்திரத்தை கழுவ போறீங்களா?! இருங்க பாத்திரத்தில இன்னும் களி ஒட்டி இருக்கு பாருங்க , அதுக்கு என்னவா?! அகா என்ன இப்படி கேட்டுடீங்க.அதுல தண்ணீர் ஊற்றி வைங்க காலைல தயிர் ஊற்றி கூழ் செயது சின்ன வெங்காயம் கடிச்சு குடிச்சு பாருங்க.அதன் ருசியே தனி.

  தொட்டுக் கொள்ள :

  கீரை கடைசல் , பாசி பயிறு கடைசல் , கோழி / ஆட்டுக் கறி / மீன் குழம்பு என எல்லாமே – எதுவுமே களிக்கு நல்ல கூட்டணிதான்.

  குறிப்பு :

  1.) பாத்திரம் – குண்டா(வாய் சிறிதான பாத்திரம்) வகையாக இருந்தால் கிளறுதல் எளிது

  2.) களி கிண்ட தட்டையான நீளமான மர கரண்டி கடையில் கிடைக்கும் இல்லாவிட்டால் தோசை திருப்பியை உபயோகிக்கலாம்.

  3.) உருண்டை / மொத்தை பிடக்க தனி உபகரணம் உண்டு. ஆனால் கரண்டியில் எடுத்து பறிமாறலாம்.

  4.) கேள்வரகு – ராகிக்கு பதில் கம்பு / சோள / கோதுமை மாவு சேர்த்தும் களி கிண்டலாம்.

  5.) மாவு கட்டி கட்டாமல் கிளற தெரியாதென்றால் , மாவு போட்டு கிளறும் முன் கொஞ்சம் பழைய சாதம் அல்லது சம்பா ரவையை சேர்த்துக் கொள்ளலாம் – மாவு கட்டி கட்டாமல் கிளற இது உதவும்.(மாவு அளவை ஏற்றாட்போல் குறைத்துக் கொள்ளவும்.)

  6.) சர்க்கரை உள்ளவர்களுக்கு நல்ல உணவு.

  ராகி இட்லி

  தேவை

  புழுங்கலரிசி-2கப்
  ராகி-1கப்
  வெந்தயம்-10கிராம்
  உளுந்து-1கப்
  உப்பு-தேவைக்கேற்ப

  செய்முறை

  அரிசி, வெந்தயம், ராகி இம்மூன்றையும் ஒன்றாக 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
  உளுந்தை ஊற வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். (இதனால் அரைக்கும் போது உளுந்து நன்றாக நுரைத்து வரும்)
  உளுந்தை அரைக்கும் போது வெளியே எடுத்து ஊற வைத்த தண்ணீரையே உபயோகப்படுத்தி நன்றாக நுரைக்க அரைக்கவும்.
  உளுந்து அரைத்து எடுத்ததும் ராகி, அரிசி கலவையை தனியாக கரகரப்பாக அரைக்கவும்.
  கடைசியில் உப்பு, அரைத்த உளுந்து கலந்து எடுத்து மறுநாள் காலை வரை (பொங்கி வருவதற்கு) வைக்கவும்.
  மற்ற இட்லிகளைப் போல ஆவியில் வேக வைக்கவும்.

  ராகி உளுந்து தோசை

  தேவை

  ராகி மாவு-4கப்
  வெள்ளை உளுந்து-1கப்
  உப்பு-தேவைக்கேற்ப
  புளித்த தயிர்-மாவு ஊறவைக்கத் தேவையான அளவு

  செய்முறை

  உளுந்தை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  ராகி மாவை லேசாகப் புளித்த கட்டித் தயிரில் கெட்டியாகக் கரைத்து வைக்கவும்.
  உளுந்தை நுரைக்க அரைத்து கடைசியில் ஊற வைத்த மாவு உப்பு சேர்த்து ஒரு நிமிடம் அரைத்தெடுக்கவும்.
  பெரிய பாத்திரத்தில் எடுத்து, மாவு பொங்கி வருவதற்காக மறுநாள் காலை வரை மூடி வைக்கவும்.
  மறுநாள் நன்றாகக் கலந்து விட்டு மசால் தோசை போல மத்தியில் சட்டினி பூசி, ஏதாவது மசாலா வைத்து பரிமாறலாம்.
  வெங்காயம் தூவி ஊத்தப்பம் போலவும் ஊற்றலாம்.

  ராகி அடை

  தேவை

  ராகி மாவு-2கப்
  சோயா மாவு-1/4கப்
  தண்ணீர்-21/2கப்
  எண்ணெய்-சுடுவதற்கு
  இஞ்சி, பச்சைமிளகாய் விழுது-11/2 டீஸ்பூன்
  உருவிய முருங்கை இலை-1/2கப்
  பொடியாக நறுக்கிய வெங்காயம்-1/2கப்

  செய்முறை

  தண்ணீரை ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி உப்பு சேர்த்து 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
  நன்றாகக் கொதிக்கும் போது, தணலைக் குறைத்து மாவைக் கொட்டி கிளறி உடனே அடுப்பில் இருந்து கீழே இறக்கவும்.
  கை பொறுக்கும் சூடு வரும் போது தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து நன்றாகப் பிசையவும்.
  அதோடு இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, முருங்கை கீரை, வெங்காயம் சேர்த்து நன்றாகக் கலந்து விடவும்.
  ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
  எலுமிச்சையளவு மாவை எடுத்து ஒரு வாழையிலையில் எண்ணெய் தடவி அடை போல் தட்டி கல்லிலே போட்டு இருபுறமும் லேசாக எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

  ராகி பயத்தம் பருப்பு காரப் புட்டு

  தேவை

  ராகி மாவு-1கப்
  பயத்தம் பருப்பு-2டே.ஸ்பூன்
  உப்பு-தேவைக்கேற்ப
  எண்ணெய்-2டீஸ்பூன்
  சிகப்பு மிளகாய்-2
  கடுகு-1/2டீஸ்பூன்
  நறுக்கிய கொத்தமல்லி-1டே.ஸ்பூன

  செய்முறை

  ராகி மாவில் உப்பு சேர்த்து தண்ணீரை கொஞ்சமாகத் தெளித்து பிசறவும்.
  இதை பெரிய கண் உடைய சல்லடையில் சலிக்கவும்.
  குக்கரின் உள்ளே ஒரு கிண்ணத்தில் சிறிது தண்ணீர் விட்டு மேலே மெல்லிய துணியை கட்டி அதில் மாவை பரவலாகப் பரப்பி வைக்கவும். (இட்லி கொப்பரையில் நேரடியாக துணியைக் கட்டியும் வைக்கலாம்)
  ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைக்கவும். வெந்ததும் கைகளால் நன்றாக உதிர்த்து விடவும்.
  பயத்தம் பருப்பை குழையாமல் வேக வைத்து வடித்து தனியே வைக்கவும்.
  ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி கடுகு, சிகப்பு மிளகாய் தாளித்து வேக வைத்து வடித்து தனியே வைக்கவும்.
  ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி கடுகு, சிகப்பு மிளகாய் தாளித்து வேக வைத்த பருப்பு, ராகி மாவை சேர்த்து நன்றாக கிளறி விட்டு எடுக்கவும். கொத்தமல்லி தழையை மேலே பரவலாகத் தூவி பரிமாறவும்.

  ராகி இடியாப்பம்

  தேவை

  ராகி மாவு-1கப்
  கோதுமை மாவு-1கப் (ஆவியில் வேக வைத்தது)
  கடலை மாவு-1/4 கப்
  உப்பு-தேவைக்கேற்ப
  சுடுதண்ணீர்-மாவு பிசைய

  செய்முறை

  கேழ்வரகு மாவையும், கடலை மாவையும் தனித்தனியே லேசாக வறுக்கவும்.
  வறுத்த மாவுகளோடு கோதுமை மாவு, உப்பு சேர்த்துக் கலந்து தேவையான சுடு தண்ர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
  இடியாப்பக் குழலில் சிறிது எண்ணெய் தடவி மாவை அதில் நிரப்பி இடியாப்பத் தட்டில் பிழிந்து ஆவியில் வேக வைக்கவும். (3 நிமிடங்கள்)
  காய்கறி மசாலாவோடு சூடாகப் பரிமாறவும்.

  ராகி ரொட்டி

  தேவை

  ராகி மாவு-2கப்
  நீர்த்த புளிக்கரைசல்-2கப்
  பச்சை மிளகாய்-4
  உப்பு-தேவைக்கேற்ப
  முருங்கைக் கீரை உருவியது-1/2கப்
  கடுகு-1/2டீஸ்பூன்
  உளுத்தம்பருப்பு-1டீஸ்பூன்
  தாளிக்க எண்ணெய்-2டீஸ்பூன்
  எண்ணெய்-சுடுவதற்கு

  செய்முறை

  ஒரு வாணலியில் புளிக் கரைசலை அளந்து ஊற்றி அதில் உப்பு, பச்சை மிளகாய் விழுது சேர்க்கவும்.
  கரைசல் கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி மாவைக் கொட்டி கட்டி தட்டாமல் கிளறவும்.

  மறுபடியும் அடுப்பின் மேல் வைத்து 5 நிமிடங்கள் குறைந்த தணலில் வேக வைக்கவும்.
  அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
  சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்துக் கொட்டவும்.
  முருங்கைக் கீரையை உருவி சேர்க்கவும்.
  ஒரு எலுமிச்சையளவு பிசைந்த மாவை எடுத்துக் கொண்டு எண்ணெய் தடவிய வாழையிலையில் தட்டி சூடான தோசைக்கல்லின் மேல் போடவும்.
  கைகளால் லேசாகத் தூக்கிவிட்டு இலையை எடுத்து விடவும். சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு மூடியால் மூடி சுடவும்.
  இரண்டாவது பக்கமும் திருப்பிப் போட்டு சுட்டு எடுக்கவும்.

  ராகியில் உள்ள சத்துக்கள்

  புஷ்டி-7.1%, கொழுப்பு-1.29%, உலோகம்-2.24%, கால்ஷியம்-0.334%, பாஸ்பரஸ்-0.272%, அயன்-5.38%, விட்டமின் ஏ-70.
  அரிசியில் உள்ள சத்துக்கள்
  புஷ்டி-6.85%, கொழுப்பு-0.55%, உலோகம்-0.05%, கால்ஷியம்-0.007%, பாஸ்பரஸ்-0.108%, அயன்-1.02%, விட்டமின் ஏ-0.

  ஆரோக்கியமான உணவுகளில் இன்றியமையாதது ராகி. சிறு தானிய வகையைச் சேர்ந்த இதனை கேப்பை மற்றும் கேழ்வரகு என்றும் அழைக்கப்படுகிறது. மலைப்பகுதிகளில் தானாக வளரக்கூடிய சிறு தானியங்களில் அற்புதமான சத்துக்கள் மறைந்துள்ளன. சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு போன்ற சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும். இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை. இவை சத்து மிக உறுதியான உடலமைப்பை தந்து, உழைக்கும் மக்களின் உறுதியை பலப்படுத்தும் உணவாகத் திகழ்கிறது.

  இச்சிறுதானியங்கள் அதிகளவு தாதுப் பொருட்களான இரும்பு, மெக்னிசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இத்தானியங்களில் பி வைட்டமின் மற்றும் நைசின் போலிக் ஆசிட் உள்ளிட்ட அமினோ அமிலங்களும் உள்ளன. மேலும், இவை அதிகளவில் உட்கொள்ளும் போது விரைவில் செரிமானமடைவதுடன் மற்ற சத்துக்களையும் உடம்புக்குத் தேவையான அளவில் மாற்றித்தரக்கூடிய சக்தியையும் கொண்டுள்ளன. இதில் உள்ள நார்ச்சத்து இரைப்பை புழுவைத் தடுத்து மலச்சிக்கலை தவிர்க்கும் தன்மை கொண்டவை.

  ஆரோக்கியமான உணவுகளில் இன்றியமையாதது ராகி. சிறு தானிய வகையைச் சேர்ந்த இது கேப்பை மற்றும் கேழ்வரகு என்றும் அழைக்கப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் பிங்கர் மில்லட் என்றும், தமிழில் கிராமங்களில் இப்பயிர் இன்றைக்கும் கேப்பை என்றே அழைக்கப்படுகிறது. இப்பயிர் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் புழக்கத்தில் உள்ளது.

  இந்தியாவில் விளையும் சிறுதானியத்தில் 25 சதவீதம் கேழ்வரகு ஆகும். அரிசி மற்றும் கோதுமையை விட அதிகளவு ஊட்டசத்து நிறைந்தது. இதயநோயுள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், குழந்தைகளுக்கு இது அற்புதமான உணவு.

  உடலுக்கு வலிமை தரும்

  கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் உள்ளன. இதுதவிர பி கரேட்டின், நயசின், ரிபோப்ளேவின் போன்ற சிறிய ஊட்டச்சத்துக்களும், அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன. எனவே, தான் ராகியை பழங்காலந்தொட்டு முளைக்கட்டி சிறுகுழந்தைகளுக்கு வழங்கும் வழக்கம் நமது நாட்டில் கிராமங்களில் நடைமுறையில் உள்ளது. இதுபோன்று ஊட்டச்சத்து மிக்க தானியங்களை உட்கொண்டதாலேயே நமது முன்னோர்கள் உடலுழைப்பாளிகளாகவும் திடகாத்திரமானவர்களாகவும், திகழ்ந்து வந்துள்ளனர்.

  கேப்பையை கூழாக சாப்பிடுவதை விட ரொட்டி போல செய்து சாப்பிடலாம். ஏனெனில் கூழாக உண்ணும் போது சீக்கிரம் ஜீரணம் ஆயிடும். மீண்டும் பசி எடுக்கும் எனவே ரொட்டி ஜீரணம் ஆக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் பசி குறைவா எடுக்கும்.

  உஷ்ணத்தை குறைக்கும்

  ராகி களி உடல் உஷ்ணத்தைக் குறைத்து குடலுக்கு வலிமை தரும். இன்றைக்கும் கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் கிராமங்களில் களி செய்து உண்கின்றனர். ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கேப்பை கூழ் ஊற்றுவது வாடிக்கையாக உள்ளது. இதயநோயுள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், குழந்தைகளுக்கு இது அற்புதமான உணவு. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்து. ராகி மால்ட் செய்தும் சாப்பிடலாம்.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: உஷ்ணம் போக்கும் கேப்பைக் கூழ் கேள்வரகு – ராகி களி Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top