கண்களில் அதிக கவனம் தேவை... - தமிழர்களின் சிந்தனை களம் கண்களில் அதிக கவனம் தேவை... - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Tuesday, July 15, 2014

    கண்களில் அதிக கவனம் தேவை...

    மனித உறுப்புகளில் மிக மென்மையானவை, மிக நுட்பமானவை கண்கள். அதனால் கோடை உஷ்ணம் அதிகமாகும்போது கண்கள் பாதிக்கப்படும். கண்களை சரியாக பாதுகாக்கா விட்டால், உஷ்ணத்தால் கண்களில் சொறி, அலர்ஜி, கண் சிவந்து போகுதல், சீழ்கட்டி ஏற்படுதல், கண்கள் உலர்ந்து போகுதல், கார்ணியல் அல்சர் போன்ற நோய்கள் வரக்கூடும். கோடையில் என்னென்ன மாதிரியான கண்நோய்கள் வரும்? அவைகளை எப்படி தவிர்க்கலாம்? என்று பார்ப்போம்.. 

    அல்ட்ரா வயலெட் ஆபத்து:  
    கண்களில் அதிக கவனம் தேவை
    கோடையில் வெயில் அதிகமாக இருப்பதால், சூரியனில் இருந்து வரும் அல்ட்ரா வயலெட் கதிர்கள் கண்களை பாதிக்கும். தொடர்ந்து அவை தாக்கும்போது, நடுத்தர வயதை கடந்த பின்பு வரக்கூடிய கண்புரை நோய், அதற்கு முன்பே வந்து விடும். அல்ட்ரா வயலெட் கதிர்கள் பார்வை படலமான ரெட்டினாவையும் தாக்கி பாதிக்கச் செய்யும். 

    அதனால் வெயிலில் நின்று வேலை பார்க்கும் தொழிலாளர்கள், போக்குவரத்து போலீசார், மீனவர்கள் போன்றவர்கள் கண் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கண்ணுக்குள் வரும் மெலனோமா, கண் ஓரத்தில் வரும் பேசல்செல் போன்ற புற்றுநோய்கள் ஏற்படவும் அல்ட்ரா வயலெட் கதிர்கள் ஒருவகையில் காரணமாக இருக்கின்றன. 

    எப்படி தவிர்ப்பது?  

    - காலை பத்து மணி முதல் பிற்பகல் 4 மணிவரை வெயில் நேரடியாக கண்களில் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

    - வெயிலில் நின்று வேலை பார்ப்பவர்கள், அடிக்கடி சுத்தமான குளிர்ந்த நீரால் கண்களை கழுவவேண்டும். 

    - கண்களில் நேரடியாக வெயில் விழாத அளவுக்கு தலையில் தொப்பி அணியவேண்டும். குடையும் பிடித்துக்கொள்ளலாம். அல்ட்ரா வயலெட் கதிர்களில் இருந்து 100 சதவீத பாதுகாப்பு அளிக்கும் கண்ணாடிகளையும் அணியலாம். வெயில் பயணத்தில் ஹெல்மெட் அணிவது கண்களுக்கும் பாதுகாப்புதரும். 

    அலர்ஜி: கோடைகாலத்தில் கண்களில் பலருக்கும் ஏற்படும் பிரச்சினை இது. கோடை காலத்தில் காற்றில் பறக்கும் தூசுகளும், மாசுகளும், உஷ்ணமான சூரிய கதிர்களும் கண்களை தாக்கும்போது அலர்ஜி ஏற்படும். காற்று மாசுவால் சொறி மற்றும் கண் சிவந்துபோகுதலும் தோன்றலாம். கோடைகாலத்தில் கண்களுக்கு எதனால் அலர்ஜி ஏற்பட்டது என்பதை கண்டறிந்து களைவது சிரமம் என்பதால், அலர்ஜி ஏற்பட்டதும் சிகிச்சை பெறுவதுதான் சிறந்த வழி. 

    தொடக்கத்திலே கண்டறிந்தால் இதற்கான சிகிச்சை எளிது. பாதிப்பு அதிகமாகி விட்டால் ஸ்டீராய்டுகள் பயன்படுத்தவேண்டியதாகிவிடும். கண் சிவப்பு நோய்: கண்களின் வெள்ளைப்படல பகுதியிலும், இமையின் உள் பகுதியிலும் ஒரு நுட்பமான பாதுகாப்பு அடுக்கு உள்ளது. அதன் பெயர் கண்ஜங்க்டிவா. அது சிவந்து, வீங்குவதையே ‘கண் சிவப்பு நோய்’ என்கிறோம். 

    காரணங்கள்? 

    - வைரஸ், பாக்டீரியா போன்றவைகளால் ஏற்படும் கிருமித் தொற்று. 

    - தூசு, மாசு, உயிரினங்களில் இருந்து உருவாகும் பொடுகு, சில வகை மருந்துகள், கிரீம்கள் மற்றும் காண்டக்ட் லென்சுகளை முறையாக பயன்படுத்தாமல் இருத்தல். 

    - சிலவகை அமிலங்கள், காண்டக்ட் லென்சுகளை சுத்தப் படுத்தும் திரவம், நீச்சல் குளங்களில் பயன்படுத்தும் பிளீச்சிங் பவுடர் பயன்பாடு. 

    - உஷ்ணம், ரேடியேஷன், அழுத்தம் போன்றவைகளால் கண்களில் ஏற்படும் காயங்கள். இதுபோன்ற காரணங்களால் கண் சிவக்கும் நோய் உருவாகிறது. இந்த நோய் தன்மை தெரிந்ததும் சுத்தமான நீரால் கண்களை மென்மையாக கழுவவேண்டும். ‘ஐஸ் பேக்’ மூலம் கண்களை குளிரச் செய்யவேண்டும். 

    இது அடுத்தவர்களுக்கும் தொற்றும் என்பதால், நோய் பாதிப்பு கொண் டவர் பயன்படுத்திய உடைகள் மற்றும் டவலை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. சுய சிகிச்சை எதுவும் செய்யாமல் டாக்டரிடம் சென்று சிகிச்சை பெறவேண்டும். 

    ‘டிரை ஐ’ எனப்படும் கண் உலர்தல்: கண் நீரின் தரத்திலும், அளவிலும் பற்றாக்குறை ஏற்படும்போது கண் உலர்தல் ஏற்படுகிறது. இதன் மூலம் கண்களில் தற்காலிக டியர் பிலிம் உருவாகி, விழித்திரையில் ஒருவித எரிச்சல் கலந்த அவஸ்தையை உருவாக்கும். கண்களில் வலி, வறட்சி, சிவந்துபோகுதல், கண்களை மூட- திறக்க சிரமப்படுதல் போன்றவை ‘கண் உலர்‘ நோயின் அறிகுறிகள். 

    வறண்ட வானிலையும் சூடான காற்றும் இந்த அறிகுறிகளை அதிகப்படுத்தும். தொடர்ந்து கம்ப்யூட்டரில் வேலை பார்த்தாலோ, டி.வி. பார்த்தாலோ, புத்தகங்கள் வாசித்தாலோ கண்களை சிமிட்டுவது குறையும். அதனால் கண் உலர் நோயின் அவஸ்தை அதிகரிக்கும். 

    கண்களில் உருவாகும் சீழ்கட்டிகள்: கண் இமைகளில் இருக்கும் சுரப்பிகளில் ஏற்படும் கிருமித் தொற்றுகளால் இந்த சீழ்கட்டிகள் தோன்றுகின்றன. பழுப்பு நிறத்தில் தோன்றும் அவைகள் வலியை உருவாக்கும். அந்த கட்டிகள் உடைந்தால் சீழும், ரத்தமும் கலந்து வெளியேறும். 

    சுத்தமற்ற கைகளால் கண்களை கசக்குவது, அதிக நேரம் கம்ப்யூட்டரில் பணியாற்றுவது, ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக புத்தகங்கள் வாசிப்பது போன்றவைகளால் கண்களுக்கு அதிக வேலை நெருக்கடி கொடுக்கும்போது, இந்த கட்டிகள் தோன்றும். கம்ப்யூட்டரில் தொடர்ச்சியாக பணிபுரிபவர்கள் 20 நிமிடங்கள் வேலை பார்த்ததும், 20 வினாடி கண்களுக்கு ஓய்வு தரவேண்டும். 

    அப்போது 20 அடி தூரத்தில் பார்வையை செலுத்தி, கண்களுக்கு குளிர்மையான இயற்கை காட்சிகளை பார்க்க வேண்டும். கோடைகாலத்தில் ஏற்கனவே அதிக உஷ்ணம் இருந்தாலும், உள்ளங்கைகளை உரசி கண்களுக்கு சூடுகொடுப்பது, சொட்டு மருந்துகள் பயன்படுத்துவது இதற்கான சிகிச்சை முறையாகும். டாக்டர் கூறும் சிகிச்சை மற்றும் பராமரிப்பு முறைகளை மட்டுமே கடைபிடிக்கவேண்டும். 

    கார்ணியல் அல்சர்:  

    கார்ணியாவில் தொற்றுக்கிருமிகளால் ஏற்படும் காயத்தையே கார்ணியல் அல்சர் என்று கூறுகிறோம். மணல் போன்ற தூசு மற்றும் மாசுவால் இந்த கிருமி தொற்று தோன்றும். கண் சிவந்து போகும் நோயை கவனிக்காமல் விட்டாலும், சுகாதாரமற்ற முறை யில் காண்டக்ட் லென்ஸ்களை பொருத்தினாலும் கார்ணியல் அல்சர் தோன்றலாம். 

    அறிகுறிகள்: அதிகமான வலி, சிவந்துபோகுதல், பார்வை மங்குதல், நீர்வழி தல், வெளிச்சத்தை பார்க்கும்போது கண்களில் அவஸ்தை ஏற் படுதல் போன்றவை இதன் அறிகுறிகள். இதற்கு கண் சிகிச்சை நிபுணரை சந்திக்கவேண்டும். 

    நீச்சல் குளத்தில்: கோடைகாலத்தில் சிறுவர், சிறுமிகள் ‘சம்மர் கேம்ப்’ பயிற்சிகளுக்கு செல்கிறார்கள். பெரியவர்கள் உஷ்ணத்தை குறைக்க நீச்சல் குளங்களில் குளிக்கவும் விரும்புகிறார்கள். நீச்சல் குளங்களில் தண்ணீரை சுத்தப்படுத்த குளோரின் கலக்கப்படுகிறது. அதன் அளவை அதிகரிக்கும்போது அதில் இருக்கும் ரசாயனம் கண்களை பாதிக்கும். அதனால் நீச்சலின் போது பயன்படுத்தும் ‘ஸ்விம்மிங் கோகிள்ஸ்’ என்ற கண்ணாடியை அணிந்து கொள்ளவேண்டும். நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வந்த பின்பு கண்களை சுத்தமான தண்ணீரால் நன்றாக கழுவவும் வேண்டும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: கண்களில் அதிக கவனம் தேவை... Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top