முதுகுவலி... முத்தான தீர்வுகள்! - தமிழர்களின் சிந்தனை களம் முதுகுவலி... முத்தான தீர்வுகள்! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Thursday, October 16, 2014

  முதுகுவலி... முத்தான தீர்வுகள்!

  முதுகுவலி... அனுபவிப்பவர்களுக்கே அதன் வேதனை புரியும். இயல்பான இயக்கத்தையே முடக்கும் அளவுக்கு ஆபத்துள்ள இந்நோயைப் பற்றி, விழிப்பு உணர்வுத் தகவல்களை வழங்குகிறார், எலும்பு முறிவு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் சண்முகசுந்தரம்.

  ''முதுகுவலி என்று சொல்வது, ஏதோ சிறிய பிரச்னையாகத் தோன்றலாம். உண்மையில் இது முதுகுத் தண்டுவடம் சார்ந்த பிரச்னை! கழுத்தில் உள்ள 7 எலும்புகள், மார்பகத்தின் பின்புறம் உள்ள 12 எலும்புகள், வயிற்றுப் பகுதியின் பின்புறம் உள்ள 5 எலும்புகள்... இவற்றை உள்ளடக்கியதே முதுகுத் தண்டுவடம். தண்டுவடத்தில் ஏராளமான நரம்புகள் உள்ளன. இதில் உள்ள நரம்புகள் மூளையிலிருந்து கை - கால்களுடன் இணைக்கப்படுகின்றன. இந்த எலும்பு, நரம்பில் ஏற்படும் பிரச்னைகளே ஒருவருக்கு முதுகுவலியை ஏற்படுத்தும்.
  காரணங்கள்: அதிக நேரம் உட்கார்ந்தபடியே வேலை செய்வது, முறையான பொஸிஷனில் இல்லாமல் கனமான பொருட்களைத் தூக்குவது, பெண்களுக்கு கர்ப்பப்பை, நீர்ப்பை போன்றவற்றில் ஏற்படும் கிருமித்தொற்று, 40 வயதைக் கடந்த பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாறுபாட்டால் எலும்புகளில் உண்டாகும் கால்சியம் குறைவு, குடல்நோய் பாதிப்பு, அதிக அயற்சி (ஸ்ட்ரெய்ன்), கிருமிகளின் தாக்குதல் (காய்ச்சல், வைரஸ், பாக்டீரியா தாக்குதல்), எலும்புப் புற்றுநோய்... இவையெல்லாம் முதுகுத் தண்டுவடத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்பதால், முதுகுவலி வரலாம்.
  வயது: எல்.கே.ஜி குழந்தைகள் முதல் கோலூன்றும் வயது வரை யாருக்கும் வரலாம்.
  கண்டறிவது எப்படி: சிலருக்கு முதுகுவலியுடன் கூடிய கால்வலி வரக்கூடும். சிலர் இருமும்போது, தும்மும்போதுகூட முதுகுவலியை உணரலாம். சிலருக்கோ குறுகிய தூரம் நடப்பது மட்டுமின்றி, சிறிது நேரம் அமர்வதுகூட இயலாததாக இருக்கும். தண்டுவடத்தில் நாள்பட்ட பாதிப்பு கண்ட சிலருக்கு கூன் விழலாம். திடீரென முதுகுவலி வந்தால், சமீபத்திய ஏதாவதொரு செயலின் விளைவு என்று, தேவையான ஓய்வெடுப்பது போதுமானது. தொடர்ந்து முதுகுவலியால் பாதிக்கப்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். சாதாரண எக்ஸ்ரேவில் என்ன பிரச்னை என்பதைக் கண்டறிய முடியாது என்பதால், எம்.ஆர்.ஐ ஸ்கேன் அவசியம்.
  சிகிச்சைகள்: ஆரம்பகட்டம் அல்லது பழக்கவழக்கத்தால் ஏற்பட்ட முதுகுவலி உள்ளவர்களுக்கு ஓய்வு, வலிநிவாரணி, நரம்புக்குத் தேவையான விட்டமின் மாத்திரைகள், மருத்துவ ஆலோ சனை சொல்லும் வாழ்க்கை முறை மாற்றம் போதுமானது. இதுவே, அதிகப்படியான பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு அறுவை சிகிச்சையே நிரந்தர தீர்வைத் தரும்.
  இன்றைய காலகட்டத்தில், தண்டுவட பிரச்னைகளுக்கு மைக்ரோ, லேசர் சர்ஜரி என பல சிகிச்சைகள் மூலம் தீர்வு காணப்படுகிறது. அதேநேரத்தில் இத்தகைய சிகிச்சைகள் சரியான உடல்தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுவதால் வேறுவிதமான பிரச்னைகள் எழ வாய்ப்பில்லை.
  எவ்வளவு செலவாகும்: எம்.ஆர்.ஐ ஸ்கேன் போன்றவற்றுக்கு 3 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். ஆரம்பகட்ட பிரச்னை என்றால் மருந்து, மாத்திரை என சில ஆயிரங்கள் செலவாகும். அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு 50 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை செலவாகும். அரசு வழங்கும் காப்பீடு திட்டத்தின் மூலமாக இலவசமாகவும், குறைந்த செலவுடனும் செய்துகொள்ளமுடியும்.
  வராமல் தடுக்க: நீண்ட நேரம் ஒரே இடத்தில், ஒரே பொஸிஷனில் அமர்ந்து வேலை செய்வதைத் தவிர்ப்பது, சேரில் அமர்ந்து வேலை செய்யும்போதும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போதும் 90 டிகிரி நேராக நிமிர்ந்து அமர்வது, குழந்தைகள் அதிக சுமை கொண்ட புத்தகப்பை தூக்குவதை தவிர்ப்பது, தினமும் குறைந்தது அரை மணி நேரம் உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகா இவற்றில் ஏதாவது ஒன்று, வாரத்தில் இரண்டு நாட்கள் குறைந்தது 40 நிமிட நீச்சல் பயிற்சி, தினமும் சத்தான உணவு எடுத்துக்கொள்வது...
  இந்தச் செயல்பாடுகள் எல்லாம் உங்கள் தண்டுவடத்துக்கு பாதிப்பு ஏதும் நேராமல் காக்கும். மேலும் முதுகுவலிக்கு மருத்துவ ஆலோசனை இன்றி நீங்களாகவே வலி நிவாரணி எடுத்துக்கொள்வது, பாதிப்பை அதிகப்படுத்துவதோடு, சிறுநீரகப் பிரச்னை வரை இழுத்துச் சென்றுவிடும். முதுகுவலிக்காக கடைகளில் கிடைக்கும் தைலங்கள், பாம் போன்றவற்றை பயன்படுத்துவது தற்காலிக தீர்வு மட்டுமே என்பதை மனதில் கொள்ளுங்கள்!''
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: முதுகுவலி... முத்தான தீர்வுகள்! Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top