நீரில் தத்தளிப்பவரை காப்பது எப்படி?. - தமிழர்களின் சிந்தனை களம் நீரில் தத்தளிப்பவரை காப்பது எப்படி?. - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Friday, September 19, 2014

    நீரில் தத்தளிப்பவரை காப்பது எப்படி?.

    நீரில் தத்தளிப்பவரை காப்பது எப்படி?.

    ழவேற்காடு துயரத்தை மறக்க முடியுமா என்ன? ஏரியில், சுற்றுலாப் பயணிகள் படகு ஒன்று கவிழ்ந்ததில், 22 உயிர்கள் பறிபோயின.   
    இப்படி ஒரு துயரச் சம்பவம் இனி ஒருமுறை நடக்காமல் நம்மைத் தற்காத்துக்கொள்ள, நீச்சல் உள்ளிட்ட 'உயிர் பாதுகாப்புப் பயிற்சி’களைக் கற்றுத் தேர்வது அவசியம். குறைந்தபட்சம் அவசரக் காலங்களில், பாதிக்கப்பட்டோரின் உயிரை மீட்டு எடுக்கும் முதல் உதவி முறைகளையாவது தெரிந்துவைத்திருத்தல் நலம். இந்த வரிசையில், தண்ணீரில் மூழ்கித் தத்தளிப்பவர்களைக் காப்பாற்றியதும் செய்யக்கூடிய முதல் உதவி முறைகள் பற்றி இங்கே விவரிக்கிறார்கள் 'சைல்டு ட்ரஸ்ட் மருத்துவமனை’யின் அவசரச் சிகிச்சைப் பிரிவு குழந்தை நல மருத்துவர்கள் ஜனனி சங்கர், ராதிகா.

    ''இயல்பாகவே குழந்தைகள் தண்ணீரில் விளையாடுவதற்கு அதீத ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், அதன் பின்னால் இருக்கக் கூடிய ஆபத்தை அறிய மாட்டார்கள். அதனால், பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளுக்குத் தண்ணீரால் ஏற்படும் ஆபத்துகள் அதிகம்.
    வீடுகளில் உள்ள தண்ணீர்த் தொட்டி, கழிவு நீர்த் தொட்டிகளில் சில சமயம் குழந்தைகள் தவறி விழுந்துவிடுவார்கள். இதுபோன்ற சமயங்களில், மூச்சுவிட முடியாமல் தத்தளிக்கும் குழந்தைகளின் வாய், மூக்கு வழியாக நுரையீரல் மற்றும் வயிற்றுக்குள் அதிகமான தண்ணீர் சென்றுவிடும். இதில், நுரையீரலுக்குள் தண்ணீர் புகுந்துவிடுவது உயிருக்கு ஆபத்தான விஷயம். இதனால் தொடர்ந்து மூச்சுவிட முடியாத சூழல் ஏற்படுவதால், மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் தடைபட்டு குழந்தை மயக்க நிலைக்குத் தள்ளப்படும்.
    எனவே, தண்ணீரில் இருந்து குழந்தையை வெளியே எடுத்ததும், சுவாச ஓட்டம் மற்றும் நாடித் துடிப்பைப் பரிசோதிக்க வேண்டும். குழந்தை மூச்சு விடவில்லை என்றால், உடனடியாக செயற்கை சுவாசம் அளிக்கலாம். குழந்தையை மல்லாந்த நிலையில் படுக்கவைத்து அதன் வாயோடு நமது வாயைப் பொருத்திப் பலமாக ஊத வேண்டும். இப்படிச் செய்வதால், நம் வாய் வழியாக உந்தித் தள்ளப்படும் காற்றானது குழந்தையின் மூச்சுக் குழல் அடைப்பை சட்டென நீக்கி, இயல்பாக மூச்சுவிட உதவும். இதயம் இயங்காமல் இருந்தால், நாடித் துடிப்பு இருக்காது. உடனடியாகக் குழந்தையினுடைய மார்பின் நடுவில் இரண்டு விரல்களை (ஆட்காட்டி விரல், நடு விரல்) ஒன்றுசேர்த்து நன்றாக ஊன்றி அழுத்திவிடும்பொழுது சட்டென இதயம் துடிக்க ஆரம்பிப்பதோடு, நுரையீரலில் தேங்கி நிற்கும் தண்ணீரும், வாய், மூக்கு வழியே வெளியேறும். பாதிக்கப்பட்டவர் பெரியவர் என்றால், வாய் வழி செயற்கை சுவாசம் கொடுப்பதோடு, அவரது மார்பின் நடுவில் நம்முடைய உள்ளங் கைகளால் விட்டு விட்டு பலமான அழுத்தம் கொடுக்கலாம். எக்காரணம் கொண்டும் வயிற்றை அழுத்தக் கூடாது.
    நிறையத் திரைப்படக் காட்சிகளில், தண்ணீரில் மூழ்கியவரைக் கரைக்கு கொண்டுவந்து சேர்த்ததும் அவரது வயிற்றை அழுத்தி, தண்ணீரை வெளியேற்றுவதாகக் காட்டுவார்கள். இது முழுக்க முழுக்கத் தவறான முறை.
    நீரில் மூழ்கியவர்களைக் காப்பாற்றும்போது, பாதிக்கப்பட்டவரது தலையை நீர்மட்டத்துக்கு மேலே இருக்குமாறு உயர்த்திப் பிடித்துக்கொண்டு, சுவாச ஓட்டம் இருக்கிறதா என்று சோதிக்கலாம். சுவாசம் இல்லை என்றால், அவசரத்தின் நிலைமையைப் பொறுத்து அந்த நிலையிலேயே அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கலாம். கரைக்குக் கொண்டுவந்து மல்லாந்துப் படுக்கவைத்துத்தான் சுவாசம் அளிக்க வேண்டும் என்பது இல்லை.
    தண்ணீருக்குள் மூழ்கியவருக்கு மூச்சும், நாடித் துடிப்பும் இல்லை என்றால், அவர் இறந்துவிட்டார் என்று முடிவு செய்துவிட வேண்டாம். மூச்சுத் தடை, இதயம் செயல்படாமை இரண்டுமே தற்காலிகமானவை. எனவே, எந்தவிதப் பதற்றமும் இன்றி நாம் முறையாக முதல் உதவி செய்தால், பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்றிவிட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, தண்ணீரில் விழுந்து ஒரு மணி நேரம் ஆகியிருந்தால்கூட, பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக முதல் உதவி செய்து, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்று மேற்சிகிச்சை அளிப்பது முக்கியம்.''
     குழந்தைகள் பத்திரம்!
    1 குழந்தைகள் உள்ள வீடுகளில், குளியல் அறைக் கதவுகளை எப்போதும் மூடியே வைத்திருப்பது நல்லது.
    2 சிறிய வாளித் தண்ணீரில்கூட குழந்தைகள் தலைகீழாக விழுந்துவிட்டால், ஆபத்து. எனவே, குழந்தைகளுக்கு எட்டும் தூரத்தில் வாளி போன்ற பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பிவைக்க வேண்டாம்.
    3 குழந்தைகளைக் குளிப்பாட்டும் 'பாத் டப்’பில் விளையாட்டுப் பொம்மைகளைப் போட்டுவைக்க வேண்டாம்.
    4 நீர்வழிப் பயணங்களின்போது நீச்சல் தெரிந்தவர்களும் 'லைஃப் ஜாக்கெட்’ அணிய வேண்டியது அவசியம்.
    5 வலிப்பு நோய் உள்ளவர்கள் பாதுகாவலர் துணையோடு நீர்நிலைகளில் குளிப்பது நல்லது.
    6 உயரமான இடத்தில் இருந்து நீச்சல் குளத்துக்குள் டைவ் அடிக்கும்போது கழுத்து எலும்பு பாதிப்பு அடையலாம். அதனால் பாதிக்கப்பட்டவரின் கழுத்தைத் தொங்கவிடாமல், அங்கே இங்கே அசைக்காமல், பாதுகாப்பான நிலையில் ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: நீரில் தத்தளிப்பவரை காப்பது எப்படி?. Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top