ப்ரீ டயாபடீஸா.. பயம் வேண்டாம் டாக்டர் கருணாநிதி - தமிழர்களின் சிந்தனை களம் ப்ரீ டயாபடீஸா.. பயம் வேண்டாம் டாக்டர் கருணாநிதி - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Saturday, October 25, 2014

    ப்ரீ டயாபடீஸா.. பயம் வேண்டாம் டாக்டர் கருணாநிதி

    உலக அளவில் சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம். ப்ரீ டயாபட்டீஸ் என்று சொல்லப்படும் 'சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை’யில் இருப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மட்டும்  7.72 கோடிப் பேர் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில். ப்ரீ டயாபடீஸ் பற்றிய பல்வேறு சந்தேகங்களை சர்க்கரை நோய் நிபுணர் கருணாநிதியிடம் கேட்டோம்.
    'சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை என்றால் என்ன?'
    'பொதுவாக, ஒருவருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சாப்பிடுவதற்கு முன் 100 முதல் 125 mg/dl என்ற அளவிலும், உணவு உட்கொண்ட பிறகு 140 முதல் 199 mg/dl என்ற அளவிலும் இருந்தால், அவர் ப்ரீ டயாபடீஸ் நிலையில் உள்ளார். அதாவது, எதிர்காலத்தில் சர்க் கரை நோய் வருவதற்கான சாத்தியங்கள் அவருக்கு அதிகம் என்று அர்த்தம்.'

    'ப்ரீ டயாபடீஸ் யாருக்கு எல்லாம் வர வாய்ப்புள்ளது?'
    'அதிக உடல் எடை இருப்பவர்கள், குறிப்பாக பி.எம்.ஐ மதிப்பில் 25க்கு மேல் இருப்பவர்கள், கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் (Gestational Diabetes) வந்தவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்கள், உடல் உழைப்பின்றி, அதிக கலோரி உணவு உண்ணுபவர்கள் (Sedentary type) ஆகியோருக்கு ப்ரீ டயாபடீஸ் வரலாம். இவர்கள் தாங்களாகவே முன்வந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சர்க்கரைப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.'
    'ப்ரீ டயாபடீஸ் இருக்கிறது என்பதை எப்படி அறிவது?'
    'சர்க்கரை நோய்க்கான சோதனை மூலம் அறியலாம். காலையில் உணவு சாப்பிடுவதற்கு முன்பும், உணவு உட்கொண்ட பின்னர் 2 மணி நேரம் கழித்தும் செய்யப்படும் ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம். சிலர் ரத்தப் பரிசோதனை செய்வதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பிருந்தே, சர்க்கரை, எண்ணெய் சேர்த்த உணவுகளைத் தவிர்த்து விட்டு, பரிசோதனையின்போது, சர்க்கரையின் அளவு குறைவு எனக் காண்பிக்க விரும்புகிறார்கள். இது தவறு. இவர்களுக்காகவே, தற்போது ஹெச்.பி.ஏ.1சி (HbA1c) என்ற பரிசோதனை இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் நம் சராசரியான சர்க்கரையின் அளவு என்ன என்பதை அது தெளிவாக விளக்கிவிடும். ப்ரீ டயாபடீஸ் வந்தவர்கள் இந்தப் பரிசோதனையை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக செய்து கொள்ளவேண்டும். இதன் மூலம் நமது உடலில் சர்க்கரையின் அளவைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்படலாம்.'
    'ப்ரீ டயாபடீஸ் வந்தவர்கள் செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை என்ன?'
    ''ப்ரீ டயாபடீஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு மாத்திரைகள் தரப்படுகின்றன ஆனால் அவற்றை எடுத்துக் கொள்ளாமல், 'உணவுக் கட்டுப்பாடு, உடல் எடைக் கட்டுப்பாடு’ போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைத் தவிர்க்கலாம். மருத்துவர் மற்றும், ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனை பெற்று உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். சீரான இடைவெளியில் குறைந்த கலோரி கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும்.  பதப்படுத்தப்பட்ட, பாக்கெட் செய்யப்பட்ட சிப்ஸ் முதலான கொழுப்புச் சத்துள்ள பொருட்கள், சர்க்கரை மட்டுமின்றி இனிப்புப் பதார்த்தம் உண்ணுவதையும் குறைத்துக்கொள்ள வேண்டும். நார்ச் சத்து மிகுந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். மாவுச்சத்துள்ள உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். தாமதமாக உணவு உட்கொள்வது, உணவைத் தவிர்ப்பது கட்டாயம் கூடாது. இரவில் உறங்குவதற்கு  இரண்டு  மணி நேரம் முன்பே மிதமான உணவைச் சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு டீ/காபி 2 கப் அளவுக்கு மேல் அருந்தக் கூடாது. தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். வாரத்துக்கு 5 நாட்களாவது முறையான நடைப்பயிற்சி அவசியம். பயிற்சியாளர், மருத்துவர் பரிந்துரை இன்றி கடினமான பளு தூக்கும் உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும்.  பொதுவாக ப்ரீ டயாபடீஸ் வந்தவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.எனவே, மனக்கவலையைத் தவிர்த்து உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, தூக்கம் ஆகியவற்றை முறையாகக் கடைப்பிடித்தால், ப்ரீ டயாபடீஸிலிருந்து நார்மல் நிலைக்கு வரலாம்.  இதய நோய்கள் வராமலும் தடுக்கலாம்.'
    பு.விவேக் ஆனந்த்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: ப்ரீ டயாபடீஸா.. பயம் வேண்டாம் டாக்டர் கருணாநிதி Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top