அழகு நிலையங்களால் தலைமுடிக்கு சிக்கல்! (Thanks to Vikatan) - தமிழர்களின் சிந்தனை களம் அழகு நிலையங்களால் தலைமுடிக்கு சிக்கல்! (Thanks to Vikatan) - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Friday, March 1, 2013

    அழகு நிலையங்களால் தலைமுடிக்கு சிக்கல்! (Thanks to Vikatan)

    அழகு நிலையங்களால் தலைமுடிக்கு சிக்கல்!
    இதிகாசக் காலம் தொடங்கி இன்றைய காலம் வரை முடி என்றாலே பிரச்னைதான். முடியின் வாசனையை ஆராய்ந்த பாண்டிய மன்னன் பஞ்சாயத்து தொடங்கி முடியை எப்படி எல்லாம் அழகுப்படுத்திக் கொள்வது என மண்டையை உடைத்துக்கொண்டு ஆராயும் இன்றைய இளைய தலைமுறை வரை 'முடி’ப் பிரச்னை முடிவுக்கு வராத ஒன்றுதான். முடியைச் சுருள் முடியாக்கிக்கொள்வதும், பிறகு சுருள் முடியை ஸ்ட்ரெய்டனிங் செய்து கொள்வதுமாக ஒரு சிலர் ஆபீஸ் போய்வருவது மாதிரி அழகு நிலையங்களுக்குப் போய்வரத் தொடங்கிவிட்டார்கள். நவீனம் என்கிற பெயரில் இப்படி முடியைப் போட்டுப் படுத்தி எடுப்பதால் ஏதும் பிரச்னை ஏற்படுமா?

    தோல் சிகிச்சை நிபுணர் ரத்னவேல் மற்றும் கேர் அன்ட் க்யூர் க்ளினிக் அரோமா தெரபிஸ்ட் கீதா அசோக் ஆகியோர் இதுகுறித்து விரிவாக விளக்கினார்கள்.

    பொடுகு சிகிச்சை

    ''சில பெண்கள் பொடுகைச் சரி செய்ய மசாஜ் செய்துகொள்வார்கள்.

    பொடுகை ஏற்படுத்தக்கூடிய கிருமி நம் உடம்பிலேயே இருக்கும் நல்ல கிருமி. வெளியில் இருந்து வரும் கிருமிகளைத் தடுத்து எதிர்த் தாக்குதல் நடத்துவதுதான் அதன் வேலை. ஆனால், சிலருக்கு அதுவே எதிர்மறையான விளைவுகளைத் தரும்போதுதான் பொடுகுப் பிரச்னை அதிகரிக்கிறது. நம் உடம்புடன் இயற்கையாக ஒட்டிப் பிறந்த ஒரு விஷயமான பொடுகுக்காக சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கும், புலி வாலைப் பிடிப்பதற்கும் அதிக வித்தியாசம் இல்லை. அதைத் தொட்டுவிட்டால் அவ்வளவுதான். தொடர்ந்து அதில் கைவைத்துக் கொண்டே இருக்கவேண்டி இருக்கும்.

    நன்றாகத் தலைமுடியைப் பராமரிப்பதால் மட்டுமே அதைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். தினமும் தலைக்குக் குளித்து சுத்தமாக வைத்திருந்தாலே பாதிப் பிரச்னை குறைந்துவிடும். அமிலங்களைப் பயன்படுத்தி மசாஜ் செய்வதால், ஏற்கனவே இருக்கிற பிரச்னை மேலும் கூடும்; முடிக்குப் பாதிப்பு ஏற்படும்.'' என்றவர்கள், முடிக்காக எடுத்துக்கொள்ளும் நிகழ்வுகளையும் அதன் பாதிப்புகளையும் பட்டியலிட்டார்கள்.


    கருப்புச் சாயம் (ஹேர் டை)


    ''தலைமுடிக்கு சாயமிடும் போது தோலில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் இந்தியாவில் கிடைக்கும் சாயங்களில் 'அமோனியா’ இருக்கிறது. இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. அதனால், எச்சரிகையாக இருக்க வேண்டும். ஒவ்வாமையும், அரிப்பும் சின்னச் சின்னக் கொப்புளங்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு. தலையில் சாயம் பூச உகந்த நேரம் மாலை அல்லது இரவு. பகலில் சாயத்தைப் பூசிக்கொண்டு வெயிலில் சென்றால் அது தலை வழியாகக் கீழ் இறங்கி விரும்பதகாத விளைவுகளை ஏற்படுத்திவிடும். இந்தச் சாயம் தோல் வழியாகக் கிரகிக்கப்பட்டு, ரத்தத்தில் கலக்கக்கூடிய அபாயம் இருக்கிறது. அந்த ரத்தத்தை சுத்திகரிக்கும்போது சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். மேலும் தோலில் உள்ள மெலனின் பாதிக்கப்பட்டு முகத்தில் நிற மாற்றத்தையும் ஏற்படுத்திவிடும். எனவே, முடிந்த வரை தலைச் சாயம் பூசுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

    கூந்தலை நேராக்குதல் (ஹேர் ஸ்ட்ரெய்டனிங்)

    பொதுவாக ஒரு முறை ஸ்ட்ரெய்டனிங் செய்தால் அது ஆறு மாதம்வரை தாக்குப்பிடிக்கும். அடிக்கடி ஸ்ட்ரெய்டனிங் செய்யக்கூடாது. நம் தலைமுடியில் ஏழு அடுக்குகள் உள்ளன. கடைசி அடுக்கை 'சல்ஃபர் பான்ட்’ என்பார்கள். இது சங்கிலித் தொடர் போன்ற அமைப்பைக் கொண்டது. கூந்தலை நேராக்கும்போது இந்தச் சங்கிலித் தொடர் சிதைக்கப்பட்டுத்தான் நேராக்கப்படுகிறது.

    முதலில் ஸ்ட்ரெய்டனிங் க்ரீமைத் தலையில் தடவி, குறிப்பிட்ட நேரம் வரை ஊற வைப்பார்கள். பின்னர் கூந்தலை அலசிவிட்டு 'நியூட்ரலைஸர்’ (நேராக்கப்பட்ட கூந்தலை அதே தன்மையில் நீடிக்க இது உதவும்) தடவிச் சிறிது நேரம் கழித்துக் கூந்தலை அயர்னிங் (இஸ்திரி) செய்துவிடுவார்கள். (தலைமுடியில் உள்ள சிக்குகளையும் சுருட்டைகளையும் அகற்ற இது உதவுகிறது. இதற்கென ஒரு ஜெல்லைத் தடவி, சின்னச் சின்னதாகக் கால் எடுத்து இரும்புக் கம்பியால் நீவி விடுவார்கள்.

    கிரீம்களில் இருக்கும் ரசாயனம் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். தவிர, தலையில் சூடேற்றுவதால்தான் கூந்தல் நேராகிறது. அளவுக்கு அதிகமாகச் சூடுபடும்போது முடியில் உள்ள நிறமி போய்விடும். ஒரு கட்டத்தில் முடி செம்பட்டை ஆகிவிடும்; கூந்தல் உடைந்து உதிர ஆரம்பிக்கும். ஏற்கெனவே வறண்ட கூந்தல் உடையவர்கள், முடியை நேராக்க முயன்றால் கூந்தல் மிகவும் பாதிக்கப்படும். குறுகிய காலத்தில் சுருங்கி, வலுவிழந்துவிடக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.


    சுருட்டை முடியாக்குதல் (பெர்மிங்)

    நேராக இருக்கும் கூந்தலைச் சுருட்டையாக்குவதைத்தான் பெர்மிங் என்கிறார்கள். இதற்கான ஒரு லோஷன் தடவி 'பெர்மிங் ராட்’ என்ற கம்பியைப் பயன்படுத்தி, சின்னச் சின்னதாகக் கால் எடுத்து முடியை அதில் சுற்றி ரப்பர் பேண்ட் அல்லது க்ளிப் போட்டு விடுவார்கள். அதன் பின் ஒரு மணி நேரம் கழித்து சுருண்டு வந்திருக்கும் முடியில் மற்றொரு கிரீமைத் தடவுவார்கள். அது கூந்தலை சுருட்டையாகவே சில மாதங்கள்வரை வைத்திருக்கும். இந்த கிரீம் மற்றும் லோஷன்களால் முடி வலுவிழந்துவிடும்.


    வண்ணச் சாயம் பூசுதல்

    சிலர் தங்கள் நரை முடியை மறைப்பதற்காகக் கலரிங் செய்ய விரும்புவார்கள். கலரிங் செய்வதற்காக ஜெல், மஸ்காரா, கிரேயான்ஸ், வண்ணக் கூந்தல் ஸ்பிரேக்கள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. தவிர்க்க முடியாத காரணங்களால் தலைக்கு வர்ணம் செய்த பின், அதற்கென உள்ள ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சாயம் ஏற்றப் பயன்படுத்தும் பொருட்கள் தரமானவைதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: அழகு நிலையங்களால் தலைமுடிக்கு சிக்கல்! (Thanks to Vikatan) Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top