வெரிகோஸிஸ் வியாதிக்கு குட்பை! - தமிழர்களின் சிந்தனை களம் வெரிகோஸிஸ் வியாதிக்கு குட்பை! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Thursday, March 20, 2014

  வெரிகோஸிஸ் வியாதிக்கு குட்பை!

  வெரிகோஸிஸ் வியாதிக்கு குட்பை!
  வந்தாச்சு துளை மருத்துவம்

  பல உண்மைகளை உரக்கச் சொன்ன 'அங்காடித் தெரு’ படத்தில் ஒரு காட்சி. சென்னையின் பிரசித்தியான ஜவுளிக் கடை வாசலில் மயங்கிக்கிடக்கும் ஒருவர் பார்க்கச் சகிக்க முடியாத தன் கால்களைக் காட்டி, ''நாள் முழுக்க நின்னுக்கிட்டே வேலை பார்ப்பேன். அதனால்தான் கால் இப்படி ஆயிடிச்சு. ஆஸ்பத்திரிக்குப் போனேன். 'வெரிகோஸிஸ் வெயின்’னு சொன்னாங்க!'' என்பார் பரிதாபமாக. வெரிகோஸிஸ் வெயின் மட்டும் அல்ல... கால் வலி, கால் சோர்வு, கால்களின் ரத்தக் குழாய் சுருங்கிப்போதல் உள்ளிட்ட பல பிரச்னைகளால், இந்தியாவில் கிட்டத்தட்ட 15 சதவிகிதம் பேர் இத்தகைய துயரங்களுக்கு ஆளாகிறார்கள்.
  பார்க்கவே பயமுறுத்தும் 'வெரிகோஸிஸ் வெயின்’ நோயைக் குணப்படுத்த இப்போது சுலபமான தொழில்நுட்பம் வந்துவிட்டது.
  வீனஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் தலைவரும், மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் ரத்த நாளம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் எஸ்.சரவணன் இது குறித்துப் பேசுகிறார்.
  ''நம் உடல் முழுக்க ரத்தக் குழாய்கள் உள்ளன. இவை இதயத்தில் இருந்து வரும் நல்ல ரத்தத்தை உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும், கெட்ட ரத்தத்தை இதயத்துக்கும் கொண்டுசெல்கின்றன. கெட்ட ரத்தக் குழாயில் சூப்பர்ஃபீஷியல், டீப் என இரண்டு வகைகள் உள்ளன. பார்த்தாலே தெரியும் வகையில் இருப்பது சூப்பர்ஃபீஷியல். தசைக்கு அடியில் இருப்பது டீப் வெயின். இந்த சூப்பர்ஃபீஷியல் ரத்தக் குழாய்களுக்கு மூட்டுக்கு கீழ் இரண்டு இடங்களிலும், அடிவயிற்றிலும், மூட்டுக்குப் பின்புறமும் வால்வுகள் உள்ளன. ரத்தம் மேலே செல்லும்போது இந்த வால்வுகள் திறந்து ரத்தம் பாய அனுமதிக்கும். ரத்தம் கீழே இறங்க முற்பட்டால், மூடிக்கொள்ளும். இந்த வால்வுகளின் செயல்பாடு பாதிக்கப்படும்போதுதான், வெரிகோஸிஸ் வெயின் நோய் ஏற்படுகிறது.
  இந்த வால்வு மரபியல் ரீதியாகப் பாதிக்கப்படலாம். நீண்ட நேரம் நிற்பவர்களுக்கும் இந்த பாதிப்பு வரலாம். முதன் முறையாக கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு இந்த வால்வு வீக் ஆக வாய்ப்பு அதிகம். கர்ப்பமாகும்போது, உடலில் அதிக ஹார்மோன் சுரக்கும். இதனால், வால்வுகள் தளர்வுக்கு உள்ளாகும். டெலிவரிக்குப் பிறகு, அது குறைந்துவிடும். இரண்டாவது, மூன்றாவது முறை கர்ப்பம் ஆகும்போது, இந்தப் பிரச்னை அதிகம் வருகிறது.
  வெரிகோஸிஸ் வந்தால், காலில் அரிப்பு, கால் வலி, வீக்கம் இருக்கும். கணுக்காலின் உள் பகுதியில் புண் வரும். கெட்ட ரத்தம் கீழேயே தங்குவதால், அந்த இடத்தில் ஹீமோகுளோபின் வெளியே வந்து, புண் உள்ள இடத்தின் தோலில் படியும். ஹீமோகுளோபினில் இரும்புச் சத்து உள்ளது. அதனால், இந்த இடம் கறுப்பாக மாறிவிடும். சம்பந்தப்பட்ட இடத்தில் அரிப்பு ஏற்படும். சொறிந்தால், புண் ஏற்படும். அந்த புண் ஆறுவது மிகக் கடினம். புண் பெரிதாகி, எலும்பு வரை ஊடுருவி நோய்த் தொற்று உண்டாகும். சில நேரம், காலையே எடுக்கவேண்டிய அளவுக்கு இக்கட்டு உருவாகும். கால் போவது மட்டும் அல்ல, இந்தத் தொற்று, சிறுநீரகம், கல்லீரல்போன்ற மற்ற உறுப்புகளையும் தாக்க வாய்ப்பு உள்ளது. மேலும், கெட்ட ரத்தம் உறைந்துபோய், உள் ரத்தக் குழாய் வழியாக இதயத்தை அடைந்தால், உயிருக்கேகூட ஆபத்து நிகழலாம்.
  100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பிரச்னைக்கு ஓப்பன் சர்ஜரிதான் தீர்வாக இருந்தது. அதாவது வால்வுகள் உள்ள பகுதியில் ஓப்பன் செய்து வால்வுகளை அகற்றிவிடுவோம். இதனால், பாதிக்கப்பட்ட குழாய் வழியாக ரத்தம் செல்வது தடுக்கப்படும். ஆனால், இந்த அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வரவே பல நாட்கள் ஆகும்.
  இப்போது, சாவித் துவார அறுவை சிகிச்சைபோன்று லேசர் மற்றும் ரேடியோ ஃபிரீக்வன்ஸி அபலேஷன், ஸ்க்லிரோதெரபி போன்ற புதிய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. இதன்படி, நோயாளியின் மூட்டுக்கும் கணுக்காலுக்கும் நடுவே ஊசி போடுவதுபோன்று துளையிட்டு, அதன் வழியே ப்ரோபை (கம்பி) உள்ளே செலுத்தி, அடிவயிற்றில் உள்ள பழுதடைந்த வால்வு மற்றும் ரத்தக் குழாயை வெப்பம் செலுத்தி மூடிவிடுவோம். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக கணுக்கால் வரை உள்ள ரத்தக் குழாயும் மூடப்படும். இதற்கு லேசர் அல்லது ரேடியோ ஃபிரீக்வன்ஸியைப் பயன்படுத்துவோம்.
  கெட்ட ரத்தம் ஆழ் ரத்தக் குழாய் வழியாக இதயத்துக்குப் பாயும் செயல்பாட்டை, 30 முதல் 40 நிமிடங்களில் முடித்துவிடுவோம். இதில் ரெக்கவரி பீரியட் என்பது 24 மணி நேரம்தான். இரண்டு நாட்களில் வேலைக்குச் செல்ல முடியும். சிலர் தங்கள் காலில் ரத்தக் குழாய் கறுப்பாகப் புடைத்துக்கொண்டு தெரிவதே அசிங்கமாக இருப்பதாக நினைப்பார்கள். அவர்களுக்கு இன்ஜெக்ஷன் மூலம் மருந்து செலுத்தியே, அந்த ரத்தக் குழாயை அடைத்துவிடலாம். இதை ஸ்க்லிரோதெரபி என்போம்.
  வெரிகோஸிஸ் வெயின் பிரச்னையை ஆரம்பத்தில் கண்டறிந்தால், மருந்து மாத்திரை கொடுத்தே குணப்படுத்தலாம். இல்லை என்றால், அறுவை சிகிச்சைதான் வழி. கம்ப்ரஷன் ஸ்டாக்கிங் என்று ஒரு சாதனம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. நோயின் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள், இதைக் காலில் அணிவதன் மூலம் நோய் தீவிரமாவதைத் தடுக்கலாம். ஆனால், டாக்டரின் ஆலோசனை பெற்றே இதனை அணிய வேண்டும்!'' என்கிறார்.

  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: வெரிகோஸிஸ் வியாதிக்கு குட்பை! Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top