கொலஸ்டரோல் அளவு இரத்தத்தில்குறைவதும் உண்டா? - தமிழர்களின் சிந்தனை களம் கொலஸ்டரோல் அளவு இரத்தத்தில்குறைவதும் உண்டா? - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Monday, June 17, 2013

    கொலஸ்டரோல் அளவு இரத்தத்தில்குறைவதும் உண்டா?

    மருந்தினாலா நோயினாலா?
    இரத்தத்தில் கொலஸ்டரோல் அளவு குறைவது 


    'எனக்கு கொலஸ்டரோல் அதிகம் என மருத்துவர் சொல்கிறார்' என்று சொல்லும்போதே அவர் முகத்தில் பெருமிதம் கண்சிமிட்டி மறைந்தது போல எனக்குப் பட்டது. ஆம் சிலருக்கு அது சமூக அந்தஸ்தின் சின்னம் போலாகிவிட்டது.



    மாரடைப்பு பக்கவாதம் போன்றவை பின்னர் அதன் காரணமாக விளையும்போதுதான் அதன் பாதிப்பு அவர்களுக்குப் புரியும்.

    ஆனால் இப்பொழுதெல்லாம் யாரைப் பார்த்தாலும் கொலஸ்டரோல் பிரச்சனை என்கிறார்கள். கோயில் ஐயர் முதல் கசாப்புக் கடைக்காரன் வரை எல்லோரையும் பீடிக்கவே செய்கிறது. சொகுசு வாழ்க்கையும் தவறான உணவு முறைகளுமே முக்கிய காரணம் என்றபோதும் பரம்பரைக் காரணிகளும் இல்லாமலில்லை.

    அது சரி! கொலஸ்டரோல் அதிகரித்தால் நோய், சரியான பிரச்சனையாகும், உணவுகட்டுப்பாடு, உடற் பயிற்சி, மருந்துகள் நாளாந்தம் அவசியமாகும்.
    அதேபோல கொலஸ்டரோல் குறையும் பிரச்சனையும் இருக்கிறதா? அது நோயா? மருந்துகள் தேவைப்படுமா?

    மருந்துகளால் கொலஸ்டரோல் அளவு குறைதல்

     'என்ரை கொலஸ்டரோல் குறைஞ்சு போச்சு மருந்தை நிப்பாட்டிப் போட்டன்' எனக் கையில் ரிப்போட்டும் முகத்தில் ஆனந்த தாண்டவமுமாக பலர் வருவார்கள். கொலஸ்டரோலுக்கு மருந்து எடுக்கும் நோயாளிகள் அவர்கள்.


    ஆனால் அவ்வாறு நிறுத்துவது தவறு. கொலஸ்டரோலைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவே மருந்து தருகிறார்கள். குருதியில் கொலஸ்டரோல் அளவு குறைவதுதான் இருதய மற்றும் குருதிக் குழாய் நோய்களைத் தடுப்பதற்கான வழியாகும்.

    மருந்து சாப்பிடுவதால் கொலஸ்டரோல் அளவில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மருந்தின் அளவைக் குறைப்பதோ கூட்டுவதோ மருத்துவரின் வேலை. எனவே கொலஸ்டரோல் அளவு குருதியில் குறைஞ்சாலும் நீங்களாக நிறுத்த வேண்டாம். மருத்துவரின் எண்ணப்படி நடவுங்கள்.

    மருந்து இல்லாமலும் கொலஸ்டரோல் குறைதல்


    மருந்து இல்லாமலும் குருதியில் கொலஸ்டரோல் அளவு குறையுமா? 
    குறையலாம்!. குருதியில் கொலஸ்டரோல் அளவு மிகவும் குறைவதை 
    Hypolipidemia என்பார்கள். சாதாரண பாசையில் லோ கொலஸ்டரோல் 
    (Low Cholesterol) என்பார்கள். ஆனால் அடிக்கடி காணப்படும் பிரச்சனை அல்ல என்பதையும் குறிப்பிட வேண்டும்.

    இரண்டு வகைகள்

    மருந்துகள் இல்லாமலே குருதியில் கொலஸ்டரோல் குறைவது இரண்டு விதங்களிலாகும்.

    1. சிலருக்கு இயல்பாகவே குருதியில் கொலஸ்டரோல் குறைவாக இருக்கும். வேறு நோய்களோ அல்லது மருந்துகளோ காரணமாக இருக்காது. அதற்குக் காரணம் அவரது குடும்பத்தினரிடையே அது பொதுவாக இருப்பதாகும். பரம்பரையில் அவ்வாறிருந்தால் சிகிச்சை எதுவும் தேவைப்படாது.
    2. வேறு பல நோய்கள் காரணமாகவும் சிலரது கொலஸ்டரோல் அளவு குறைவதுண்டு.

    காரணங்கள் எவை?


    தைரொயிட் சுரப்பி அதீதமாக வேலை செய்தால் (hyperthyroidism) தைரொக்சின் அளவு குருதியில் அதிகரித்திருக்கும். இது கொலஸ்டரோல் அளவைக் குறைக்கும். இதற்கு மாறாக தைரொக்சின் அளவு குருதியில் குறைந்திருந்தால் (hypothyroidism) கொலஸ்டரோல் அளவு அதிகரிக்கும்.

    அதேபோல சில ஈரல் நோய்களும் இரத்தத்தில் கொலஸ்டரோல் அளவைக் குறைக்கும்.

    குருதியில் தாதுப்பொருளான மக்னீசியத்தின் அளவு குறைவதாலும் இரத்தத்தில் கொலஸ்டரோல் அளவு குறையலாம்.

    பல்வேறு நோய்கள் உடலைத் தாக்கும்போது பசி குறைவதுண்டு. அந்நிலையில் அவரால் போதியளவு போசாக்கான உணவுகளை உண்ண முடியாத நிலை ஏற்படும். அதன் காரணமாகவும் இரத்தத்தில் கொலஸ்டரோல் அளவு குறையலாம்.

    உதாரணமாகப் புற்றுநோய்கள் அதிலும் முக்கியமாக உணவுக் கால்வாயோடு தொடர்புடைய புற்றுநோய்கள் பசியைக் கடுமையாகக் குறைக்கும். அதேபோல சுவாசப் பையோடு தொடர்புடைய நோய்களும் ஹெப்பரைரிஸ் போன்ற நோய்களும் பசியைக் குறைக்கும்.

    பலவிதமான தொற்று நோய்கள் பசியைக் குறைக்குமானாலும் அவை குறுகிய காலம் மட்டுமே நீடிக்கும் என்பதால் கொலஸ்டரோலைக் குறைக்கும் என எதிர்பாரக்க முடியாது. T.B எனப்படும் சயரோக நோயும் பசியை அதிகம் குறைக்கின்ற மற்றொரு நோயாகும். 

    பசி குறைவு என்றவுடன் 'எனக்கும் பசி குறைவுதான்' என்கிறீர்களா. சாதாரண பசிக் குறைவைச் சொல்லவில்லை. அதீதமான பசிகுறைவு. வழமைபோல உணவு உட்கொள்ள முடியாது எடை குறைந்து உடல் நலியும் நிலையில் அவ்வாறு கொலஸ்டரோல் குறையும். 

    இவற்றைத் தவிர மனவிரக்தி, பதகளிப்பு நோய், பக்கவாதம், பிறவி அங்கயீனக் குறைபாடுகள் உள்ளோருக்கும் போசாக்குக் குறைபாட்டால் கொலஸ்டரோல் குறைவதுண்டு.

    மது மற்றும் ஏனைய போதைப் பொருட்களும் பொதுவாக உணவில் நாட்டமின்மையைக் கொண்டுவரும். புகைத்தலும் அவ்வாறே செய்கிறது.

    அறிகுறிகள்

    எந்த அறிகுறிகளையும் வைத்து இவருக்கு கொலஸ்டரோல் இருக்கிறதா என ஐயமுற முடியாது. தற்செயலாகவே கண்டறியப்படுகிறது. வழமையான இரத்தப் பரிசோதனைகள் செய்யும்போதே தெரியவரும். அதாவது கொலஸ்டரோல் இருக்கிறதா எனப் பரிசோதனை (Lipid Profile) செய்யும்போது கண்டறியப்படுகிறது. 

    சிகிச்சை

    குறைந்த கொலஸ்டரோலை அதிகரிப்பதற்கென தனியான மருந்து மாத்திரைகளோ சிகிச்சை முறைகளோ கிடையாது. அது ஏன் ஏற்பட்டது என அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து அதைச் சரிசெய்வதே சிகிச்சை முறையாகும்.

    இருக்க வேண்டிய அளவு


    நீங்கள் கொலஸ்டரோலுக்கு மருந்து சாப்பிடுபவராயின் உங்களது கொலஸ்டரோல் அளவுகள் எந்தளவில் இருக்க வேண்டும். கீழே உள்ள பட்டியலைப் பாருங்கள்


    •  முழுமையான கொலஸ்டரோல்     200 ற்கு குறைவாக   
    •  LDL  கொலஸ்டரோல்    130 ற்கு குறைவாக, நீரிழிவு மற்றும் இருதய நோய் வர வாய்ப்பு உள்ளவர்களுக்கு        100 ற்கு குறைவாக       
    • HDL  கொலஸ்டரோல்  ஆண்களில் 40 பெண்களில் 50 ற்கு மேல்    
    • ரைகிளிசரைட் 150 ற்கு குறைவாக



    DR.M.K.முருகானந்தன்
    M.B.B.S(Cey), D.F.M(SL), F.C.G.P(SL)
    குடும்ப வைத்திய நிபுணர்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: கொலஸ்டரோல் அளவு இரத்தத்தில்குறைவதும் உண்டா? Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top