சர்க்கரையை புறக்கணியுங்கள்! - தமிழர்களின் சிந்தனை களம் சர்க்கரையை புறக்கணியுங்கள்! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Saturday, September 13, 2014

    சர்க்கரையை புறக்கணியுங்கள்!


    சர்க்கரையை புறக்கணியுங்கள்!

    உலக சுகாதார நிறுவனத்தின் ஆரோக்கிய அட்வைஸ்

    மனித உடலைத் தொடர்ந்து ஆராய்ந்து, புதிது புதிதாக எதையாவது கண்டுபிடித்து நம் டயட்டை மாற்ற முயற்சிப்பதே உலக சுகாதார நிறுவனத்தின்  முக்கிய வேலையாக இருக்கிறது. சமீபத்தில் அவர்கள் கொடுத்திருக்கும் டேஞ்சர் சிக்னல், சர்க்கரையைப் பற்றியது. சாதாரண மனிதன் ஒரு நாளைக்கு  24 கிராம்... 

    அதாவது 6 டீஸ்பூன் சர்க்கரையைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமாம். அதற்கு மேல் போனால், உடல் எடை கூடி டயபடீஸ், பிளட் பிரஷர் என  எல்லாம் உள்ளே வந்து உட்கார்ந்துகொள்ளும் என்கிறது உ.சு நிறுவனம். அப்படியென்றால் மூணு வேளை காபியிலேயே இந்த கோட்டாவை மீறிவிடும்  தமிழர்களின் கதி என்ன?

    எதில் எவ்வளவு?

    ஒரு கேன் சோடா    10 டீஸ்பூன்
    ஒரு டேபிள்ஸ்பூன் கெட்ச்சப்    1 டீஸ்பூன்
    ஒரு டேபிள்ஸ்பூன் ஜாம்    1 டீஸ்பூன்
    ஒரு துண்டு கேக்    8 டீஸ்பூன்
    ஒரு ஸ்வீட் பிஸ்கட்    0.2 டீஸ்பூன்
    100 கிராம் மைசூர்பா    25 டீஸ்பூன்
    100 கிராம் சாதா ஸ்வீட்    10 டீஸ்பூன்


    சென்னையைச் சேர்ந்த சத்துணவு நிபுணரான டாக்டர் தாரிணி கிருஷ்ணனிடம் கேட்டோம்... ‘‘காபி, டீயோடு மட்டும் நிறுத்திக் கொண்டால் சர்க்கரை  பெரிய பிரச்னையே இல்லை. சர்க்கரையை தேவையில்லாமல் உணவில் சேர்த்துக் கொள்கிற கலாசாரம் இப்போது பெருகியிருக்கிறது. சர்க்கரையை  இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று, உணவு வகைக்குள்ளேயே உறைந்திருப்பது. இதை ‘இன்ட்ரின்சிக் சுகர்’ என்பார்கள். காய்கறிகள், பழங்களில்  இருப்பது இதுதான்.

    இது உடலுக்குக் கேடு விளைவிக்காது. அடுத்தது, கண்ணுக்குத் தெரியாமலேயே நம் உணவுப் பொருட்களில் கலந்திருக்கும் சர்க்கரை. இதை ‘ஹிட்டன்  சுகர்’ என்பார்கள். இந்த இரண்டாம் வகையான சர்க்கரையைத்தான் நாம் அன்றாட உணவுகளில் அதிகமாக சேர்த்துக் கொள்கிறோம். வெறும்  சாக்லெட்டுகள், மிட்டாய்கள்,

    சர்க்கரைப் பொங்கல் போன்ற உணவுகளில் மட்டுமே சர்க்கரை இருந்தது மாறி, இப்போது எல்லாவற்றிலுமே சர்க்கரையைக் கலக்கிறார்கள். ஒரு  ஆரஞ்சை உரித்துச் சாப்பிட்டால் கெடுதல் இல்லை. ஆனால், அதைப் பிழிந்து ஜூஸ் போட்டு சர்க்கரையை கலக்கும்போதுதான் கலோரி கூடுகிறது.  இன்று எந்தப் பழத்தையும் ஜூஸ் போட்டுத்தான் உட்கொள்வோம் என்ற கலாசாரம் நம்மிடம் பெருகிவிட்டது. தர்ப்பூசணியைக் கூட ஜூஸ்  போடுகிறார்கள்.

    தெருவோரங்களில் இருக்கும் ஸ்வீட் கடைகளும் பேக்கரிகளும் மட்டுமே நம் டயட்டுக்கு எதிரி என்று நினைக்க வேண்டாம். ஹோட்டல்களைப்  பொறுத்தவரை கீரைக் கூட்டிலும், கோஸ் பொரியலிலும், வத்தக் குழம்பிலும் கூட சர்க்கரையைக் கலந்து விடுகிறார்கள். புளிப்புள்ள, துவர்ப்புள்ள,  கொஞ்சம் கசப்புள்ள உணவில் சர்க்கரையைக் கலக்கும்போது அது புதுவிதமான சுவையைக் கொடுப்பதாக நினைக்கிறார்கள் சாப்பாட்டுப் பிரியர்கள்.  இந்தக் கலவையை வட மாநிலங்களில் ‘கட்டா மிட்டா’ என்பார்கள். ரோட்டோர சமோசா கடைகளில் தரும் சட்னியில் கூட கலந்திருக்கிறது இந்த  கட்டா மிட்டா. இவை இன்ஸ்டன்டாக உடலில் சர்க்கரை அளவைக் கூட்டிவிடும்.

    இப்படிப்பட்ட சர்க்கரை உணவுகள் போதாதென்று அவற்றை சாப்பிடும்போதெல்லாம் குளிர்பானங்களையும் கூடவே எடுத்துக்கொள்ளும் கலாசாரம்  சமீபத்தில் வளர்ந்திருக்கிறது. ஒரு மில்லி லிட்டர் கூல்ட்ரிங்சில் சர்க்கரை, கெமிக்கல், கலரிங் சேர்ப்பால் 1 கலோரி சத்து இருக்கிறது. 200 மில்லி  லிட்டரில் 200 கலோரி இருக்கிறது. ஒரு சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்குத் தேவையான கலோரி 2000 என்று வைத்துக்கொண்டால், ஒரு  மனிதன் 10 கூல்ட்ரிங்ஸ்சை ஒரு நாளைக்கு குடித்துவிட்டாலே போதுமானது. ஆனால், இதையும் குடித்துவிட்டு ஏராளமான உணவுகளையும்  உண்டால், உடலில் சேரும் கலோரி அளவைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

    காலை உணவு இட்லி, தோசை என்றிருந்தது போய், இன்று பாக்கெட் உணவுக்கு மாறிக்கொண்டிருக்கிறது தமிழனின் கலாசாரம். இட்லியும் தோசையும்  ஏழைகளின் உணவாக நினைக்கப்படுகிறது. அது ஆரோக்கியமான உணவு என்பதை யாரும் உணர்வதில்லை.

    இதில் சர்க்கரையின் அளவு குறைவாகவும், உடலுக்குத் தேவையான சக்திகள் அதிகமாகவும் இருக்கிறது. ஆனால், காஸ்ட்லியான உணவு  ஆரோக்கியமான உணவு என்ற ஒரு பிம்பம் பலர் மனதில் புகுந்துவிட்டது. ‘டயட் உணவு’ என்று விளம்பரப்படுத்தப்படும் ரெடிமேட் உணவுகளில் கூட  இப்போது சர்ககரையின் அளவு அதிகம். அதனோடு பாலையும் சர்க்கரையும் சேர்த்து கலோரியை டபுளாக்கி சாப்பிட்டு விட்டு எடை குறையும் என்று  எதிர்பார்க்கிறார்கள் பலர்’’ என்றவர், ‘புதிதாக நகரக் கலாசாரத்துக்கு வரும் முதல் தலைமுறை படிப்பாளிகளும் பணக்காரர்களும்தான் இந்த மாதிரி  உணவுகளால் அதிகம் பாதிக்கப்படுவதாக’ தெரிவித்தார்.

    ‘‘கிராமத்து விவசாயக் குடும்பங்களிலிருந்து படித்துவிட்டு சிட்டியை நோக்கி வருகிறார்கள் பலர். இவர்கள் ஊரில் இருக்கும்போது அதிக உடல்  உழைப்பில் ஈடுபட்டிருப்பார்கள். அதற்கேற்றபடி அதிகமாக உண்பார்கள். அது இனிப்பு அதிகம் இல்லாத பாரம்பரிய கிராமத்து உணவாகவும் இருக்கும்.  ஆனால், நகரச்சூழலில் அந்த உணவுகளோ அல்லது அந்த உடல் உழைப்போ இவர்களிடம் இருப்பதில்லை.

    ஆனால், பழைய அளவை விட்டுக் கொடுக்காமல் கண்டதை எல்லாம் வாங்கிச் சாப்பிடும் பழக்கத்துக்கு அடிமையாகிறார்கள்’’ என்கிறார் அவர்  வருத்தத்தோடு! ரெடி மிக்ஸ்களும், இன்ஸ்டன்ட் சட்னிகளும் கோலோச்சும் வரை நாம் சர்க்கரையின் பிடியில் இருந்து தப்பிக்கப் போவதில்லை.  தமிழனின் பாரம்பரிய உணவு முறைகள்தான் இதற்கு ஒரே தீர்வு. யாருப்பா இதை தேர்தல் அறிக்கையில சேர்த்துக்கப் போறது?

    சர்க்கரையே பெரிய வில்லன்!

    உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் சர்க்கரை அளவு, 8 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு தினசரி 12 கிராம். அதற்கும் மேற்பட்ட வயதினருக்கு 24  கிராம். ஆனால் இதைத் தாண்டுவதால் ஏராளமான பிரச்னைகள். குறிப்பாக சர்க்கரை சேர்த்த குளிர்பானங்கள்தான் பெரிதும் ஆபத்து தருகின்றன. ஒரு  மருத்துவ நிறுவனம் எடுத்த கணக்கின்படி,

    சர்க்கரை சேர்த்த குளிர்பானங்களுக்கு 20 சதவீதம் அதிக வரி விதித்தால், அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 1 கோடியே 12 லட்சம் பேர் ஓவர்  வெயிட் ஆவதைத் தடுக்கலாம்; 4 லட்சம் புதிய சர்க்கரை நோயாளிகளைத் தவிர்க்கலாம். ‘விலை அதிகம் என்பதால் வாங்கிக் குடிக்காமல் நோய்களை  இப்படி தவிர்ப்பார்கள்’ என்கிறது அந்த புள்ளி விவரம்.

    http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=2830
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: சர்க்கரையை புறக்கணியுங்கள்! Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top