கர்ப்பக் காலத்தில் மட்டும் வந்து செல்லும் நோய்கள் தெரியுமா? ஆம், பெண்கள் கர்ப்பம் தரிக்கும்போது மட்டும் தோன்றும்... பிரசவம் முடிந்ததும் சொல்லாமல்கொள்ளாமல் போய் விடும் நோய்கள்.
''சர்க்கரை நோய், ரத்த சோகை, ரத்த அழுத்தம், கர்ப்பக் கால அதீதத் தொடர் வாந்தி... இந்த நான்கும் அவற்றில் முக்கியமானவை. குறிப்பாக, சர்க்கரை நோய்'' என்று தொடங்கினார்கள் கோவை மருத்துவர்கள் விஜய் வெங்கட்ராமன் - ஹரிணி தம்பதி. விஜய் வெங்கட்ராமன் சர்க்கரை நோய்ச் சிறப்புச் சிகிச்சை நிபுணர். ஹரிணி மகப்பேறு சிகிச்சை நிபுணர்.
''கர்ப்பக் காலத்தில், பெண்களைத் தாக்கும் சர்க்கரை நோயை, 'கர்ப்பக் கால சர்க்கரை நோய்’ என்பார்கள். ஏற்கெனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் கர்ப்பம் தரிப்பதில் இருந்து வேறுபட்டது இது.
பொதுவாக, கர்ப்பக் காலத்தில் தாக்கும் சர்க்கரை நோய் பிரசவத்துக்குப் பிறகு மறைந்துவிடுவது உண்டு. ஆனால், முறையாகக் கவனிக்கவில்லை என்றால், சிலர் நிரந்தர சர்க்கரை நோயாளிகளாகவே மாறிவிடும் அபாயமும் உண்டு. கர்ப்பக் காலத்தில் ஏற்படும் சர்க்கரை நோயானது உடல் பருமன், பேறுகாலப் பிரச்னைகள் மற்றும் சிசுவின் ஆரம்பக் கால உடல்நலக் குறைவு என அடுத்தடுத்தப் பல பிரச்னைகளுக்கும் காரணமாகிவிடும். கர்ப்பக் காலத்தில் சர்க்கரை நோயால் தாக்கப்பட்டவர்களின் குழந்தைகள், இளம் வயதிலேயே அதிக உடல் பருமனாலும் பிற்காலத்தில் சர்க்கரை நோயினாலும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.
பேறுகாலத்தில் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லை என்றால், உயர் ரத்த அழுத்தம், அதிக அளவு உதிரப்போக்கு, கருச்சிதைவு, சிக்கலான பிரசவம், உரிய காலத்துக்கு முன்பே பிரசவம் நிகழுதல், காலம் தாழ்ந்த பிரசவம், இதயம் போன்ற உறுப்புகளில் குறைபாடுகளுடன் குழந்தை பிறத்தல், அதிகஎடையுடன் பிறத்தல், குழந்தை இறந்தே பிறப்பது போன்ற சிக்கல்களைத் தோற்றுவிக்கக் கூடும். மேலும், சிறுநீர்த்தாரை மற்றும் யோனி ஆகிய பகுதிகளில் நோய்த்தொற்று ஏற்படும். விரைவிலேயே இவர்கள் இரண்டாம் நிலை சர்க்கரை நோயாளிகளாக மாறவும் வாய்ப்பு உண்டு. பிறக்கும் குழந்தைகளுக்கும் சுவாசக் கோளாறுகள், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
எனவே, கருத்தரித்த பெண்கள் அனைவரும் ரத்தத்தில் சர்க்கரை அளவைச் சோதித்துக்கொள்ளுவது மிக மிக அவசியம். கருத்தரித்த 24 வாரங்கள் முதல் 28 வாரங்களுக்கு உள்ளாக இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். ஒருவேளை சர்க்கரை நோய் கண்டறியப்பட்டால், தீவிரக் கண்காணிப்பு, உணவுக் கட்டுப்பாடு மற்றும் மருந்துகள் சிறந்த பலன்களை அளிக்கும். இவற்றை எல்லாம் தாண்டியும் சர்க்கரையின் தாக்கம் அதிகம் இருந்தால், இன்சுலின் மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கும்' என்கிறார்கள் விஜய்வெங்கட்ராமன் - ஹரிணி இருவரும்.
கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு வரக் கூடிய பிற நோய்களின் பிரச்னைகளைப் பற்றி விவரித்தார் மகப்பேறு மருத்துவர் கே.எஸ்.மகேஸ்வரி.
''கர்ப்பிணிகளை அல்லலுக்கு உள்ளாக்கும் நோய்களில் ரத்தசோகையும் முக்கியமானது. கர்ப்பிணியின் உடலில், போதுமான அளவு ரத்தம் இல்லையென்றால், அது தாய் - சேய் இருவரின் ஆரோக்கியத்தையும் பாதித்துவிடும். அதனால் முறையான சிகிச்சையும் சத்தான உணவுகளையும்கர்ப்பக் காலத்தில் எடுத்துக்கொள்வது மிக மிக முக்கியம். அதேபோல, உயர் ரத்த அழுத்தம் இருந்தால், தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் தாய்க்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாதபடி காப்பாற்றிக்கொள்ளலாம்.
சாதாரணமாகக் கர்ப்பிணிகளுக்கு காலையில் எழுந்ததும் லேசான தலை சுற்றலுடன் வாந்தி வருவது போன்ற உணர்வு இருக்கும்; இதைத்தான் 'மசக்கை’ என்கிறோம். கர்ப்பக் காலத்தின் ஆரம்பத்தில் தோன்றும் இந்தப் பிரச்னை சில மாதங்களில் மறைந்துவிடும். ஆனால், தொடர்ந்து இந்தப் பிரச்னை இருக்குமானால், இதனைக் 'கர்ப்பக் கால அதீதத் தொடர் வாந்தி’ (Hyperemesis Gravidarum) என்று சொல்வார்கள். கர்ப்பம் தரித்திருக்கும்போது ஏற்படும் ஹார்மோன்கள் மாற்றம் காரணமாக இந்த நிலை ஏற்படலாம். கர்ப்பம் தரித்து எட்டு முதல் 12 வாரங்களில் பீட்டா ஹ்யூமன் க்ரோனிக் கொனடோட்ரோஃபின் (Beta Human Chorionic Gonadotropin) என்னும் ஹார்மோன் அதிக அளவில் ரத்தத்தில் இருக்கும். அப்போது ஏற்படும் வாந்திப் பிரச்னை சிலருக்குப் பிரசவம் வரையிலும்கூட நீடித்து இருக்கும். இன்னும் சிலருக்கு பிரசவத்துக்குப் பின்னரும்கூட வாந்திப் பிரச்னை தொடரலாம். பசி, சோர்வு, அதிக நெடியுள்ள வாசனைகள் போன்றவையும் இந்தப் பிரச்னையைத் தீவிரப்படுத்தும் காரணிகள்.
உடல் இளைப்பு, உடலில் நீர் வற்றிப்போதல், மலச் சிக்கல், சத்துக் குறைபாடு, சுவைகளை அறிவதில் குறைபாடு, செரிமானக் குறைபாடு, ஹார்மோன்களின் அளவுகள் மாறுபடுவது, வாயில் எச்சில் ஊறிக்கொண்டே இருப்பது, காமாலை மற்றும் மன அழுத்தம் போன்றவற்றையும்கூட இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், உரிய தருணத்தில் சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால், எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியது இல்லை.
0 comments:
Post a Comment