உயிர்ப்பான நிலையிலுள்ள காசநோயானது தீவிர கிருமித்தொற்று நிலையாகும். இது பொதுவாக நுரையீரல்களைப் பாதிக்கின்றது. உயிர்ப்பான காசநோயானது எவரிலும் ஏற்படலாம் ஆயின் முன்னரே உடலாரோக்கியம் குன்றிய நிலையில் அல்லது நிர்ப்பீடனத்தொகுதி பலவீனமாக காணப்படும் போது ஏற்படும் சந்தர்ப்பங்கள் உயர்வாகும். சிகிச்சை மூலம் அநேகர் குணமடைகின்றனர். சிகிச்சையற்ற போது காச நோயானது மோசமடைந்து செல்வதுடன் மரணமும் சம்பவிக்கலாம். இதற்கு நீண்டகால சிகிச்சை (பொதுவாக ஆறு மாதங்கள்) அவசியமாகும். மற்றும் பூரண குணமடைவதற்கு சரியாக சிகிச்சையினை பெற்றுக் கொள்ளுதல் அவசியமாகும். ஏனைய வீட்டு அங்கத்தவர்கள் மற்றும் நெருங்கிய தொடர்பை உடையவர்களில் காசநோய்ப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவது அவசியமாகும், விசேடமாக குழந்தைகள் மற்றும் சிறுவர்களில்.
காச நோய் என்றால் என்ன?
காச நோய் என்பது ஒரு பக்றீரியா கிருமித்தொற்று ஆகும். இது Mycobacterium tuberculosis எனும் பக்றீரியாவினால் ஏற்படுத்தப்படுகிறது. இது பொதுவாக நுரையீரலைப் பாதிக்கின்றது, ஆயின் உடலின் எப்பகுதியையும் இது பாதிக்கக் கூடியது.
காச நோய் எவ்வாறு ஏற்படுகிற்து?
அநேக நோயாளிகளில் முதலில் நுரையீரலை பாதிக்கின்றது. உயிர்ப்பான காசநோய் உடையவர்களால் இருமும் போது அல்லது தும்மும் போது காசநோய் பக்றீரியாவானது வளியினுள் விடப்படுகிறது. இவ் பக்றீரியாவானது மிகச் சிறிய நீர்த்துளிகளாக வளியிலே காவப்படுகிறது. நீங்கள் சிறிதளவு பக்றீரியாவினை உட்சுவாசிக்கும் போது அவை உங்களது நுரையீரலில் பெருக்கத்துக்கு உட்படுகின்றன. அங்கு பின்னர் மூன்று வழிகளில் நோயானது செல்லமுடியும்.
காசநோயின் போக்கு
மூன்று வழிகளில் நோயானது செல்லமுடியும்.
குணங்குறிகளற்ற இலேசான கிருமித் தொற்று – அநேகரில் ஏற்படுகிறது.
அநேக சிறந்த உடல்ஆரோக்கியத்துடன் காணப்படுபவர்களால் காசநோய் பக்றீரியாவானது உட்சுவாசிக்கப்படும் போது உயிர்ப்பான காசநோய் ஏற்படுத்தப்படுவதில்லை. உட்சுவாசிக்கப்படும் பக்றீரியாவானது நுரையீரலில் பெருக்கமடைய ஆரம்பிக்கிறது. இது நிர்ப்பீடனத் தொகுதியை செயற்படத் தூண்டுகின்றது. காசநோய் பக்ரீரியாக்கள் நிர்ப்பீடனத் தொகுதியினால் (வெண் குழியங்கள்) அழிக்கப்படுகின்றன அல்லது உயிர்ப்பற்றதாக்கப்படுகின்றன். இவர்களில் சில காலங்களுக்கு இலேசான குணங்குறிகள் காணப்படலாம் அல்லது குணங்குறிகள் ஏற்படாது நோயானது நிறுத்தப்பட்டிருக்கலாம்.
நீங்கள் பொதுவாக இவ்வாறான இலேசான கிருமித்தொற்று ஏற்பட்டமையை அறிந்திருக்கமாட்டீர்கள். நெஞ்சுப்பகுதிக்குரிய எக்ஸ் கதிர்ப் பரிசோதனையிலே சிறிய தழும்புகள் அவதானிக்கப்படலாம். இது பக்ரீரியாவிற்கும் நிர்ப்பீடனத் தொகுதிக்குமிடையில் நடைபெற்ற தாக்கத்துகுரிய சான்றாகும்.
இவ்வாறான கிருமித் தொற்று மிகப் பொதுவானது. எனவே அனேக காசநோய் பக்றீரியாவை உட்சுவாசிப்பவர்களில் குணங்குறிகள் ஏற்படுவதில்லை மற்றும் கிருமித் தொற்றானது நிர்ப்பீடனத் தொகுதியினால் நிறுத்தப்படுகிறது.
காசநோயின் போக்கு
மீள் உயிர்ப்பாக்கப்பட்ட (இரண்டாம் நிலையான) கிருமித்தொற்றுக்கள் காரணமான உயிர்ப்பான காசநோய்.
சிலரில் இலேசான காசநோய் கிருமித்தொற்று ஏற்பட்டு நிறுத்தப்பட்டு மாதங்கள் அல்லது வருடங்களின் பின் உயிர்ப்பான காசநோய் ஏற்படுகிறது. ஆரம்பத்தில் நிர்ப்பீனத்தொகுதியானது பக்றீரியா பெருக்கமடைவதைத் தடுக்கின்றது. ஆயின் பக்றீரியாக்கள் முழுமையாக அழிக்கப்படுவதில்லை. சில பக்றீரியாக்கள் இலேசான கிருமித்தொற்று ஏற்பட்ட காயங்களினுள் மறைக்கப்பட்டு காணப்படலாம். இவை பெருக்கமடைவது நிணநீர்த் தொகுதியினால் தடுக்கப்படுகிறது. இவை எப்பாதிப்பினையும் ஏற்படுத்தாது உறங்கு நிலையில் பல வருடங்கள் காணப்படக் கூடியன. உறங்கு நிலையிலுள்ள பக்றீரியாவானது உடலின் நிர்ப்பீடனத் தொகுதியானது சில காரணங்களால் பலவீனமடையும் போது பெருக்கமடைய ஆரம்பித்து உயிர்ப்பான காசநோயினை ஏற்படுத்துகிறது.
பலவீனமான நிர்ப்பீடனத்தொகுதி மற்றும் மீள் உயிர்ப்பாக்கப்பட்ட காசநோயானது பின்வரும் சந்தர்ப்பங்களில் ஏற்படுவது உயர்வாகும்:
வயது முதிர்ந்த அல்லது உடற் பலவீனமானோர்
போசனைக் குறைபாடுடையோர்
நீரிழிவுநோய் உடையவர்கள்
ஸ்டீரொயிட் அல்லது நிர்ப்பீடனத்துக்கெதிரான மருந்துகளை பயன்படுத்துவோர்.
சிறுநீரக செயலிழப்புடன் காணப்படுபவர்கள்
மதுபானத்திற்கு அடிமையானோர்
எயிட்ஸ் நோய் உடையவர்கள்
கிருமித் தொற்றானது உயிர்ப்பான காசநோயாக மோசமடைந்து செல்லல் – சிலரில் ஏற்படுகிறது.
குணங்குறிகளுடன் கூடிய உயிர்ப்பான காசநோயானது காசநோய் பறீரியாவை உட்சுவாசிக்கும் சிலரில் ஏற்படுகிறது. இவர்களில் நிர்ப்பீடனத்தொகுதியானது பக்றீரியாவுடன் தாக்கமடைந்து வெல்ல முடியாமையினால் இதனை நிறுத்த முடிவதில்லை. காசநோய் பக்றீரியாவானது மேலும் பெருக்கமடைந்து நுரையீரலின் ஏனைய பகுதிகளுக்கும் உடலின் ஏனைய பகுதிகளுக்கும் பரவலடைகிறது. உயிர்ப்பான காசநோயின் குணங்குறிகள் பக்றீரியா உட்சுவாசிக்கப்பட்டு 6-8 வாரங்களின் பின்னர் தோன்றுகின்றன.
காச நோய் கிருமித்தொற்றானது உயிர்ப்பான நோயாக எவரிலும் ஏற்படலாம். ஆயின் முன்னரே உடலாரோக்கியம் குன்றிய நிலையில் இருப்பவர்களில் ஏற்படும் சந்தர்ப்பங்கள் உயர்வாகும். உ-ம் போசணைக் குறைபாடுடன் காணப்படும் சிறுவர்கள் போன்றார். புதிதாய் பிறந்த குழந்தைகளிலும் உயிர்ப்பான காச நோய் ஏற்படும் ஆபத்து உயர்வாகும்.
காசநோயின் தொற்றும் தன்மை எவ்வாறானது?
நுரையீரலில் உயிர்ப்பான காசநோயுடைய ஒருவர் இருமுதல் மற்றும் தும்முதலின் போது வெளிவிடப்படும் காசநோய் பக்றீரியாவானது ஏனையவர்களை தொற்றுக்குள்ளாக்கக் கூடியது.
காச நோயினை பெற்றுக் கொள்வதற்கு பொதுவாக உயிர்ப்பான நுரையீரல் காசநோயுடைய ஒருவருடன் நெருக்கமான மற்றும் நீண்டகால தொடர்பு அவசியமாகும். எனவே ஒரே வீட்டில் அல்லது குடும்பத்தில் உள்ளவர்களுக்கே கிருமித் தொற்றுக்குட்படும் வாய்ப்புக்கள் அதிகமாகும். எனவே ஒருவரில் காசநோயானது நோய் நிர்ணயம் செய்யப்படும் போது ஏனைய நெருங்கிய தொடர்புடையவர்களில் காச நோய் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
காசநோயின் பரம்பல் எத்தகையது?
காசநோயானது வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் பொதுவானது. ஏனைய கிருமித் தொற்றுக்களுடன் ஒப்பிடுகையில் காசநோய் காரணமாக அதிகளவு இறப்பு ஏற்படுகிறது (ஆண்டு தோறும் மூன்று மில்லியன் அளவில்). உலகளாவிய ரீதியில் காசநோய்க்குரிய பிரதான காரணியாக காணப்படுவது: போசணைக் குறைபாடு, மோசமான குடியிருப்புக்கள், பொதுவான உடலாரோக்கியம் குன்றிய தன்மை, போதுமான வைத்திய வசதியின்மை மற்றும் எயிட்ஸ் நோய் என்பன.
காசநோய் யாரில் ஏற்படுகிறது?
காச நோய் எவரிலும் ஏற்படலாம். பின்வரும் சந்தர்ப்பங்களில் காசநோய் ஏற்படும் ஆபத்து உயர்வாகும்.
நுரையீரலில் உயிர்ப்பான காசநோயுடையவர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருத்தல். ( ஒரே வீட்டில் வசித்தல், அல்லது அந்நபருடன் அதிகளவு நேரத்தினை செலவிடல்)
சுற்றாடல் மற்றும் ஏழ்மைநிலை. வீடற்றோர், சிறைக் கைதிகள் மற்றும் பல பிற்போக்கான பிரதேசங்களில் வாழ்வோரில் காச நோய் அதிகளவில் காணப்படுகிரது.
நிர்ப்பீடனத்தொகுதி பலவீனமாக இருத்தல் உ-ம் எச் ஐ வி கிருமித்தொற்று, நிர்ப்பீடனத்தைக் குறைக்கின்ற மருந்து வகைகள், மதுபான பாவனை, போதை மருந்துகளின் பாவனை போன்றன.
போசணைக் குறைபாடு : போசனைக் குறைபாடு மற்றும் விற்றமின் டி குறைபாடு காச நோயுடன் தொடர்புபட்டுள்ளது
: குழந்தைகள், சிறுவர்கள், மற்றும் வயது முதிர்ந்தோரில் காசநோய் ஏற்படும் ஆபத்து உயர்வாகும்.
உயிர்ப்பான காசநோயின் குணங்குறிகள் எவை?
மூன்று வாரங்கட்கு மேற்பட்ட இருமல் அநேகமாக ஆரம்ப அறிகுறியாகும். இது வறண்ட அரிப்பூட்டுகின்ற இருமலாக ஆரம்பிக்க முடியும். இது மாதங்கள் வரையில் நீடித்து மோசமான நிலையினை அடைகிறது. காலஞ் செல்லச் செல்ல சளியுடன் கூடிய இருமல் உருவாகின்றது. இதனால் இருமும் போது அதிகளவு சளி வெளியேற்றப்படும். அது இரதக்கசிவுடன் காணப்படலாம்.
ஏனைய பொதுவான குணங்குறிகள்
காய்ச்சல், அதிகரித்த வியர்வை, உடல் அசதி, உடல் நிறை குறைவடைதல் , நெஞ்சு வலி, மற்றும் பசியின்மை என்பன. கிருமித் தொற்று தீவிரமடைந்து நுரையீரல் பாதிக்கப்படும் போது நோயாளிக்கு சுவாச சிரமம் ஏற்படுகிறது. சிகிச்சை வழங்கப்படாத விடத்து பல சிக்கல்கள் உருவாகின்றன. நுரையீரலிற்கும் நெஞ்சறை சுவருக்குமிடையிலுள்ள புடை மென்சவ்வுகளுக் கிடையில் திரவம் சேகரிக்கப்படுதல். இதனால் சுவாச சிரமம் மேலும் மோசமடைகிறது. காச நோயானது நுரையீரலிலுள்ள குருதிக் கலன்களை பாதிக்கையில் இருமும்போது குருதி வெளியேற்றப்படுகிறது.
காசநோய் கிருமித்தொற்றானது சில வேளைகளில் குருதிச் சுற்றோட்டத்தொகுதி மற்றும் நிர்ப்பீடனத்தொகுதிக்குள் பரவும் போது உடலின் ஏனைய பகுதிகளிலும் கிருமித் தொற்று ஏற்படுகிறது. உடலின் எப்பகுதி பாதிக்கப்படுகிறது என்பதற்கிணங்க பல்வேறு குணங்குறிகள் உருவாகின்றன.
நிணநீர்க் கணுக்கள் வீக்கமடைதல் – உடலின் எப் பகுதியிலுமுள்ள நிணநீர்க் கணுக்கள் வீக்கமடையலாம். கழுத்து, தோள் மூட்டின் உட்பகுதி மற்றும் இடுப்பு தொடை சந்திப்புலுள்ள நிணநீர் கணுக்களை தொட்டுணர முடியும்.
உணவுக் கால்வாய் மற்றும் வயிறு – காசநோயானது வயிற்று வலி அல்லது வீக்கத்தினை ஏற்படுத்துகிறது. அல்லது போதிய சமிபாடின்றி வயிற்றொட்டம் மற்றும் உடல் நிறை குறைவடைதல் போன்றவை ஏற்படுகிறது.
என்பு மற்றும் மூட்டுகள் - காச நோயானது என்பு அல்லது மூட்டுக்களை பாதிப்பதன் காரணமாக என்பு நோ (உ-ம் முள்ளந்தண்டு) மற்றும் மூட்டு வலி அல்லது வீக்கம் ஏற்படுகிறது.
இதயம் – காச நோய் சில வேளைகளில் இதயத்தினை சூழ அழற்சியினை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக நெஞ்சு வலி அல்லது சுவாச சிரமம் என்பன ஏற்படுகின்றன.
சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப்பை - இவை கிருமித் தொற்றுக்குட்படும் போது இடுப்பின் பின் பகுதியில் இரு கரைகளிலும் வலி, சிறுநீர் கழிக்கும்போது வலி என்பன ஏற்படுகின்றன.
மூளை – காசநோய் காரணமாக மூளைய மென்சவ்வழற்சி ஏற்படலாம். இதனால் தலைவலி, அருவருப்பு, வாந்தி, வலிப்பு, நித்திரை ஏற்படுவது போன்ற உணர்வு மற்றும் நடத்தை மாற்றங்கள் என்பன.
தோல் – காசநோய் காரணமாக தோலில் தழும்புகள் ”எரித்தீமா நோடோசம்” எனும் சிவந்த முடிச்சுப் போன்றவை கால்களில் ஏற்படும் தழும்புகளாகும். லூபஸ்வல்காரிஸ் எனும் கட்டிகள் அல்லது புண்கள்.
உடலின் ஏனைய பகுதிகளுகளுக்குப் பரவலடைதல். இது மிலியரி காச நோய் எனப்படும். இது நுரையீரல், என்புகள், ஈரல் மற்றும் கண்கள் தோல் என்பவற்றைப் பாதிக்கிறது.
காசநோயை நோய் நிர்ணயம் செய்தல்
சில வேளைகளில் காசநோயினை நேரடியாகவே நோய் நிர்ணயம் செய்ய முடியும். ஆயின் சில சந்தர்ப்பங்களில் இது கடினமானது. பொதுவாக குணங்குறிகளை அவதானிப்பதன் மூலமும் பரிசோதனை பெறுபேறுகளுக்கிணங்கவும் நோய் நிர்ணயம் செய்யப்படும். நெஞ்சுப் பகுதிக்குரிய எக்ஸ் கதிர்ப்பரிசோதனை மற்றும் மான்ரொக்ஸ் எனும் பரிசோதனை, சளிப் பரிசோதனை என்பவற்றுடன் சோதனைகள் ஆரம்பிக்கப்படும்.
நெஞ்சுப் பகுதிக்குரிய எக்ஸ் கதிர்ப் பரிசோதனை.
எகஸ் கதிர்ப் பரிசோதனையிலே உயிர்ப்பான நுரையீரல் காசநோயினை அவதானிக்கமுடியும். இது குணமடைந்த அல்லது உயிர்ப்பற்ற காசநோயினையும் காண்பிக்கக் கூடியது.
மான்டோக்ஸ் சோதனை அல்லது ரியூபகியீலின் சோதனை
இச்சோதனை காசநோய் பக்றீரியாவுடன் எப்போதாவது தொடுகைக்கு உட்பட்டமையை காட்டுகின்றது. ஆயின் இது தற்போதைய உயிர்ப்பான காசநோயினை உறுதிப்படுத்த மாட்டாது. ரியூபகியூலின் என்பது காசநோய் பக்றீரியாவிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும் பதார்த்தமாகும். இது தோலினுள் ஊசி மூலமாக செலுத்தப்படும். இப்பகுதி சில நாட்களின் பின் பரீட்சிக்கப்படும்.
தாக்கம் ஏற்படும்போது தோலில் செந்நிற மாற்றம் அவதானிக்கப்படும். அதாவது தற்போதைய உயிர்ப்பான காச நோய்த் தொற்றினையோ அல்லது முன்னைய கிருமித்தொற்றினையோ அல்லது பீ சீ ஜீ தடுப்பூசி வழங்கப்பட்டமையையோ குறிக்கின்றது. இத்தாக்கம் ஏற்படாதவிடத்து காசநோயினை விலக்க முடியும். ஆயின் சிலரில் தவறாக தாக்கம் ஏற்படாதிருக்கலாம். உ-ம் மிகத் தீவிரமான காசநோய் காணப்படும் போது, எயிட்ஸ் நோய் உள்ள போது, நிர்ப்பீடனத்தொகுதி பலவீனமானதாக காணப்படும் போது, அல்லது இளம் சிறுவர்களில் கிருமித்தொற்றின் ஆரம்ப நிலைகளில் ஆகும்.
காசநோயை நோய் நிர்ணயம்
சளிப் பரிசோதனைகள்
நெஞ்சுப்பகுதிக்குரிய எக்ஸ் கதிர்ப் பரிசோதனை அல்லது மாண்டோக்ஸ் சோதனை பெறுபேறுகள் காசநோய்க்குரியனவாக இருக்கும் போது நுரையீரலில் பக்றீரியாவினை அவதானிப்பதற்குரிய சோதனைகள் மேற்கொள்ளப்படும். இதன் பொருட்டு சளி மாதிரியானது ஆய்வுகூடத்திற்கு அனுப்பப்படும்.
முதலில் சளிப்படலமாந்து விசேட சாயமூட்டப்பட்டு நுணுக்குக்காட்டியின் கீழ் அவதானிக்கப்பட்டு காசநோய் பக்றீரியா அவதானிக்கப்படும். இதன் பெறுபேறுகள் விரைவாக சில நாட்களிலேயே பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
சளி மாதிரிக்குரிய மற்றைய சோதனையாக ஆய்வுகூட வளர்ப்பு பரிசோதனை மேற்கொள்ளப்படும். இங்கு காசநோய் பக்றீரியாவானது ஆய்வுகூடத்தில் வளர்ப்பூடகத்தில் வளர்க்கப்படும். இதற்கு பல வாரங்கள் வரை செல்கிறது காரணம் காசநோய் பக்றீரியாவானது மிக மெதுவாகவே வளர்ச்சியடைகிறது. இப் பரிசோதனையினை மேற்கொள்வதற்கு இரு காரணங்கள் உள்ளன. ஒன்று காசநோய் பக்றீரியாவினை கண்டறிதல். (சளிப்படல பரிசோதனையில் காணப்படாத போதாகும்) மற்றையது வளர்ப்பூடகப் பரிசோதனை மூலம் காசநோய் பக்றீரியாவானது நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்புடைய தன்மையினை கொண்டிள்ளதா என கண்டறியமுடியும்.
சளிப்பரிசோதனை மூலம் காசநோய் தொற்றினைக் உறுதி செய்வதற்கு பல வாரங்கள் செல்கிறது. எனவே உயிர்ப்பான காச நோயென சந்தேகிக்கப்படும் போது ( குறிப்பான அறிகுறிகள் மற்றும் எக்ஸ் கதிர்ப்படங்கள் மூலம்) பரிசோதனைப் பெறுபேறுகள் கிடைப்பதற்கு முன்னரே சிகிச்சையானது ஆரம்பிக்கப்படும். இதன் நோக்கம் நோய் மோசமடைந்து செல்வதைத் தவிர்ப்பதும் ஏனையோருக்கு பரவுவதை தடுப்பதுமாகும்.
ஏனைய சோதனைகள்
இரத்தப்பரிசோதனை - குருதிக்கல எண்ணிக்கைப் பரிசோதனை, ஈ.எஸ்.ஆர் (ESR) செங்குழியங்களின் படிவுவீதப் பரிசோதனை.
சி ரி ஸ்கான் மற்றும் எம் ஆர் ஐ ஸ்கான் பரிசோதனைகள் உடல் உள்ளுறுப்புக்களை அவதானிக்கப் பயன்படுகின்றது. உ-ம் மூளையில் காசநோய்த்தொற்று மற்றும் மூளைய மென்சவ்வழற்சி.
உடலின் ஏனைய பகுதிகளில் இருந்து மாதிரிகளைப் பெற்றுக் கொள்ளுதல் - நுரையீரல் தவிர்ந்த ஏனைய அங்கங்களில் காச நோய் ஏற்படும் போது இழையங்கள் மற்றும் திரவ மாதிரிகள் என்பன அவற்றிலிருந்து பெற்றுக் கொள்ளப்படும். பின்னர் இம்மாதிரிகள் சளிப் பரிசோதனையை ஒத்த விதமாக பரிசோதிக்கப்படும். உ-ம் சிறுநீர், நிணநீர்க் கணுக்கள் மாதிரி, போன்றன. மூளைய மென்சவ்வழற்சியென சந்தேகிக்கப்படின் மூளைய முண்ணான் பாய்பொருள் மாதிரி பெற்றுக் கொள்ளப்படும்.
காசநோய்க்குரிய சிகிச்சை
சாதாரண நுண்ணுயிர்கொல்லி மருந்து வகைகள் காசநோய் பக்றீரியாவினை அழிக்கமாட்டாதன. எனவே விசேட கூட்டான நுண்ணுயிர்கொல்லி மருந்துகளை சில மாதங்களுக்கு உட்கொள்ள வேண்டியது அவசியமாகும். பொதுவாக அநேக காசநோய்களுக்கு ஆறு மாதகால சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதலில் கூட்டான நான்கு நுண்ணுயிர் கொல்லிகள் இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படும். அவையாவன ஐசோனயசிட், ரிபாம்பிசின், பைராசினமைட், எதாம்பியூடோல் என்பன. இதன் பின்னர் தொடர்ச்சியாக ஐசோன்யசிட் மற்றும் ரிபாம்பிசின் மேலும் நான்கு மாதங்களுக்கு வழங்கப்படும். காசநோயின் வகை மற்றும் உடலின் எப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கிணங்க சிகிச்சை முறை வேறுபடலாம்.
சிகிச்சை தோல்வியடைவது பொதுவாக காசநோய் மருந்துகளை சரியாகவும் ஒழுங்காகவும் உட்கொள்ளாமையினால் ஆகும். மருந்துகள் பற்றிய அறிவுரைகளை பின்பற்றுவது மிக முக்கியமான விடயமாகும். சில வாரங்களில் உடல் நலத்தில் முன்னேற்றம் உணரப்படினும் (அநேகரில் ஏற்படுகிறது) சிகிச்சை அட்டவணையை பூரணப்படுத்தும் வரை நிறுத்தக்கூடாது.
தொடர்ச்சியான வைத்திய பரிசோதனைக்கு சமூகமளித்தல் அவசியமாகும். இதன் மூலம் சிகிச்சைக்கு பதிலளித்தல் பற்றியும் மற்றும் மருந்துகளின் பக்க விளைவுகள் பற்றியும் சோதிக்கப்படும்.
சிகிச்சை அட்டவணைக்கிணங்க பூரணமாக காச நோய் மருந்துகளை உட்கொள்ள வேண்டியதன் அவசியம்.
காச நோய் பக்றீரியாவினை உடலிலிருந்து பூரணமாக அகற்றுவது ஏனைய சாதாரண பக்றீரியாக்களுடன் ஒப்பிடுகையில் மிகக் கடினமானதாகும். நீண்ட கால முழுமையான சிகிச்சை மூலமே பூரணமாக வெளியேற்ற முடியும். முழுமையான சிகிச்சை பெற்றுக் கொள்ளப்படாதவிடத்து பின்வரும் சிக்கல்கல் ஏற்படக்கூடும்.
நோயாளி தொடர்ச்சியாக ஏனையவர்களுக்கு கிருமித்தொற்றை பரப்பியவாறு காணப்படுவார்.
நோயாளி குணமடையமாட்டார். ஆரம்பத்தில் உடல் நலமடைவது போல் உணரப்படினும் சில காச நோய் பக்றீரியாக்கள் உடலில் தொடர்ச்சியாக காணப்படுகின்றன. இவை பின்னர் மீள உயிர்ப்பாக்கப்பட்டு நோயினை ஏற்படுத்தக் கூடியன.
ஆரம்ப கிருமித்தொற்றானது பகுதியாகவே சிகிச்சையளிக்கப்படும் போது நுண்ணுயிர் கொல்லிக்கு எதிரான காசநோய் பக்றீரியா பேதங்கள் உருவாக்கப்படலாம். இதன் பின்னர் காசநோயினை அழிப்பது மிகக் கடினமாகும்.
காசநோய் சிகிச்சையிலே பக்கவிளைவுகள் காணப்படுகின்றனவா?
காசநோய் சிகிச்சைக்கென பயன்படுத்தப்படும் மருந்துகளின் பாதுகாப்பு பொதுவாக சிறப்பானது. சில சந்தர்ப்பங்களில் பக்கவிளைவுகள் ஏற்படலாம். இவ்வாறு ஏற்படின் உடனடியாக வைத்தியரை அணுகவேண்டும். அதன் மூலம் உங்கள்து சிகிச்சையினை மாற்றியமைக்கவோ அல்லது வேறு நுண்ணுயிர் கொல்லிகளை மாற்றவோ இயலும்.
சில முக்கிய பக்க விளைவுகள் வருமாறு,
ஈரல் தொடர்பான சிக்கல்கள்
இரத்தப் பரிசோதனைகள் மூலம் ஈரற்தொழிற்பாடு பரீட்சிக்கப்படும். காசநோய் மருந்துகளை உட்கொள்ளும் போது ஈரல் சோதனைகளில் இலேசான மாற்றங்கள் ஏற்படுவது பொதுவானதகும். ஏறத்தள 100ல் 1 ரில் மிக அசாதாரண ஈரல் சோதனை அல்லது ஈரல் தொடர்பான சிக்கல்கள் ஏற்படலாம். அவ்வாறு ஏற்படின் சிகிச்சையினை மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகும். ஈரல் தொடர்பான சிக்கல்களுக்குரிய குணங்குறிகளாக : மஞ்சட் காமாலை (தோல் மற்றும் விழிவெண்படலம் மஞ்சள் நிறமாக தோன்றல்) காய்ச்சல், அருவருப்பு, வாந்தி, சொறி/கடி, பொதுவன உடல் அசௌகரியம் என்பன காணப்படுகின்றன. இவ்வாறன ஏதேனும் குணங்குறிகள் காணப்படின் மருந்துகளை நிறுத்திவிட்டு உடனடியாக வைத்தியரை அணுக வேண்டும்.
பார்வைப்புல மாற்றங்கள் (எதாம்பியூரோல் மருந்தினை உட்கொள்ளும் போது) ஆரம்ப அறிகுறிகளாக இலேசான பார்வைக் குறைவு அல்லது நிறக்குருடு என்பன ஏற்படுகின்றன.. பார்வைக் குறைபாடு உணரப்படின் எதாம்பியூரோல் மருந்தினை நிறுத்திவிட்டு உடனடியாக வைத்தியரை அணுக வேண்டும். எதாம்பியூரோலாந்து விரைவாக நிறுத்தப்படின் பார்வையானது பூரணமாக மீளத்திரும்புகிறது.
நரம்புப் பாதிப்புகள். இதன் காரணமாக புயங்கள் மற்றும் கால்களில் விறைப்பு மற்றும் உணர்ச்சி குன்றிய தன்மை என்பன ஏற்படுகிறது.. மேலதிகமான விற்றமின் பிரிடொக்சினை உட்கொள்வது இதற்கு உதவி புரிகின்றது. சில சந்தைப்பங்களில் ஐசோனயசிட்டுடன் இது சேர்த்து வழங்கப்படும்.
ரிபாப்பிசின் காரணமாக கண்ணீர் மற்றும் சிறுநீர் என்பன செம்மஞ்சள் நிறமாக மாற்றமடைகின்றன. இது சாதாரணமானதாகும்.
காச நோய் மருந்துகள் ஏனைய மருந்துகளை பாதிக்கக்கூடும்.
கருத்தடை மருந்துகள் உள்ளடங்கலாகவாகும். எனவே நோயாளி உள்ளெடுக்கும் மருந்துகள் பற்றி காச நோய் சிகிச்சை நிலையத்திலே தெரிவித்தல் அவசியமாகும். இதன் மூலம் அவற்றை மாற்றியமைக்க முடியும்.
எவ்வாறு காசநோய்குரிய பரிசோதனைகள் மற்றும் சிகிச்சையினை பெற்றுக்கொள்ள முடியும்?
சோதனைகள் மற்றும் சிகிச்சையானது இலங்கையிலே அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.
வைத்தியர் காசநோயென சந்தேகிக்கும் பட்சத்தில் மேலதிக பரிசோதனைகட்கு உத்தரவிடுவார். இது பொதுவாக அப்பிரதேசத்துகுரிய காசநோய் சிகிச்சை நிலையத்திற்கு அல்லது மார்புநோய் சிகிச்சை நிலையத்திற்காகும்.
சிகிச்சையானது பொதுவாக காசநோய் சிகிச்சை நிலையத்தினால் வழங்கப்படும். இங்குள்ள சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் காசநோய் சிகிச்சையிலே அனுபவம் வாய்ந்தவர்களாக காணப்படுவர்.
அநேக காசநோய் நோயாள்களால் வீட்டிலேயே சிகிச்சையினை பெற்றுக்கொள்ள முடியும். மிகவும் உடல்நலம் குன்றியிருத்தல், அலலது சிகிச்சையானது சில காரணங்களால் சிக்கலடைந்திருத்தல், அல்லது மோசமான வீட்டுச் சூழல் போன்றவை காணப்பட்டாலன்றி வைத்தியசாலையில் அனுமதித்தல் அவசியமில்லை.
சிலர் கிரமமாக மருந்தினை உட்கொள்ள மறந்து விடுவர். அவ்வாறு காணப்படுமாயின் “அவதானிக்கப்படும் சிகிச்சை” எனும் விசேட வழிமுறை கையாளப்படும். இங்கு சுகாதார உத்தியோகத்தர் ஒவ்வொரு தடவை மருந்தினை உட்கொள்ளும் போதும் அவதானிப்பார்.
ஏனையோருக்கு பரவுவதை தடுப்பதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
உயிர்ப்பான காசநோய் காணப்படும் போது சரியான காசநோய் சிகிச்சையினை இரு வாரங்களுக்கு உட்கொள்ளும் வரை நோயாளியிலிருந்து ஏனையோருக்கு கிருமித்தொற்று ஏற்படலாம். அதன் பின்னர் சாதாரணமாக தொற்றமாட்டாது. (ஆயின் சிகிச்சையினை தொடர வேண்டியது கட்டாயமாகும்) முதல் இரு வாரங்களும் வீட்டில் தங்கியிருக்குமாறு பணிக்கப்படுவார். (வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்படுவார்) மற்றும் நிர்ப்பீடனம் குன்றியவர்களுடன் தொடர்பை தவிர்க்க வேண்டும். உ-ன் எச் ஐ வி நோயாளிகள், புற்று நோய்மருந்துச்சிகிச்சை உட்கொள்வோர், குழந்தைகள் போன்றோர்.
சில சந்தர்ப்பங்கலில் மேலதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமாகும். தீவிரதொற்றும் தன்மையுடைய காச நோய், அலலது நொண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்புடைய காச நோய் என்பன.
ஏனைய குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் நண்பர்களில் சோதனைகள் மேற்கொள்வது அவசியமா?
வீட்டு அங்கத்தவர்கள் மற்றும் நோயாளியுடன் தொடர்ச்சையான நெருங்கிய தொடர்புடையவர்களில் காசநோய் சோதனையினை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்படும். இவர்களில் பொதுவான சோதனையாக நெஞ்சுப் பகுதிக்குரிய எக்ஸ் கதிர்ப் பரிசோதனை மற்றும் மாண்டோக்ஸ் எனும் சோதனை என்பன மேற்கொள்ளப்படும். இவற்றில் காசநோய்குரிய சான்றுகள் காணப்படின் மேலதிக சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
ஆயின் குழந்தைகள் மற்றும் இரண்டு வயதிலும் குறைந்த சிறுவர்களில் உயிர்ப்பான காசநோயுடையவருடனான தொடர்பிற்கு பின்னரான நடைமுறைகள் வேறுபட்டது. இளம் சிறுவர்களில் காசநோயினை நோய் நிர்ணயம் செய்தல் கடினமாதாகும். ஆரம்ப நிலைகளில் சோதனைகளில் மாற்றம் ஏதும் காணப்படாது. ஆயின் இளம் சிறுவர்களில் காசநோய் ஏற்படும் சந்தர்ப்பங்கள் உயர்வாகும். (அவர்களில் தீவிர கிருமித்தொற்று ஏற்படலாம்) எனவே அவர்களில் சில சிகிச்சைகள் (உ-ம் ஐசோனயசிட்) சிலவாரங்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் மேலதிக சோதனை முடிவுகள் மூலம் காசநோயினை உறுதிப்படுத்தும் வரை தீவிர கிருமித்தொற்று ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
விசேட சந்தர்ப்பங்கள்
நுண்ணுயிர்க்கொல்லிக்கு எதிர்ப்புடைய காசநோய்
சிலரில் காணப்படும் காசநோய் பக்றீரியாவானது சில நுண்ணுயிக் கொல்லிகளுக்கு எதிப்புடையது. அதாவது இவை அந்நுண்ணுயிர் கொல்லியால் அழிக்கப்படுவதில்லை. எனவே காசநோயினை குணப்படுத்த பிரதியீடாக வேறு நுண்ணுயிர்க் கொல்லிகள் பயன்படுத்தப்பட வேண்டும். ஆகவே நுண்ணுயிர் கொல்லிக்கு எதிர்ப்புடைய தன்மை காசநோய் சிகிச்சையினை மேலும் கடினமாக்குகிறது. அத்துடன் ஏனையோருக்கு தொற்றும் போது ஆபத்தானது. ஒன்றுக்கு மேற்பட்ட நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்பினை கொண்டிருக்கும் போது சிகிச்சையின் கடினம் மேலும் அதிகரிக்கின்றது. (பலமருந்துகளுக்கு எதிர்ப்புடைய காசநோய்)
நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்புடைய காசநோய்குரிய காரணமாக முழுமையான காசநோய் சிகிச்சையினை பெற்றுக் கொள்ளாமை அல்லது ஏற்கனவே நோயினை ஏற்படுத்திய பக்றீரியா எதிர்ப்பினை கொண்டிருத்தல் என்பன அமைகின்றன.
நுண்ணுயிர் கொல்லிக்கு எதிர்ப்புடைய காசநோயாக காணப்படும் போது ஏனையவர்களுக்கு பரவுவதை தடுக்கும் பொருட்டு மேலதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியமாகும். இதை சுகாதார உத்தியோகத்தர் அறிவுறுத்துவார். விசேட வைத்தியரின் ஆலோசனைக்கிணங்க வேறுபட்ட நுண்ணுயிக் கொல்லிகள் அவசியப்படும்.
விசேட சந்தர்ப்பங்கள்
காசநோயும் எச்.ஐ.விகிருமித் தொற்றும்
எச்.ஐ.வி கிருமித்தொற்றுடையவர்களில் காசநோய் பொதுவானது. இவர்களில் நோய் நிர்ணயம் செய்வது மேலும் சிரமமானது காரணம் குணங்குறிகள் மற்றும் சோதனை முடிவுகள் பொதுவான விதமாக காணப்பட மாட்டா. அத்துடன் சிகிச்சையும் சிக்கலானது, காரணம் காசநோய் சிகிச்சையும் எ.ஐ.வி க்குரிய சிகிச்சையும் ஒன்றையொன்று பாதிக்கக் கூடியன. விசேட வைத்திய ஆலோசனை அவசியமாகும்.
சிலசந்தர்ப்பங்களில் காசநோய் காணப்படும் போது எச்.ஐ.விக்குரிய வைரசுக்கெதிரான மருந்துகளை உள்ளெடுக்கும் போது காசநோய் அறிகுறிகள் சில காலம் மோசமடையலாம். இதற்குக் காரணம் நிணநீர்த்தொகுதி பலமடைவதனால் காசநோய்க்கெதிராக தாகமடைவதனாலாகும்.
ஸ்டீரொயிட் மருந்துகளை உட்கொள்ளல்
ஸ்டீரொயிட் சிகிச்சை (ப்ரிட்நிசலோன்) ஆனது சில வகையான காசநோய்களுக்கு மேலதிக சிகிச்சையாக வழங்கப்படுகிறது. மூளைய மென்சவ்வழற்சி, இதயச்சுற்று மென்சவ்வழற்சி போன்றவற்றில் ஆகும். இதன் மூலம் உருவாகக்கூடிய சிக்கல்கள் தவிர்க்கப்படுகின்றன.
உயிர்ப்பான காசநோயின் நீண்டகால விளைவுகள்.
சிகிச்சை மூலம் அநேக நோயாளிகள் பூரண குணமடைகின்ரனர். சிகிச்சை வழங்கப்படாது விடப்படும் போது உயிர்ப்பான காசநோயுடையவர்களில் அரைப்பங்கினர் கிருமித் தொற்றின் காரணமாக இறக்கின்றனர். காச நோய் பக்றீரியாவானது ஏனைய பக்ரீரியாக்களுடன் ஒப்பிடுகையில் மிக மெதுவாகவே பெருக்கமடைகிறது. எனவே உயிர்ப்பான காச நோயிலே மெதுவாக மோசமடைந்து செல்லும் நோய் நிலமை அவதானிக்கப்படும். சிலர் சிகிச்சையின்றியே தப்புவதுடன் பூரண குணமடையக் கூடும். சிகிச்சை மேற்கொள்வதில் சிரமமானவர்களில் விளைவுகள் மோசமானவை. உ-ம் எச் ஐ வி / எயிட்ஸ், ஏனைய தீவிர நோய்கள், அல்லது மிகவும் நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்புடைய காச நோய்.
காசநோயை எவ்வாறு தடுக்கலாம்.
காசநோயானது தடுக்கப்படக் கூடியது மற்றும் சிகிச்சையளிக்கப்படக் கூடியது. உலகளாவிய ரீதியில் பாரிய உயிராபத்துகுரிய நோயாக காணப்படுவது வருத்தத்துக்குரிய விடயமாகும். ஏழ்மையினை நிவர்த்தி செய்த்ல், சிறந்த போசணையினை வழங்கல், உடனடியான காசநோய்க்குரிய சிகிச்சை என்பன உலகளாவிய ரீதியில் காசநோயினை தடுப்பதற்குரிய மிகமுக்கியமான வழிமுறைகளாகும். காசநோய் தடுப்புசியும் உதவி புரிகின்றது.
ஏனையோருக்கு பரவுவதை தடுப்பதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
உயிர்ப்பான காசநோய் காணப்படும் போது சரியான காசநோய் சிகிச்சையினை இரு வாரங்களுக்கு உட்கொள்ளும் வரை நோயாளியிலிருந்து ஏனையோருக்கு கிருமித்தொற்று ஏற்படலாம். அதன் பின்னர் சாதாரணமாக தொற்றமாட்டாது. (ஆயின் சிகிச்சையினை தொடர வேண்டியது கட்டாயமாகும்) முதல் இரு வாரங்களும் வீட்டில் தங்கியிருக்குமாறு பணிக்கப்படுவார். (வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்படுவார்) மற்றும் நிர்ப்பீடனம் குன்றியவர்களுடன் தொடர்பை தவிர்க்க வேண்டும். உ-ன் எச் ஐ வி நோயாளிகள், புற்று நோய்மருந்துச்சிகிச்சை உட்கொள்வோர், குழந்தைகள் போன்றோர்.
சில சந்தர்ப்பங்கலில் மேலதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமாகும். தீவிரதொற்றும் தன்மையுடைய காசநோய், அலலது நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்புடைய காச நோய் என்பன.
காசநோய்த் தடுப்பூசி (பீ சீ ஜீ வக்சீன்)
இத் தடுப்பூசியானது சிறிதளவு மாற்றியமைக்கப்பட்ட காசநோய் பக்றீரியாவினை கொண்டிள்ளது. இவ் வக்சீன் நிர்ப்பீடனத்தொகுதியை காசநோய் பக்ரீரியாவுக்கு எதிராக தாக்கமடைய ஆயத்தமாக்குகிறது. பீ சீ ஜீ வக்சீன்னானது காச நோய்க்கெதிராக 70% பாதுகாப்பினை வழங்குகிறது. இது சிறுவர்களில் பெரியவர்களை விட பயன் மிக்கது. இது மிகவும் பயனுடையதாகவிருப்பினும் காச நோய்க்கெதிராக முழுமையான பாதுகாப்பை வழங்க மாட்டாது.
பின்வரும் குழுவினர்களுக்கு பீ சீ ஜீ வக்சீன் வழங்கப்படும்
ஒரு மாதத்துக்குட்பட்ட குழந்தைகள்
முன்னர் தடுப்பூசி வழங்கப்படாத குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் (16 வயதுக்குட்பட்ட). 6-16 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் மாண்டொக்ஸ் சோதனை செய்யப்பட்டு
பின்னர் அதில் மாற்றமேற்படாத போதே தடுப்பூசி வழங்கப்படும்.
மேலும் முன்னர் பீ சீ ஜீ தடுப்பூசி வழங்கப்படாத மாண்டோக்ஸ் சோதனையில் மாற்றமற்ற
35 வதுக்கு உட்பட்ட காச நோய் அதிகமான பகுதியில் உள்ளவர்கள்
தொழில் காரணமாக அதிகரித்த ஆபத்தை உடையவர்கள், உ-ம் சிகாதார சேவை உத்தியோகத்தர்கள், சிறைக் கைதிகள், மற்றும் ஏனைய காச நோய் அதிகமான பகுதிகளில் வாழ்வோர்.
காச நோயுடையவர்களுடன் நெருங்கிய தொடர்புடையோர்.
0 comments:
Post a Comment