நகங்களை பராமரிப்பது எப்படி? - தமிழர்களின் சிந்தனை களம் நகங்களை பராமரிப்பது எப்படி? - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Saturday, June 2, 2012

    நகங்களை பராமரிப்பது எப்படி?

    http://www.tamilmurasu.org/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_33644831181.jpgநகங்கள், கைகளின் அழகில் மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றை பராமரிப்பது மிகவும் அவசியம். நகங்களை பராமரிப்பது குறித்த ஆலோசனைகளை தருகிறார் தோல் மருத்துவர் தேவசேனா. அவர் கூறியதாவது: அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அகத்தின் அழகை பிரதிபலிப்பதில் நகத்துக்கும் பங்கு உண்டு. உடல் உள்ளுறுப்புகளில் ஏதாவது பாதிப்பு இருந்தால் நகம் அதை வெளிக் காட்டி விடும். எனவே நகங்கள் பாதிக்கப்பட்டால், அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.  நகங்களை முறையாக பராமரிக்க பலர் அக்கறை எடுத்து கொள்வது கிடையாது. வைட்டமின் சி குறைபாடு இருந்தால் நகங்கள் பாதிப்படையும். சில டென்ஷன் பார்ட்டிகளுக்கும் குழந்தைகளுக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும். இது உடலுக்கு கேடு விளைவிக்க கூடியது. நகக்கணுக்களை நோய் கிருமிகள் அதிகம் தாக்கும். நகம் கடிக்கும் போது இந்த கிருமிகள் உடலுக்குள் செல்வதால் எளிதில் நோய்களுக்கு ஆளாக நேரிடும்.

    உணவு சாப்பிடும் முன்பு கைகளை நன்கு கழுவ வேண்டும். பெண்கள் பாத்திரம் தேய்த்த பின்பு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் ரசாயனங்கள் நகக்கணுக்களில் தங்கிவிட்டால் நகங்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். அதேபோல் மலம் கழித்த பின்னரும் சோப்பு போட்டு கைகளை நன்றாக கழுவ வேண்டும். குழந்தை பருவம் முதலே இத்தகைய பழக்கங்களை வாடிக்கையாக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் நக பராமரிப்பில் தனிகவனம் செலுத்துவது அவசியம். கை நகங்களை போலவே கால் நகங்களையும் முறையாக பராமரிக்க வேண்டும்.
    பெரும்பாலான நோய்தொற்றுகளுக்கு நகமே முக்கிய காரணமாக உள்ளது. எனவே நகங்களை முறையாக பராமரிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பேணலாம். பெடிக்யூர், மெனிக்யூர் என நகங்களை பராமரிக்க பிரத்யேக பராமரிப்பு முறைகளும் சாதனங்களும் உள்ளன. இதற்கென அழகு நிலையங்கள் இருந்தாலும் வீட்டிலேயே செய்து கொள்வதும் எளிது. வாரத்தில் 2 அல்லது 3 முறை இந்த பராமரிப்பு முறையை செய்து கொள்ளலாம்.

    நகங்களில் அடிபட்டாலோ, சொத்தை, நகச்சுற்று போன்ற பாதிப்புகள் இருந்தாலோ மருத்துவ சிகிச்சை பெறுவதே பாதுகாப்பானது. மருத்துவ குணம் கொண்ட மருதாணி இலைகளை அரைத்து கைகளில் இடுவது நகங்களை பாதுகாப்பதோடு, உடலுக்கும் குளிர்ச்சி தரும். கடைகளில் பொடியாகவும், கூழாகவும் கிடைக்கும் மருதாணியில் மருத்துவ குணம் இருப்பதில்லை. தரமான நெயில் பாலிஷ்களை உபயோகிப்பது நகங்களுக்கு பாதுகாப்பானது. அடிக்கடி நகக்கணுக்களில் மிருதுவான பிரஷ் அல்லது துணிகளைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். நகம் வெட்டும் போது சதைப்பகுதி பாதிக்கப்படாமல் கவனமாக வெட்ட வேண்டும். நகங்கள் சிலருக்கு உடைந்து போகும். இதற்கு கால்சியம் குறைபாடுதான் காரணம். உணவில் அதிகம் கால்சியம் சேர்த்துக் கொள்வதாலும் மருத்துவர் பரிந்துரையின் பேரில் கால்சியம் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதாலும் இந்த பாதிப்பு சரியாகும். சர்க்கரை நோயாளிகள் இதில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். காய்கறிகள், பழங்கள் என ஊட்டச்சத்துள்ள சரிவிகித உணவு சாப்பிடுவதன் மூலம் நகங்களை பாதுகாக்கலாம்.


    ரெசிபி

    நெல்லிக்காய் பச்சடி: பச்சை நெல்லிக்காய் அல்லது காய்ந்த நெல்லிக் காயை வெந்நீரில் வேகவைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். இதை புளிக்காத தயிரில் கலக்கி எண்ணெயில் கடுகு போட்டு தாளிக்க வேண்டும். இதை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். பச்சை நெல்லிக்காய் சீசனில் மட்டுமே கிடைக்கும். ஆனால் நெல்லிமுள்ளி எனப்படும் நெல்லிக்காய் வற்றல் ஆண்டு முழுவதும் கிடைக்கும். நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

    பைனாப்பிள் ரவா பொங்கல்: ரவை, சிறுபருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் சிறிது நெய் விட்டு வறுக்க வேண்டும். இதை சரியான அளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்ததும் சர்க்கரை அல்லது வெல்லம் தேவைக்கேற்ப சேர்த்து மீண்டும் சிறிது நேரம் வேக வைக்க வேண்டும். இதில் பொடியாக அரிந்த பைனாப்பிள் துண்டுகள் ஒரு கப் சேர்த்து குழைய வேக விடவும். பின்னர் சிறிதளவு பைனாப்பிள் எசன்ஸ், கலர் சேர்த்து இறக்கவும். நெய்யில் முந்திரி, பாதாம், திராட்சை வறுத்து செர்ரி பழங்கள் சேர்த்து கலந்து கொள்ளலாம். தண்ணீருக்கு பதில் பால் சேர்த்தும் தயாரிக்கலாம்.

    எலுமிச்சை காக்கடா: சிறிது தண்ணீருடன் எலுமிச்சை பழச்சாறு கலந்து கொள்ள வேண்டும். இந்த தண்ணீரை கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தி பதத்துக்கு கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும். இதை சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் மெல்லிய ரொட்டிகளாக செய்து கல்லில் போட்டு அப்பளம் போல் கரகரப்பாக சுட்டெடுக்கவும். மாவில் வெந்தயக் கீரையை பொடியாக நறுக்கி சேர்த்து பிசைந்தும் இதை செய்யலாம். ஒன்று அல்லது இரண்டு சொட்டு எண்ணெய் விட்டால் போதும். மிதமான தீயில் வைத்து ரொட்டிகள் உப்பாமல் துணியால் அழுத்தி அப்பளம் போல் மொறுமொறுப்பாக சுட்டு எடுத்து ஏர்டைட் கன்டெய்னரில் போட்டு வைத்தால் மாதக் கணக்கில் கெடாது.

    டயட்

    உடல் ஆரோக்கியமாக இருக்க நகங்களையும் முறையாக பாதுகாப்பது அவசியம். வைட்டமின் சி ஊட்டச் சத்து நகங்கள் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் சி அதிகம் உள்ள காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்து கொள்ளலாம். எலுமிச்சை, சாத்துக்குடி, கமலாஆரஞ்சு, பைனாப்பிள், கொய்யா, நெல்லிக்காய் ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. தானியங்களில் முளை கட்டிய பயிறு வகைகளை வாரம் 2 அல்லது 3 முறை சாப்பிடலாம். கொத்மல்லி, புதினா, கருவேப்பிலை, அகத்திக் கீரை போன்ற கீரை வகைகளை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக முருங்கைக் கீரை நகத்தை பாதுகாக்க உதவும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியத்தை பேண உதவும் கால்சியம், இரும்பு, வைட்டமின் சத்துகள், ஆன்டிஆக்சிடென்ட்ஸ் ஆப்பிளில் அதிகம் உள்ளது. நெல்லிக்காயில் வைட்டமின், கால்சியம் அதிகம் இருப்பதுடன் எளிதாகவும் கிடைக்கும். உணவில் சேர்த்தால் எலும்புகள், நகங்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும். கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. தினமும் படுக்க செல்லும் முன்பு இளஞ்சூடான நீரில் கை,  கால்களை நன்கு தேய்த்து கழுவினால் நகங்களின் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் அதிகரிக்கலாம்.

    பாட்டி பாட்டி

    *  நகங்கள் பளபளப்பாக இருக்க நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி நகங்களில் மசாஜ் செய்யலாம்.
    *  புதினா இலை எண்ணை கொண்டு மசாஜ் செய்தால் நகத்தை சுற்றி ஏற்படும் வீக்கம், வலியை குணமாகும்.
    *  நகச்சுத்தியால் அவதிப்படுபவர்கள் வெற்றிலையில் சிறிதளவு சுண்ணாம்பு கலந்து அரைத்து நகத்தில் வைத்துக் கட்டினால் குணமடையும்.
    *  இளஞ்சூடான நீரில் துளசி, புதினா இலை போட்டு 10 நிமிடம் நகங்கள் மூழ்குமாறு வைத்தால் கிருமிகள் அழிந்து நகம் சுத்தமாகும்.
    *  நகம் கருப்பாக சொத்தையுடன் இருந்தால் துத்தி இலையை சாம்பிராணியுடன் சேர்த்து அரைத்து பற்றுப் போட்டால் மறையும்.
    *  எலுமிச்சை ஆரஞ்சு பழத்தோல்களை காய வைத்து பொடியாக்கி சிட்டிகை உப்பு சேர்த்து நல்லெண்ணெயில் குழைத்து தொடர்ந்து நகங்களில் தடவினால் பளபளப்பு கூடும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: நகங்களை பராமரிப்பது எப்படி? Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top