மருத்துவர்கள் - நோயாளிகள் இரு தரப்பையுமே அதிரவைத்திருக்கின்றன இரு பெண்களின் மரணங்கள்.
தூத்துக்குடியைச் சேர்ந்த அன்பான தம்பதி மகேஷ் - நித்யா. ஆறு மாதக் கர்ப்பமாக இருந்திருக்கிறார் நித்யா. கருவுற்ற நாளில் இருந்தே டாக்டர் சேதுலட்சுமி யிடம்தான் இவர் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுவந்திருக்கிறார். கருவுற்ற பெண்ணும் ஒரு நோயாளிபோலதான். ஆனால், நம் நாட்டில்தான் நோயாளிகளுக்கு எதுவுமே தெரியாதே?
ஒரு நாள் நித்யாவுக்கு வயிற்று வலி ஏற்பட சேதுலட்சுமியின் க்ளினிக்கிற்கு வழக்கம்போல அழைத்துச் சென்று இருக்கிறார்கள். அவர்கள் நினைத்திருந்தது நித்யாவுக்கு கர்ப்பிணிகளுக்கே வரக் கூடிய சாதாரணமான வலிதான் வந்திருக்கிறது என்று. ஆனால், நித்யாவுக்கு ஏற்பட்டிருந்ததோ மரண வலி. சில நாட்களுக்கு முன்பே வயிற்றில் குழந்தை இறந்து, நித்யாவின் ரத்தமே நஞ்சாகி இருந்திருக்கிறது. கடைப்பிடிக்கச் சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றவில்லையே என்று புலம்பிக்கொண்டே நித்யாவின் உயிரைக் காப்பாற்ற அறுவைச் சிகிச்சைதான் ஒரே வழி என்று முடிவெடுத்தார் சேதுலட்சுமி.
போதிய மருத்துவ வசதிகள் இல்லாத சூழலில், அவர் செய்த அறுவைச் சிகிச்சை நித்யாவை ஆபத்தான ஒரு சூழலுக்குக் கொண்டுசென்றது. வசதிகள் உள்ள வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு நித்யாவை அழைத்துச் செல்லுமாறு கூறினார் சேதுலட்சுமி. ஆனால், அந்த மருத்துவமனைக்கு நித்யா அழைத்துச் செல்லப்பட்டபோது அவர் சடலமாகி இருந்தார். இதற்குப் பின் மகேஷால் சேதுலட்சுமி கொலை செய்யப்பட்டதும் மருத்துவர்களின் மாநிலம் தழுவிய போராட்டங்களும் நாம் அறிந்ததே!
இந்தப் பிரச்னையை மருத்துவ அடிப்படையில் அணுகுவோம். இனி ஒருமுறை இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? |
''மருத்துவர் என்பவர் ஒரு கருவிதான், கடவுள் அல்ல என்பதை மக்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்'' என்று தொடங்கினார் மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணரான அமுதா ஹரி. இதுவரை எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 5,000-க்கும் அதிகமான பெண்களுக்குப் பிரசவம் பார்த்து இருப்பவர் இவர்.
''மருத்துவர்களால் மட்டுமே நோயைக் குணப்படுத்திவிட முடியாது. நோயாளிகளும் தாங்கள் எத்தகைய பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறோம்; எப்படி எல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்று தெரிந்துவைத்து, அதன்படி நடந்துகொள்ள வேண்டும். இதுதான் எந்த நோயில் இருந்தும் விடுபடுவதற்கான முதல் படி.
பல முறை கருச்சிதைவுகளைச் சந்தித்து, கடைசியில் அழகான குழந்தையைப் பெற்றெடுத்தவுடன், 'நீங்கள்தான் எங்கள் கடவுள்’ என்று மருத்துவர்களின் காலில் விழுபவர்களும் இருக்கிறார்கள்.நடுராத்திரியில் 'எமர்ஜென்ஸி’ என்று தூக்கத்தில் இருக்கும் மருத்துவரை எழுப்பி, சிகிச்சையின்போது ஒருவேளை நோயாளி இறந்துவிட்டால், வன்முறையில் ஈடுபடுபவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே புரிந்துகொள்ள வேண்டிய ஓர் அடிப்படையான விஷயம்... எந்தவிதமான அறுவைச் சிகிச்சையாக இருந்தாலும் அதில் கட்டாயம் ரிஸ்க் இருக்கிறது. மருத்துவர்கள் அப்படி ஒரு ரிஸ்க் எடுப்பதே நோயாளியின் நலனைக் கருதிதான்!'' என்ற அமுதா ஹரி தனது 25 வருட அனுபவங்களின் அடிப்படையில் இப்படிப்பட்ட சூழல்களை எதிர்கொள்ள தரும் ஆலோசனைகள் இங்கே:
''முதலில், ஆறு மாத சிசு ஒரு பெண்ணின் கருவறைக்கு உள்ளேயே இறந்துபோக என்ன காரணம் என்பதைப் பார்க்க வேண்டும். ஏனெனில், கர்ப்பிணிகளுக்கு நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், நோய்த் தொற்று, பி.ஐ.ஹெச். (PIH - Pregnancy Induced Hypertension)எனப்படும் பிரசவ கால உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது போன்ற பல காரணங்களால் சிசு இறந்துபோயிருக்கலாம். அல்லது பனிக்குடத்தில் நீர் குறைவாக இருந்திருக்கலாம். சரியான வளர்ச்சி இல்லாமல் இருந்திருந்தாலும் சிசு இறந்துபோயிருக்கலாம். என்னதான் முன்பே பரிசோதனை செய்து இருந்தாலும் திடீர் என ஏதேனும் பிரச்னைகள் ஏற்படுவது கர்ப்பக் காலத்தில் சகஜம்தான்.
இரண்டாவதாக, அப்படி இறந்துபோன சிசு வயிற்றுக்கு உள்ளேயே இருந்தால், அது தாயின் உடலுக்கு நஞ்சாகிவிடும். அதனால், அதை வெளியே எடுத்துவிட வேண்டும். அறுவைச் சிகிச்சை மூலமாக அதை வெளியே எடுக்கும்போது தாய்க்கு நிறைய உதிரப்போக்கு ஏற்படும். ஆகவே, அறுவைச் சிகிச்சைக்கு முன்பே தாய்க்கு ரத்தம் உறையும் தன்மை இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். ரத்தம் உறையும் தன்மை இல்லாதுபோனாலும், அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு தாய் இறந்துபோகும் வாய்ப்பு இருக்கிறது.
மூன்றாவதாக, மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளிடம் நோய்பற்றிய விவரங்களை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். அறுவைச் சிகிச்சை செய்கிறபோது பிரச்னைகள் வந்தால், என்ன செய்வது என்பதுபற்றி பல மருத்துவர்கள் யோசிப்பது இல்லை. ஆகவே, அதுபோன்ற சமயங்களில், நோயாளிகளின் குடும்பத்தினரிடம், 'எங்கள் மருத்துவமனையில் இந்த அளவுதான் வசதிகள் இருக்கின்றன. சிகிச்சையின்போது இப்படியான பாதிப்புகள் ஏற்படலாம்’ என்று அவர்களுக்குப் புரியும் வகையில், எடுத்துச் சொல்ல வேண்டும்!'' என்கிறார் அமுதா ஹரி.
எளிய மக்களின் ஆதங்கத்தை அறிந்த மருத்துவரான புகழேந்தியிடம் பேசினோம். கல்பாக்கத்தில் தன் சேவையைத் தொடர்ந்துகொண்டு இருக்கும் இவர், மருத்துவத் துறையில் இருக்கும் அலட்சியங்கள்குறித்து விரிவாகப் பேசினார்.
''தூத்துக்குடி சம்பவத்தைப் பொறுத்த அளவில், அந்தப் பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை நடக்கும்போது, 'ஹெல்ப் சிண்ட்ரோம்’ (HELLP SYNDROME - Hemolytic anemia, Elevated Liver Enzymes, Low Platelet Count) ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பாதிப்பில், ரத்தத்தில் இருக்கும் சிவப்பு அணுக்கள் உடைந்து ரத்த சோகை ஏற்பட்டு, கல்லீரல் பாதிக்கப்படும். கல்லீரலில் இருந்து வெளியேறும் சில நொதிகள் ரத்தத்தில் கலந்து, ரத்தத்தை உறையவைக்கும் அணுக்களை குறைத்துவிடும். இதனால், நோயாளிக்கு மரணம் ஏற்படலாம். இந்தப் பிரச்னை நோயாளிக்கு உள்ளதா என்று அறிய முன்கூட்டியே ரத்தப் பரிசோதனை செய்வது அவசியம். அப்படி ஒரு சோதனை இங்கு நடத்தப்பட்டதா என்று தெரியவில்லை. இத்தகைய சோதனைகளின் முக்கியத்துவத்தையும் மருத்துவர்கள் ஒளிவுமறைவற்று நடந்துகொள்ள வேண்டிய அவசியத்தையும் இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுகிறது'' என்றார் புகழேந்தி.
''வன்முறையில் இருந்து மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும் பாதுகாக்க, 2008-ல் தமிழக அரசால் 'மருத்துவமனைப் பாதுகாப்புச் சட்டம் எண் - 48’ என்கிற அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும் தாக்கும் நபர்களுக்கு 10 ஆண்டுகள் பிணை இல்லா சிறைத் தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்தச் சட்டம் சரியாக நடைமுறைப் படுத்தப்படவில்லை.
பெண் மருத்துவர்களுக்கு இப்படிப்பட்ட ஆபத்துகள் இருந்தால், அவர்களால் எப்படி தைரியமாக சிகிச்சை அளிக்க முடியும்?'' என்று மருத்துவர்களின் பிரதிநிதியாக அவர்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் இந்திய மருத்துவக் கழகத்தின் மாநில இணைச் செயலர் ராஜ ராஜேஷ்வர்.
''மக்களின் உயிர் மருத்துவர்களைச் சார்ந்தும் மருத்துவர்களின் வாழ்க்கை மக்களைச் சார்ந்தும் இருக்கிறது. முன்பெல்லாம் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வந்த மருத்துவத் துறை இன்று பணம் கொழிக்கும் துறையாக மாறிவிட்டது. மருத்துவத் துறையில், மருத்துவ அலட்சியத்தை நிரூபிப்பது மிகவும் கடினம். கவனக் குறைவாகச் செயல்படுவது வேறு. அலட்சியத்துடன் செயல்படுவது வேறு. குறிப்பிட்ட இந்தச் சம்பவத்தில், மருத்துவர் கவனக்குறைவாக இருந்துள்ளாரா அல்லது அலட்சியத்துடன் செயல்பட்டாரா என்பது முழுமையான விசாரணைக்குப் பின்புதான் தெரியும். ஆனால், இதுவரை மருத்துவ விசாரணைகளே தொடங்கப்படவில்லை'' என்று ஆதங்கத்துடன் பேச ஆரம்பித்தார் தேசிகன். நுகர்வோர் பாதுகாப்புக்காகப் பல ஆண்டுகளாகப் போராடி வருபவர் இவர்.
'' 'கிளினிக்கல் எஸ்டாப்ளிஷ்மென்ட் சட்டம்’ கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு மருத்துவமனையும் சட்டத்தில் சொல்லி இருக்கிறபடி அனைத்து விதிகளையும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும். இது போன்ற சோக நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்த இதுதான் வழி!'' என்கிறார் தேசிகன்.
மருத்துவம் என்பது மக்களின் பொறுப்பு என்பதுபோல அரசாங்கங்கள் அலட்சியத்தில் இருக்கின்றன. தன்னுடைய உடலில் என்ன பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதே தெரியாமல் நோயாளி அறியாமையில் கிடக்கிறார். நோயாளிக்குத் தெரியப்படுத்த வேண்டிய அத்தியாவசியமான விஷயங்களைக்கூட தெரியப்படுத்தாமல், தங்களுக்குள் பூட்டிவைத்துக்கொண்டு மருத்துவர்கள் விழிக்கின்றனர். இது இந்த நாட்டின் துயரங்களில் ஒன்று. இந்தத் துயரத்தைத் துடைக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்குமே உண்டு!
இப்படியான நிகழ்வுகள் இனியும் நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
இது மருத்துவர்களுக்கு....
நோயாளிகளிடத்தில் நோய், அதற்கான பரிசோதனைகள், மருத்துவ முறைகள், ஏற்படும் பின்விளைவுகள் எனச் சகலத்தையும் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகச் சொல்வது தன் அடிப்படைக் கடமை என்பதை ஒவ்வொரு மருத்துவரும் உணர வேண்டும்.
தொழில்நுட்பங்கள், கருவிகள், நன்கு பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளர்கள் என அனைத்து வசதிகளும் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். போதிய வசதிகள் இல்லாவிட்டால், மருத்துவர்கள் அதை நோயாளிகளிடத்தில் சொல்லிவிடுவது உத்தமம்.
அறுவைச் சிகிச்சை செய்வதை வீடியோ பதிவுசெய்ய வேண்டும் என்பது இந்தியாவில் வெறுமனே வழி காட்டுதலாக (கைட்லைன்) இருக்கிறதே தவிர, அது சட்டம் ஆக்கப்படவில்லை. சட்டம் இல்லை என்ற போதிலும், மருத்துவமனைகள் தங்களின் தார்மீகக் கடமையாக எடுத்துக்கொண்டு இந்த நெறிமுறையைச் செயல்படுத்த வேண்டும்.
இது கர்ப்பிணிகளுக்கு...
கர்ப்பிணிப் பெண்கள் முதல் செக்-அப்பில் இருந்தே ஒரே மருத்துவரிடம் செல்வது நல்லது. அப்போதுதான் உங்களின் நிறை-குறைகள் அத்தனையும் மருத்துவருக்குத் தெரியும்.
மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகள், மருந்துகள், ஆலோசனைகள், நேரங்கள் ஆகியவற்றை மிகச் சரியாகப் பின்பற்ற வேண்டும்.
உங்களுக்கு அளிக்கப்படும் மருத்துவம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் மருத்துவரிடம் இருந்து பெற்றுக்கொள்ள உரிமை இருக்கிறது. ஆகவே தயங்காமல் மருத்துவரிடம் அதைப் பற்றி விசாரியுங்கள்.
உறவு குலைய அரசும் காரணம்!
டாக்டர்கள் சங்கப் பொதுச் செயலாளர் ஜீ.ஆர்.ரவீந்திரநாத்:
''நமது நாட்டில் சுகாதாரத் துறையில் வசதிகளை மேம்படுத்துவதன் மூலமே இதற்கு நிரந்தரத் தீர்வு காண முடியும்.
கடந்த 2009-ம் ஆண்டு அனைத்து குடிமகன்களுக்கும் தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தேசிய சுகாதார மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதன் பின்பு யாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை. அந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், ஒவ்வொரு குடிமகனுக்கும் சிகிச்சை தர வேண்டியது அரசின் கட்டாயக் கடமையாகிவிடும். அப்படி சிகிச்சை அளிக்காமல் தவறும்பட்சத்தில் பாதிக்கப்பட்டவர் மாவட்ட ஆட்சியர் மீது வழக்குத் தொடரலாம்.
'ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஆறு சதவிகிதம் நிதியை மருத்துவத்துக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ என்று உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. ஆனால், இந்தியாவில் 1.3 சதவிகிதம் மட்டுமே மருத்துவத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் செலவு செய்வதால், வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளப்படுகின்றனர். மக்களின் இந்தக் கோபமும் மருத்துவர்கள் மீது திரும்புகிறது. மருத்துவர்கள் - நோயாளிகள் இடையேயான உறவு பாதிக்கப்பட இதுவும் ஒரு காரணம்!''
- டி.எல்.சஞ்சீவிகுமார்
கர்ப்பக் காலத்தில் செய்ய வேண்டியவை...
ஒரு பெண் கர்ப்பமானதும் செய்ய வேண்டியவை என்ன? என்பது குறித்து மூத்த மகளிர் நலன் மற்றும் மகப்பேறு மருத்துவர் பாமா நடராஜனிடம் கேட்டோம்...
''திருமணம் ஆன உடனேயே ஒரு பெண்ணுக்கு குழந்தைப்பேறு பற்றிய புரிதலை உருவாக்கிவிடுவது அவசியம். கருத்தரித்தலை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கும் உடல்நிலைக்கும் அந்தப் பெண்ணைத் தயார்ப்படுத்த வேண்டும்.
கர்ப்பம் உறுதிப்படுத்தப்பட்ட பின், முதல் ஸ்கேன் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். கரு, கருப்பையில்தான் உள்ளதா அல்லது கருப்பைக்கு வெளியே உள்ளதா என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ளலாம். ஆறு முதல் ஏழாவது வாரத்தில் குழந்தையின் இதயத்துடிப்பு தொடங்கும். அது நல்ல நிலையில் உள்ளதா என்பதைப் பரிசோதித்து தெரிந்துகொள்வது அடுத்த நிலை. இதன் பிறகுதான் அடிப்படை ஆய்வு என்று சொல்லக் கூடிய பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். இதில், அவர்களுடைய ரத்த வகை, ஆர்.ஹெச். பேக்டர், ஹெச்.ஐ.வி., ஹெபடைட்டிஸ் பி, ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்தத் தட்டுக்களின் தரம், சிறுநீரில் ஏதேனும் தொற்று உள்ளதா... இப்படிச் சகல விஷயங்களையும் அறிந்துகொள்ள முடியும்.
எங்களின் முதல் ஆலோசனை... சாப்பாடுதான். ஏனெனில், குழந்தையின் உருவம், மூளை எல்லாம் உருவாவது முதல் மூன்று மாதத்தில் எடுத்துக்கொள்ளும் உணவில்தான் உள்ளது. அந்த நிலையில் தாய்க்கு நல்ல சத்தான உணவு முக்கியம். காய், கீரை, பருப்பு, முளைகட்டிய பயறு, பழம், பால், மோர் ஆகிய ஏழு பொருட்கள் தினமும் அத்தியாவசியமாக உணவில் இருக்க வேண்டும். அசைவ உணவு சாப்பிடுபவராக இருந்தால் நாட்டுக்கோழி, மீன் அதிகம் சாப்பிட வேண்டும்.
அதேபோல், நல்ல ஓய்வும் அவசியம். நேரத்துக்கு படுக்கச் செல்ல வேண்டும். இரவு 9 மணியில் இருந்து காலை 5 மணி வரை தூங்குவது நல்ல ஓய்வைத் தரும். படுக்கும்போது இடது பக்கமாகத் திரும்பிய நிலையில் படுக்க வேண்டும். இப்படிப் படுத்தால், இதயத்தில் இருந்து வரும் நல்ல ரத்தம், கர்ப்பப்பைக்கு அதிகமாகச் செல்லும். உடலில் அநாவசியமாக கால், கை, வயிறு வீக்கம் இல்லாமல் இருக்கும்.
அடுத்து, 20-வது வாரத்தில் மீண்டும் ரத்தப் பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனை செய்துபார்க்க வேண்டும். குழந்தையின் மொத்த உருவம், தலை முதல் கால் வரைக்கும் எல்லாப் பகுதிகளும் முழுமையாக வளர்ச்சி அடைந்து உள்ளதா, அதன் செயல்பாடு சரியாக உள்ளதா என்பதை அறிய இது உதவும்.
குறித்த காலத்திற்கு ஒருமுறை டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இந்தப் பரிசோதனைகளின் முடிவுகள் எல்லாம் சிறப்பாக அமையும் பட்சத்தில், பிரசவம் இயல்பானதாக அமைந்துவிடும். பிரசவத்திற்கு 10-15 நாட்களுக்கு முன்பு டாக்டரை அணுகி பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் அப்போதுதான் எங்கே, எப்படி, எப்போது டெலிவரி என்பதை டாக்டர் முடிவு செய்து தாயையும்,சேயையும் காப்பாற்றமுடியும். மருத்துவர்கள் சொல்வதை அலட்சியப்படுத்தாமல் பின்பற்ற வேண்டும்!'' என்றார் பாமா நடராஜன்.
- பா.பிரவீன்குமார்
0 comments:
Post a Comment