கரப்பான் நோய் பற்றிய தகவல்களும், இயற்கை மருத்துவமும்:- - தமிழர்களின் சிந்தனை களம் கரப்பான் நோய் பற்றிய தகவல்களும், இயற்கை மருத்துவமும்:- - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Sunday, July 7, 2013

    கரப்பான் நோய் பற்றிய தகவல்களும், இயற்கை மருத்துவமும்:-

    கரப்பான் நோய் பற்றிய தகவல்களும், இயற்கை மருத்துவமும்:-

    இன்றைய மக்கள் தொகையில் முப்பது சதவீதத்தினர் ஏதேனும் ஒரு தோல் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்தகைய தோல் நோய்களுள் ஒன்றானதும், அதிக மக்களைத் தாக்குவதானதுமான கரப்பான் நோய் பற்றி தெரிந்து கொள்வோம்.

    கரப்பான் நோய்க்கான காரணங்கள்

    கரப்பான் ஒவ்வாமையால் உருவாவதாகும். இதற்கான காரணத்தைப் பார்த்தால், சுகாதாரமின்மை, உணவு முறை, நோய்க் கிருமிகள் என கூறலாம்.

    பலருக்கு குழந்தைப் பருவம் முதலே இந்த கரப்பான் நோய் இருந்து வருகிறது. இந்நோய் பெற்றோருக்கு இருப்பின் பரம்பரையாக தொடர்ந்து குழந்தைகளுக்கும் ஏற்பட வாய்ப்புண்டு.

    அறிகுறிகள்

    தோல் அரிப்பு மிக அதிகமாகவும், அதிக நாட்களுக்கும் இருக்கும். பெரும்பாலும் இவை முகம், கழுத்து, மார்பு, முழங்கை, முழங்கால் மூட்டுகளில் மடக்கும் பகுதிகளில் அதிகமாக காணப்படும். பாதிக்கப்பட்ட இடங்களில் தோல் வறண்டும், மிகவும் தடித்தும் காணப்படும். கறுத்தும் காணப்படும். ஒரு சிலருக்கு லேசாக வேர்க்குரு போன்ற குருக்கள் காணப்படும். அவை உடைந்துவிட்டால் நீர் போன்று திரவம் கசியும்.

    கரப்பான் நோயின் வகைகள்

    பொதுவாக கரப்பான் நோயை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

    1. வறண்ட கரப்பான்

    2. நீர் வடியும் கரப்பான்

    வயதைப் பொறுத்து இந்நோய் 3 வகையாகவும் பிரிக்கலாம்.

    · கைக்குழந்தைகளுக்கு வருவன

    · குழந்தைகளுக்கு வருவன

    · பெரியவர்களுக்கு வருவன

    கைக்குழந்தைகளுக்கு வருவன

    2 முதல் 3 மாத குழந்தைகளுக்கு இந்நோய் உண்டாகக் கூடும்.

    பொதுவாக குழந்தைகளின் இரு கன்னங்களிலும் உண்டாகும். மெதுவாக மற்ற பகுதிகளுக்கும் பரவ ஆரம்பிக்கும். அரிப்பு அதிகமாக இருக்கும். மருந்தால் இந்நோய் குணமானாலும் வளர்ந்த பிறகு திரும்பவும் இதேமாதிரியோ அல்லது ஆஸ்துமா, அடிக்கடி தும்மல் போன்று வேறுவிதமாகவோ பாதிக்க ஆரம்பிக்கும். இது அலர்ஜி நோயாகவே மாறக்கூடும்.

    குழந்தைகளுக்கு வருவன

    ஒரு வயதைக் கடந்த பிறகு கூட இந்நோய் வரக்கூடும். இதிலும் அரிப்பு ஒன்றே பிரதானமாகக் காணப்படும். பாதிக்கப்பட்ட பகுதி வறண்டும், தடித்தும், கறுத்தும் காணப்படும். முறையான மருத்துவத்தை மேற்கொண்டால் குறையக்கூடும்.

    பெரியவர்களுக்கு வருவன

    பெரும்பாலும் இவர்கள் இவ்வகை கரப்பானால் சிறுவயதில் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். வெகு சிலருக்கே பெரிய வயதில் கால் பகுதிகளில் திடீரென தோன்றக்கூடும். பாதிக்கப்பட்ட இடத்தில் தோலில் மிகுந்த அரிப்பு உண்டாகும். தோல் தடித்தும் கறுத்தும் காணப்படும். பெரும்பாலானவர்களுக்கு வெயில் காலம் வந்ததும் இந்நோய் மாயமாய் மறையும். திரும்பவும் பனிக்காலம் வந்ததும் தோன்றும்.

    பரவும் வகை

    இந்நோய் ஒரு தொற்றுவியாதி அல்ல. ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு தொடுவதன் மூலமோ அல்லது அவர்கள் பயன்படுத்திய பொருட்களின் மூலமோ இது நிச்சயமாக மற்றவர்களுக்குப் பரவாது. இந்நோய் பரம்பரை வழியாக தாய் தந்தையரிடமிருந்து குழந்தை களுக்கும் வரக்கூடும்.

    தடுக்கும் வழி

    இந்நோய் பரம்பரையாக வரக்கூடும் என இருந்தாலும் அல்லது ஒருமுறை வந்து குணமான பின் திரும்ப வராமல் தடுக்க சில தடுப்பு வழிகளை மேற்கொள்ளலாம்.

    · எந்த உணவுப் பொருளை உட்கொள்ளும் போது இதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறதோ அந்த உணவுப் பொருளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

    · நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    · பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு இந்த கரப்பான் வராமல் தடுக்க விரும்பினால் எவ்வளவுக்கெவ்வளவு தாய்ப்பால் கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுத்து வரவேண்டும். ஏனெனில் தாய்ப்பால் அதிகம் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்நோய் வருவதில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

    · சோப்புகள், ஷாம்புகள், அழகு சாதன திரவியங்கள், கிரீம்கள் போன்ற ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மாறாக இயற்கைப் பொருட்களான சீயக்காய், பச்சைப்பயறு, மூலிகை குளியல் தூள் போன்ற பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

    · உடலை இறுக்காத, பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும்.

    செய்யக்கூடாதவை

    · கடும் வெயில், கடும் பனிகளில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

    · வாசனை திரவியங்களை பயன்படுத்தக் கூடாது.

    பாதிக்கப்பட்ட இடங்களில் சொறியக்கூடாது.

    உணவு முறைகள்

    · பச்சைக் காய்கறி, கீரைகள், புளிப்பில்லாத பழங்கள், பொருட்கள் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    · நல்ல தண்ணீர் 3 முதல் 4 லிட்டர் குடிக்க வேண்டும்.

    · புதியதாக தயார் செய்த உணவுகளையே சாப்பிட வேண்டும்.

    உணவில் தவிர்க்க வேண்டியவை

    · பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும்.

    · வேதிப்பொருட்கள் கலந்த உணவுகளை உண்ணக்கூடாது.

    · புளிப்பு மிகுந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

    · அசைவ உணவுகளை குறைத்துக்கொள்வது நல்லது.

    கரப்பன் நோய்க்கு கை வைத்தியம்

    கருக்கிலை சாறு - 16 பங்கு

    மஞ்சள் தூள் - 1 பங்கு

    நல்லெண்ணெய் - 8 பங்கு

    இவற்றை ஒன்று சேர்த்து காய்ச்சி இறக்கி, இந்த எண்ணெயை பாதிக்கப்பட்ட பகுதியில் தினம் இருவேளை தடவி வர கரப்பானின் பாதிப்புகள் குறையும்.

    புதினா இலை சாற்றை கரப்பான் நோயுள்ள தோலின் மீது பூசினால் நோயின் தாக்கம் குறையும்.

    கார்போகரிசியை தூள் செய்து கடுகு எண்ணெயில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வர கரப்பான் நோய் குணமாகும்.

    வேப்பம்பட்டை மற்றும் வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்நீரால் பாதிக்கப்பட்ட இடத்தை கழுவி வர நோயின் தாக்கம் குறையும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: கரப்பான் நோய் பற்றிய தகவல்களும், இயற்கை மருத்துவமும்:- Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top