"ஒவ்வாமை எனப்படும் அலர்ஜி, தும்மல், மூக்கில் தண்ணீர் ஒழுகுதல், மூக்கில் சளி அடைப்பு போன்றவை மழைக்காலங்களில் ஏற்படுவது சகஜமே. சைனஸ் பிரச்சினை இருந்தால் மேற்கண்ட தொந்தரவுகள் அதை அதிகமாக்கிவிடும். சைனஸ் என்பது மூக்கின் உள்பகுதியில் எலும்புகளுக்கு மத்தியில் உள்ள வெற்றிடமாகும்.
இப்போது சுமார் 80 சதவீதம் பேருக்கு மூக்குத்தண்டு வளைந்துதான் காணப்படுகிறது. எல்லோருக்கும் இந்த வளைவு பிரச்சினை தருவதில்லை. மூக்குத்தண்டின் வளைவு அதிகமாகி வலது மூக்கு அல்லது இடது மூக்கு சுவாசத்தில் சிக்கலை ஏற்படுத்தும் போது சைனஸ் பிரச்சினை ஏற்படுகிறது. முன்பெல்லாம் இதுபோன்ற பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு இல்லை. நவீன நோய் பரிசோதனை கருவிகள் வந்துவிட்டதாலும், எண்டோர்ஸ்கோபிக் சைனஸ் அறுவை சிகிச்சை மூலமும் இப்போது சைனஸ்க்கு நிரந்தர தீர்வு கிடைக்கிறது.
அலர்ஜி, காளான், நுண்கிருமிகள் மூலம் மூக்கில் சதை (பாலிப்) வளரும். மருந்துகளால் இந்த சதை வளர்ச்சியை சரிப்படுத்துவது கடினம். இதையும் சைனஸ் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யலாம். நோய் எதிர்ப்பு சக்திதிறன் குறைந்தவர்கள், நீரிழிவுநோய் கொண்டவர்கள், கேன்சர், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், எய்ட்ஸ் நோய் தாக்கியவர்களுக்கு அறுவை சிகிச்சைக்குப் பின்னும் மூக்கில் சதை வளரும் வாய்ப்பு உள்ளது. இவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை சதை நீக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள நேரிடும்.
காளான் வகை சதை வளர்ச்சியை கண்டுகொள்ளாமல் விட்டால் கண் நரம்பில் பாதிப்பை ஏற்படுத்தி பார்வை திறனை குறைக்கவும், சில சமயம் மூளையை பாதிக்கும் வாய்ப்பும் உண்டு.
ஏற்கனவே ஆஸ்துமா, மூச்சுத்திணறல் இருந்தால் ஜலதோஷத்தால் வரும் சாதாரண பிரச்சினைகள் அவற்றை அதிகப்படுத்திவிடும்.
அடிக்கடி மூக்கில் தண்ணீராக ஒழுகினால் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். மூளைக்கு பாதுகாப்பு அளிக்கும் சி.எஸ்.எப். என்ற, நீர்ப்படலம் போன்றதொரு பகுதி தலையில் அமைந்துள்ளது. அதாவது மூக்கின் மேல்பகுதிக்கு மேல் மூளையின் அடிப்பகுதி உள்ளது. இவற்றிற்கிடையேயான இடைவெளி அரித்துவிட்டாலோ, பாதிக்கபட்டாலோ, அந்த நீர்படலம் மூக்கின் வழியே தண்ணீராக சிலருக்கு வெளியேறும். சாதாரண ஜலதோஷம் என்று அதைக் கண்டுகொள்ளாமல் விடும் போது காற்றில் உள்ள கிருமிகள் சுவாசிக்கும் போது எளிதாக மூளையை தாக்கலாம்.
0 comments:
Post a Comment