மழலைப் பருவத்திலேயே மலரும் மொட்டுகள் ! - தமிழர்களின் சிந்தனை களம் மழலைப் பருவத்திலேயே மலரும் மொட்டுகள் ! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Sunday, January 15, 2012

    மழலைப் பருவத்திலேயே மலரும் மொட்டுகள் !


    பட்டுப் பாவாடை, இரட்டைச் சடைன்னு துள்ளித் திரிந்த இந்தக் குட்டிப் பெண்ணா பெரிய மனுஷியாகிவிட்டாள்!?'' - சற்றே அதிர்ச்சி கலந்த இந்த ஆச்சரியக் குரல்களை இப்போது அதிகம் கேட்க முடிகிறது.  
    10 வயதில் பாவாடை அணிந்த  பட்டாம்பூச்சியாகக்  குதூகலித்தப் பருவத்தை இன்று நினைத்தாலும் நமக்குத் தித்திக்கிறது. உறவுக்காரர்களின் மடியில் படுத்துறங்கி, அவர்களின் விரல் பிடித்து வெளியிடங்களுக்குச் சென்று ஆனந்தப்படும் வாய்ப்புகள் இப்போதைய சிறுமிகளுக்கு வாய்ப்பது இல்லை. காரணம், பள்ளிக்குச் செல்லும் பால்யம் மாறாத பருவத்திலேயே உடலாலும் உணர்வாலும் அவர்கள் பெரும் மாற்றத்தைச் சந்திக்கின்றனர்.
    10 வயதுக்குள்ளாகவே பூப்பெய்திவிடும்போது, உடல் - மனரீதியாக ஒரு சிறுமி எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்னென்ன? அவர்களுக்கான தீர்வு என்ன என்பதைப் பற்றி ஒவ்வொரு பெற்றோரும் அவசியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய தருணம் இது.
    ''சமீப காலமாக 8-9 வயதிலேயே சிறுமிகள் பூப்பெய்திவிடுகின்றனர். இதற்கு மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் என இரண்டு காரணங்கள். சுற்றுச்சூழல் சார்ந்த காரணியில், உடல் பருமன் அதிகரிப்பதுதான் பெண்கள் பூப்பெய்துவதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. அவர்கள் சாப்பிடும், உபயோகப்படுத்தும் சில பொருட்களில் பெண் ஹார்மோன் என்று சொல்லக்கூடிய ஈஸ்ட்ரோஜென் அதிகமாக இருக்கிறது. ஈஸ்ட்ரோஜென்னில் ஜீனோ ஈஸ்ட்ரோஜென், பைட்டோ ஈஸ்ட்ரோஜென் என்று இரண்டு வகைகள் உண்டு. இதில் ஜீனோ ஈஸ்ட்ரோஜென் என்பது பிளாஸ்டிக் பொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், பதப்படுத்தப்பட்ட சில உணவுகள், ஃபேஷியல் போன்ற காஸ்மெட்டிக் பொருட்களில் அதிகமாக இருக்கிறது. சோயா போன்ற உணவுப் பொருட்களில் பைட்டோ ஈஸ்ட்ரோஜென் அதிகமாக உள்ளது. ஹார்மோன் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற பொருட்கள் மற்றும் உணவு வகைகளைப் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு ஈஸ்ட்ரோஜென் அதிகமாகி, பூப்பெய்தலும் மிகக் குறைந்த வயதிலேயே நிகழ்கிறது.
    மரபியல் ரீதியான பிரச்னையில், பூப்பெய்துவதைத் தூண்டும் எல்.ஹெச். மற்றும் எப்.எஸ்.ஹெச். ஹார்மோன்கள் இளம் வயதிலேயே அதிகமாகச் சுரப்பது ஒரு முக்கியக் காரணம். இவை தவிர, பிட்யூட்டரி சுரப்பியின் அருகிலேயே கட்டி உண்டாகுதல், தலையில் அடிபடுவது, மூளைக்காய்ச்சல் நோய், கருப்பையில் நீர்க்கட்டி உண்டாதல் போன்ற பிரச்னைகளால் பெண் குழந்தைகளுக்கு மேற்கண்ட ஹார்மோன்கள் முன்கூட்டியே சுரக்க ஆரம்பிக்கின்றன. சிறுவர்களுக்கு பிட்யூட்டரி சுரப்பி அருகில் கட்டி அல்லது பிட்யூட்டரி சுரப்பியில் பாதிப்பு, விரைப்பையில் கட்டி போன்ற காரணங்களால் பருவம் அடைதல் விரைவாக நடக்கிறது (இது வெளியே தெரிவது இல்லை என்றாலும், மன ரீதியாக சில மாற்றங்களை ஏற்படுத்தும்).
    ஒரு சிறுவனுக்கோ அல்லது சிறுமிக்கோ பருவம் அடைவதற்கான அறிகுறிகள் 7-8 வயதுக்கு முன்பாகவே தெரிய ஆரம்பித்தால், உடனடியாக என்டோகிரைனாலஜி அல்லது மகப்பேறு மருத்துவர்களைச் சந்தித்து உரிய சிகிச்சை பெற வேண்டும்.
    மிக சீக்கிரத்தில் பருவம் அடைவதால், 'என்ன பிரச்னை?’ என்று நினைக்கலாம். ஒரு ஆண் அல்லது பெண் பருவம் அடையும்போது அவர்களின் எலும்பின் வளர்ச்சி நின்று, ஒன்றுகூடுகிறது. இதனால் கடைசிக் கட்ட உயரம் என்பது குறைகிறது. பெண்களுக்கு உடல் ரீதியாக, சமூக ரீதியாகப் பல்வேறு பிரச்னைகளும் வர ஆரம்பிக்கிறது. இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க, மருத்துவச் சிகிச்சை மூலம் பூப்பெய்துதலை சில வருடங்கள் தள்ளிப்போட முடியும்'' என்கிறார் சென்னை செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் முதுநிலை நாளமில்லா சுரப்பிகள் சிகிச்சை நிபுணர் (என்டோகிரைனாலஜிஸ்ட்) ஆர்.பரத்.
    குழந்தைகள் இளம் வயதில் பூப்பெய்துவதைத் தவிர்க்க, ஊட்டச்சத்து மற்றும் உடல் எடை மேலாண்மை  நிபுணர் ஷைனி சந்திரன் கூறும் யோசனை இது...
    ''உடல் பருமன் அதிகரிப்பது மட்டும் அல்ல... உடல் உழைப்பு குறைந்துபோனதும்கூட இந்தப் பிரச்னைக்கான காரணம். எனவே, குழந்தைகளை ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கச் செய்யாமல், ஓடியாடி விளையாட உற்சாகப்படுத்த வேண்டும்.
    கொழுப்புமிக்க உணவு வகைகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடலாம். இறைச்சிக்காக பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளின் எடையை அதிகரிக்க ஹார்மோன் மருந்து வகைகள் தரப்படுகின்றன. எனவே பிராய்லர் வகைக் கோழிக் கறியைத் தவிர்த்து, நாட்டுக் கோழி இறைச்சியைச் சாப்பிடலாம்.
    கால்சியம் சத்துக்காக அதிக அளவில் பால் அருந்துவது தவறு. இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட காய்கறி, பழங்கள், கீரை வகைகளைச் சாப்பிடலாம். இவற்றில் கால்சியமும் நிறைய உள்ளது'' எனப் பட்டியல் இடுகிறார் ஷைனி.
    சிறுமிகள் பூப்பெய்தும்போது ஏற்படும் மன ரீதியான பாதிப்புகளைச் சரிசெய்வது குறித்துப் பேசும் மன நல மருத்துவர் செந்தில்வேலன், ''நம் கலாசாரத்தில், 'ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டால், அவள் திருமணத்துக்குத் தயார்’ என்பதை ஊராருக்குத் தெரியப்படுத்தும் நோக்கில் சடங்கு செய்வார்கள். இது அந்தப் பெண்களுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு பெண் பூப்படைந்துவிட்டாள் என்றாலே, 'ஆண்கள் எதிரில் செல்லக் கூடாது; தொட்டுப் பேசக் கூடாது’ என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் போடுவார்கள். நேற்றுவரை தன்னுடன் விளையாடிய பையன்களுடன் பேசவே கட்டுப்பாடு எனும்போது, அது அவர்களது மனதில் பெரும் குழப்பத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தும்.
    பருவம் அடையும்போது செக்ஸ் ஹார்மோன்கள் அதிக அளவில் சுரக்க ஆரம்பிக்கின்றன. இதனால் மன ரீதியாக சில பிரச்னைகள் எழும். வளர்நிலைப் பருவத்தில் ஒரு பெண் தன் வயதுக்கு நிகரான மற்ற பெண்களைப் பார்த்துத்தான் தன்னை ஒப்பிட்டுக்கொள்வார். பூப்பெய்தும் பருவத்தில், சக வயது நண்பர்களைவிட அவர்களது உயரம், உடல் எடை போன்றவை அதிகரிக்கும். இது அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.
    தவிர, முகப்பரு, மாதவிடாய் போன்ற மாற்றங்கள் அசௌகரியமாக, தினசரி வாழ்க்கையைப் பாதிக்கக் கூடியவையாக இருப்பதால், மன ரீதியான பாதிப்புகளும் அதிகரிக்கும்.
    சிறு வயதிலேயே ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டாலும், மனதளவில் அவள் இன்னமும் குழந்தையாகத்தான் இருப்பாள். இந்த மாதிரியான நேரத்தில் பெற்றோர்கள் அவளுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிப்பதற்குப் பதில், அன்பாக, ஆதரவாக இருக்க வேண்டும். அவளுக்குப் புரியும் விதத்தில் சில விஷயங்களை பக்குவமாக, நாசூக்காகச் சொல்லித்தர வேண்டும். பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் அவளுக்கு ஆதரவாக இருப்பதன் மூலமும் மன ரீதியாக எழும் ஏற்றத்தாழ்வுகளைத் தவிர்க்கலாம்'' என்கிறார் நம்பிக்கையோடு.
     
    தள்ளிப்போடுவது சாத்தியமே!
    சென்னை அடையாறைச் சேர்ந்த சைல்ட் மற்றும் அடலசன்ட் நியூராலஜிஸ்ட் மருத்துவர் வி.முருகன், ''சங்க காலத்தில், 'பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை’ என வகைப்படுத்தப்பட்ட பெண்ணின் வாழ்க்கைப் பருவங்களுக்கு இடையே இருந்த  இடைவெளி இப்போது சுருங்கிவிட்டது. 100 வருடங்களுக்கு முன்பு, சராசரியாக 15 முதல் 17-வது வயதில்தான் பெண்கள் பூப்பெய்தினார்கள். ஆனால், இன்றோ, 6 முதல் 13 வயதுக்குள் சிறுமிகள் பூப்பெய்திவிடுகின்றனர்.
    நம் மூளையில் 'ஹைபோதலாமஸ்’(hypothalamus)  எனும் ஒரு பகுதி பிறந்ததில் இருந்தே சுவிட்ச் ஆஃப் மோடில்தான் இருக்கும். உரிய வயது வரும்போது அந்த சுவிட்ச் ஆன் ஆகி பால் உணர்வுத் தூண்டுதலை ஏற்படுத்தும். அடுத்து, 'ஹைபோதலாமஸ்’ பிட்யூட்ரியைத் தூண்டிவிட்டு, மாதவிடாய் சுழற்சிக்கான ஹார்மோனைத் தூண்டும். அப்போது கட்டிகள் தோன்றும். இந்த கட்டிகள் ஹைபோதலாமஸிலும் வரலாம்; பிட்யூட்ரியிலும் வரலாம். பூப்பெய்தும் பருவத்தில், பெண்கள் உடல்வாகைப் பொறுத்து இந்தக் கட்டிகள் உருவாகும். சிறு வயதிலேயே கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டால், அதற்கான சிகிச்சைகள் செய்து பூப்பெய்தும் காலத்தை தள்ளிப் போடலாம்.
    குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்துக்கொண்டு, பாரம்பரிய உணவுப் பழக்கத்தையும் போதிய உடல் பயிற்சிகளையும் கற்றுத் தருவது பெற்றோர்களின் கடமை!''
    - ரேவதி
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: மழலைப் பருவத்திலேயே மலரும் மொட்டுகள் ! Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top