உடலுக்குள் எங்கேயோ ஏதோ பிரச்னை என்பதற்கான எச்சரிக்கை மணிதான் வலி! ஆனால், அதை அப்படிப் பார்க்காமல், வலி வந்தால் ஏதோ ஒரு பெயின் கில்லர் அல்லது பெயின் பாம் உதவியோடு அந்த நிமிடத்தைக் கடத்துபவர்களே நம்மில் அதிகம்.
‘‘எல்லா வலிகளும் அப்படி அலட்சியப்படுத்தக்கூடியவை அல்ல. வலிக்கிற இடத்தில்தான் பிரச்னை இருக்க வேண்டும் என்றும் அவசியமில்லை. சில நேரங்களில் வலி ஓரிடத்திலும், நோய் வேறிடத்திலும் கூட இருக்கலாம். அதற்கான சரியான கண்டுபிடிப்பும் சிகிச்சையும் அவசியம்’’ என்கிறார் வலி நிர்வாக சிறப்பு சிகிச்சை நிபுணர் குமார்.
‘‘கழுத்து மற்றும் முதுகெலும்பு சந்திப்புகளில் உள்ள எலும்புகள் தேய்மானமடைந்தால், அது தலைவலியாகத் தன் அறிகுறியைக் காட்டலாம். தலைவலிக்கான மருந்துகளோ, சிகிச்சையோ பலனளிக்காது. நாள்பட்ட தலைவலி, குறிப்பாக பின் மண்டைத் தலைவலி வந்தால் கழுத்து எலும்பு சந்திப்புத் தேய்மானமா என்பது கண்டறியப்பட்டு, அந்தச் சந்திப்புகளில் ஊசி மூலம் மருந்தைச் செலுத்தி, வலியைக் குணப்படுத்தலாம்.
* முதுகுத் தண்டுவடத்தில் உள்ள கழுத்து எலும்பு தேய்ந்திருந்தால், கை வலி வரலாம். விரல்கள் மரத்துப் போவது, முழங்கை, மணிக்கட்டு, தோள்பட்டை பகுதிகளில் வலி போன்றவையும் வரலாம். கையில் வலிக்கிற இடத்தில் களிம்பு தேய்ப்பதாலோ, பட்டைகள் கட்டுவதாலோ, வலி சரியாகாது. கழுத்தெலும்பு நரம்பை அழுத்தும் எலும்பைக் கண்டுபிடித்து, நவீன சிகிச்சை மூலம் சரி செய்வதுதான் தீர்வு.
* இடுப்பெலும்பு சந்திப்பில் தேய்மானம் இருந்தால் இடுப்பில் மட்டுமின்றி, உடலில் எங்கு வேண்டுமானாலும் வலி வரலாம். உதாரணத்துக்கு தொடை, கணுக்கால், கால் வலிகள் இதன் அறிகுறிகளாக இருக்கக்கூடும்.
* முதுகெலும்பு சந்திப்புகளில் உண்டாகிற வலி, மெல்ல பக்கவாட்டில் பரவி, நெஞ்சு வலியாகவோ, வயிற்று வலியாகவோ, பின்முதுகு வலியாகவோ
உணரப்படலாம். இதைத் தசைவலி என்றோ, வாயுப்பிடிப்பு என்றோ தவறாகப் புரிந்துகொண்டு மசாஜ் செய்வதோ, மருந்துகள் எடுத்துக் கொள்வதோ கூடாது. முதுகெலும்பு சந்திப்பு அல்லது டிஸ்க் பிதுங்குவதால் சில சமயங்களில் அந்த இடத்தில் வலி இல்லாமல், வேறிடத்தில் வலி வரும். சரியான மருத்துவரால் மட்டுமே வலிக்கான காரணத்தைக் கண்டறிந்து, தகுந்த சிகிச்சையை அளிக்க முடியும்.
* வெள்ளைப்படுதல் பிரச்னையால் பாதிக்கப்படுகிற பெண்களுக்கு கீழ் இடுப்பு வலியோ, முதுகுவலியோ வரலாம். வெள்ளைப்படுதலுக்கு சிகிச்சை கொடுத்தாலே இடுப்பு மற்றும் முதுகுவலிகள் காணாமல் போகும்.
* நெஞ்சில் பாரம், வலி போன்றவை மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் சில நேரங்களில் கை வலி, தோள்பட்டை வலி, கழுத்து மற்றும் தாடை வலிகள் கூட மாரடைப்பின் அறிகுறிகளாக வெளிப்படலாம். கூடவே பட படப்பு, மயக்கம், மூச்சுத் திணறல், தலைசுற்றலும் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானது. எனவே தலை முதல் பாதம் வரை எந்த இடத்தில் வலி வந்தாலும், அதை அலட்சியம் செய்யவோ, சுய மருத்துவம் செய்யவோ நினைக்காமல், மருத்துவரை அணுகுவதே சிறந்தது!’’
0 comments:
Post a Comment