நம்ம வீட்டில இருக்குது ஜிம்.....கவலை எதற்கு
ஜிம்முக்குப் போகப்போகிறோம், இனி உடம்பு ஃபிட்டாகி விடும்' என்கிற நினைப்பே மனசுக்குள் உற்சாகத்தை உசுப்பிவிட, புது ஷூ, புது டிஷர்ட், ஷார்ட்ஸ் சகிதம் ஜிம்முக்குப் போகத் தொடங்குர்கள். சில வாரங்கள் அல்லது சில மாதங்கள், கொஞ்சம் கொஞ்சமாக சுணக்கம் வந்து, ஜிம்முக்குப் போவது நின்றுவிடும். இது உங்கள் கதை, என் கதை அல்ல, பெரும்பாலானவர்களின் கதை இது தான். அப்போ என்னதான் பண்ணலாம்?
தொடர்ந்து ஜிம் போக முடியாமல் போவதற்கு மிக முக்கியமான காரணம் நேரமின்மை தான். இதற்கு, ஒவ்வொரு வீட்டிலும் சமையல் அறை, படுக்கை அறை, குளியலறை வரிசையில் இனி உடற்பயிற்சிக்கும் ஓர் அறை என வீட்டிலேயே ஜிம் அமைத்து விட்டால், அலைச்சல் இல்லை... நேரமும் மிச்சம். அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருகின்றன" என்கிறார் உடற்பயிற்சி நிபுணர் டேனியல்.
'ஓ.கே.சார். வீட்டில் மினி ஜிம் அமைக்க என்னென்ன பொருட்கள் தேவை, எவ்வளவு சதுர அடியில் அமைக்கலாம் என்பதையும் சொல்லிவிடுங்கள்' என்றோம்.
'சில அலுவலகங்கள், அப்பார்ட்மென்ட்களில் உடற்பயிற்சி செய்வதற்கு என பிரத்யேகமாக அறைகள் அமைத்திருந்தாலும் 50 சதவிகிதம் பேர் கூட அவற்றைப் பயன்படுத்துவது இல்லை. வீட்டிலேயே ஜிம் அமைத்தால் தினமும் நமது கண்ணில்படும், நேரம் கிடைக்கும்போது வொர்க்அவுட் செய்யலாம் என்பது போன்ற பல வசதிகள் இருக்கின்றன. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவருமே இந்த உடற்பயிற்சி அறையைப் பயன்படுத்தலாம்' என்றவர், ஜிம் ரூம் அமைக்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களைப் பட்டியலிட்டார்.
'பெரிய வீடு எனில் வீட்டுக்குள்ளேயே சுமார் 225 சதுர அடி முதல் தேவையான அளவு ஜிம்முக்கு எனத் தனி அறை ஒதுக்கலாம். மொட்டை மாடியில் இதற்கெனப் பிரத்யேகமாக ஒரு அறையை உருவாக்கலாம். அல்லது ஏற்கனவே இருக்கும் அறையை சற்றே மாற்றி வடிவமைத்தாலும் போதுமானது.
உடற்பயிற்சி அறையின் தரைப்பகுதி மிக முக்கியம். சிமென்ட் தரைக்கு மேல் வலுவான விரிப்பு (மேட்) போடவேண்டும். உடற்பயிற்சி அறை அமைப்பதற்கான பிரத்யேக விரிப்புகள் சந்தையில் பல விதங்களில் கிடைக்கின்றன. தரமான விரிப்பைத் தரைக்கு மேல் பொருத்தவேண்டும். மரத்தினால் செய்யப்பட்டிருந்தால் இன்னும் நல்லது.
அறையின் இரு பக்கங்களிலும் கண்ணாடிச் சுவர் அமைக்கவேண்டும். முடியாதவர்கள் குறைந்தபட்சம் ஒருபக்கமாவது கண்ணாடிச் சுவரை பொருத்தலாம். தூசு படிவதைத் தடுக்க ஜிம்மை ஏ.சி அறையாக மாற்றிக் கொள்ளலாம்.
விரும்பினால் மட்டும் அறையில் மியூசிக் சிஸ்டம் அமைத்துக் கொள்ளலாம். முதலுதவிப் பெட்டி கட்டாயம் அறையில் இருக்க வேண்டும். இப்படி, வீட்டிலேயே அமைக்கும் ஜிம்மால் உடலும் ஜம்மென இருக்கும்" என்றார்.
பண்ணிடலாம்தானே?
வீட்டு ஜிம் விதிகள்
18 வயதுக்கு கீழ் இருப்பவர்கள், உடற்பயிற்சியாளர் பரிந்துரையின்றி எடைப் பயிற்சிகளை செய்யக் கூடாது.
ஜிம்க்கு என தனியாக ஷூக்கள் பயன்படுத்த வேண்டும்.
ஜிம்மில் பயன்படுத்தும் பிரத்யேக ஆடைகளைத் தனியாகத் துவைத்து உலரவைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
எந்த ஒரு கருவியையும் முன் அனுபவம் இன்றியோ உடற்பயிற்சியாளரிடம் ஆலோசனை பெறாமலோ பயன்படுத்தக் கூடாது.
இதய நோயாளிகள், தசைப்பிடிப்பு இருப்பவர்கள், நரம்புத் தளர்ச்சி இருப்பவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் கருவிகளில் மட்டும் அளவுடன் பயிற்சி செய்ய வேண்டும்.
சாப்பிட்ட பின் 2 மணி நேரம் கழித்துத்தான் வொர்க்அவுட் செய்யவேண்டும்.
அறையில் பிரத்யேகமாக காய்ச்சிய குடிநீர் அல்லது ஃபில்டர் செய்த குடிநீர் தேவையான அளவுக்கு ஒரு கேனில் வைத்துக்கொள்ள வேண்டும். உணவுப் பொருட்களை ஜிம்மில் வைத்து சாப்பிடக் கூடாது.
எந்தெந்த கருவிகள் தேவை?
1. ட்ரெட்மில்.
2. ஆர்பிட்டிரக் ஆர்பிட் ட்ரெய்னர் (அல்லது) சைக்கிளிங்.
3. பை ராடு மற்றும் மல்டி ராடு.
4. 2.5 கிலோ, 5 கிலோ மற்றும் 10 கிலோ பிளேட்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு.
5. மல்ட்டி பெஞ்ச்.
6. புஷ் அப் பார்.
7. யோகா மேட்.
8. ஜிம் பால்.
9. டம்பிள்ஸ் 1கி, 3கி, 5கி, 7கி, 10கி ஒவ்வொன்றிலும் தலா இரண்டு.
10. டம்பில் டிராக்.
11. எடை பார்க்கும் எலெக்ட்ரிக் இயந்திரம்.
0 comments:
Post a Comment