நீரிழிவு உங்கள் உணவில் அவதானிக்க வேண்டியவை? - தமிழர்களின் சிந்தனை களம் நீரிழிவு உங்கள் உணவில் அவதானிக்க வேண்டியவை? - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Saturday, April 26, 2014

  நீரிழிவு உங்கள் உணவில் அவதானிக்க வேண்டியவை?

  தமது நீரிழிவின் தாக்கத்தைக் குறைப்பதற்கு நோயாளிகள் அவதானிக்க வேண்டிய விடயங்கள் முக்கியமாக மூன்று எனலாம்.

  1. தங்கள் உணவு உட்கொள்ளும் முறையில் பொருத்தமான மாற்றங்களைக் கொண்டு வருதல். 
  2. தினமும் உடலுழைப்புடன் கூடிய வேலைகளில் ஈடுபடுதல், அல்லது உடற் பயிற்சி செய்தல், 
  3. தங்களுக்கு மருத்துவர்கள் சிபார்சு செய்த மருந்துகளை ஒழுங்கான முறையில் உட்கொள்ளுதல் ஆகியவையே ஆகும். 

  இக் கட்டுரையில் முக்கியமாக நீரிழிவாளர்களின் உணவு முறை பற்றியே பேச உள்ளோம்.  நீரிழிவாளர்களுக்கான நவீன உணவுத் திட்டமானது ஓரளவு சுதந்திரமானது. நெகிழ்ச்சித்தன்மை கொண்டது. பசியிருக்க வேண்டியதில்லை. பட்டினி அறவே கூடாது. வயிறு நிறையச் சாப்பிடலாம். ஆனால் எதனால் நிரப்ப வேண்டும் என்பதைப் தெளிந்து கொள்ள வேண்டும். அறிவு பூர்வமாகச் சிந்தித்து உட்;கொண்டால் எதையும் முற்று முழுதாகத் தவிர்க்க வேண்டியதில்லை.

  உணவின் கூறுகள்

  எமது உணவில் பல கூறுகள் உள்ளன. மாப்பொருள், புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், விற்றமின், தாதுப் பொருட்கள் ஆகியவையே அவை. பெரும்பாலான உணவுகளில் இக் கூறுகள் அனைத்துமே இருக்கும். ஆனால் ஒவ்வொன்றிலும் சில கூறுகள் அதிகமாகவும் சில குறைவாகவும் இருக்கும்.  நாம் அதிகம் உண்பது மாப்பொருள் உணவுகளையே.அரிசி, கோதுமை, குரக்கன் போன்ற தானிய வகைகள் யாவுமே மாப்பொருள் உணவுகள்தான். உருளைக் கிழங்கு, வத்தாளைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு போன்ற யாவற்றிலும் உள்ளது மாப் பொருள்தான்.

  மீன், இறைச்சி, முட்டை போன்றவற்றிலும், பயறு பருப்பு, சோயா, கடலை, உழுந்து போன்ற அவரையின உணவுகளிலும் புரதம் அதிகம் உண்டு.

  எல்லா வகை எண்ணெய்களும் கொழுப்பு சத்து மிகுந்தவை. பாலாடை, பட்டர், மார்ஜரீன், மிருக இறைச்சிகளிலுள்ள கொழுப்புப் பகுதிகள் போன்ற யாவும் அதிக கொழுப்புள்ள உணவுகளாகும்.

  பழவகைகளிலும், காய்கறி வகைகளிலும் நார்ப்பொருள், விற்றமின்கள், தாதுப் பொருட்கள் செறிவாக உண்டு.

  உணவு வகைகள்

  இவ்வாறு உணவின் கூறுகள் பலவானாலும் வசதி கருதி நீரிழிவு நோயாளர்கள் தங்கள் உணவு வகைகளை மூன்று வகைகளாகத் பிரித்து வைத்துக் கொள்ளலாம்.
  1. விரும்பிய அளவு உண்ணக் கூடியவை
  2. இடைப்பட்ட அளவில் உண்ணக் கூடியவை
  3. மிகக் குறைவாக உண்ண வேண்டியவை

  விரும்பிய அளவு உண்ணக் கூடியவை
  பொதுவாக எல்லா காய்கறிவகைகளும் விரும்பிய அளவு உட்கொள்ளக் கூடியவைதான். கத்தரி, பூசணி, தர்ப்பூசணி, வெண்டி, வெள்ளரி, புடோல், பாகல், கரட், முள்ளங்கி, நோகோல், கோகிலத் தண்டு, போஞ்சி, பயிற்றை, முருங்கைக் காய், எல்லா இலை மற்றும் கீரை வகைகள், லீக்ஸ், போன்றவை.
  ஆனால் அதிக மாச்சத்துள்ள காய்கறிகளை ஓரளவே உண்ண வேண்டும்.

  இடைப்பட்ட அளவில் உண்ணக் கூடியவை

  பொதுவாக மாப்பொருள் உணவுகளும் புரத உணவுகளும் இந்த வகையில் அடங்கும்.

  சோறு தவிர்க்க வேண்டிய உணவு அல்ல. விரும்பினால் மூன்று வேளைகளும் சாப்பிடலாம். தவிட்டுடன் கூடிய சிவத்த அரிசிச் சோறு விரும்பத்தக்கது. 

  ஆனால் சோற்றின் அளவானது ஒருவர் செய்யும் வேலைக்கு ஏற்பவும் நிறைக்கு ஏற்பவுமே இருக்க வேண்டும். தோட்ட வேலை போன்ற உடல் உழைப்புடன் கூடிய வேலை செய்பவர்கள் உண்ணும் அளவை விட நாற்காலியில் இருந்தபடி சொகுசு வேலை செய்பவர்களுக்கு குறைவான அளவே இருக்க வேண்டும்.

  தீட்டாத சிவத்த அரிசிச் சோறு நல்லது. தவிடு குறைந்த அல்லது வெள்ளை அரிசிச் சோறு எடுக்க நேர்ந்தால் அதற்கு ஏற்ப காய்கறிகளை சற்று அதிகம் சேர்த்து உண்ண வேண்டும். இதனால் காய்கறிகளில் உள்ள நார்ப்பொருள் உணவு ஜீரணமடைவதைத் தாமதமாக்கி குருதியில் சீனியின் அளவு திடீரென எகிறுவதைத் தடுக்கும்.

  இடியப்பம், புட்டு, தோசை போன்ற உணவுகள் தயாரிப்பதற்கும் தவிடு நீக்காத அரிசியில் தயாரித்த மாவே நல்லதாகும். சோயா மா, குரக்கன் மா போன்றவையும் நல்லவையே, கோதுமை மாவானது தவிட்டுச் சத்து குறைவானது என்பதால் சிறந்தது அல்ல.

  Thanks:- www.roshani.co.uk
  இவற்றையும் சொதி சம்பல் போன்றவற்றுடன் உண்பது நல்லதல்ல. பருப்பு, சாம்பார் அல்லது காய்கறிகளால் ஆன கறிகளுடன் சேர்த்து உண்பதே நல்லது. பாண் அல்லது கோதுமை உணவு உண்ண நேர்ந்தால் பட்டர் ஜாம் போன்ற வற்றைத் தவிர்த்து பருப்பு போன்றவற்றுடன் உண்ண வேண்டும்.

  பயறு, பருப்பு, சோயா, அவரை, கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி போன்றவற்றில் புரதமும் நார்ப்பொருளும் உள்ளதால் தினமும் உணவில் சேர்ப்பது அவசியம். ஒருநேர உணவிற்கு இவற்றை அவித்துப் பயன்படுத்தலாம். அல்லது ஏனைய உணவுகளுடன் சேர்த்தும் உண்ணலாம்.

  உருளைக் கிழங்கு, வத்தாளைக் கிழங்கு, மரவள்ளி, பலாக்காய், ஈரப்பலா, வாழைக்காய், போன்றவை மாச்சத்து அதிகமுள்ளவையாகும். இவற்றை அதிகம் உட்கொண்டால் அதற்கு ஏற்றளவு சோறு இடியப்பம், பிட்டு போன்ற பிரதான மாப்பொருள் உணவின் அளவில் குறைக்க வேண்டும்.

  பழவகைகளும் கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டியவையே. பழங்களில் நார்ச்சத்து அதிகம் என்பதால் அவை முக்கியத்துவம் பெறுகின்றன.

  பழச்சாறாக அருந்தும்போது நார்ச்சத்து நீங்கிவிடுகிறது. எனவே முழுமையாகச் சாப்பிடுவதே நல்லது. வாழைப்பழம், மாம்பழம், கொய்யா, பப்பாசி, அன்னாசி என யாவும் நல்லவையே. பேரீச்சம்பழத்தில் சீச்சத்து அதிகம் என்பதால் தவிர்ப்பது நல்லது.

  ஒவ்வொரு உணவோடும் ஏதாவது பழம் சாப்பிடுவது நல்லது. ஆயினும் குருதியில் சீனி அளவு மிகஅதிகமாக உள்ளவர்கள் சற்றுக் குறைவாகவே பழங்களைச் சாப்பிட வேண்டும். அதேபோல சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களும் கட்டுப்பாட்டுடன் உண்ண வேண்டும்.

  மீன் நல்லது. கோழியிறைச்சில் கொழுப்பு குறைவு. இருந்தாலும் அதன் தோல் பகுதியில் உள்ள கொழுப்பை சமைக்க முன் அகற்ற வேண்டும்.

  மாடடிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்றவை கொழுப்பு அதிகமுள்ளதால் தவிர்ப்பதே நல்லது.

  முடடையைப் பொருத்தவரையில் அது ஒரு பூரண உணவு. இருந்தபோதும் அதன் மஞ்சற் கருவில் கொழுப்பும் கொலஸ்டரோலும் அதிகம் என்பதால் நீரிழிவு உள்ளவர்கள் வாரத்தில் 2-3 முறை மட்டும் உண்ணலாம்.

  மிகக் குறைவாக உண்ண வேண்டியவை

  இனிப்புள்ள எதையும் மிகக் குறைவாகவே உண்ண வேண்டும். சீனியானது மிக விரைவாக குருதியில் சீனியின் அளவை அதிகரிக்கும். குளுக்கோஸ் அதைவிட வேகமாக அதிகரிக்கும். எனவே கோப்பி, தேநீர் போன்றவற்றைச் சீனி போடாமல் அருந்துவது நல்லது.

  இளநீரிலும் இனிப்பு இருக்கிறது. அதீதமாக அருந்துவது கூடாது. வாரத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு கிளாஸ் அளவு அருந்தலாம்.

  இனிப்புப் போலவே கொழுப்பு அதிகமுள்ள உணவுகளிலும் கலோரி அளவு மிக அதிகம் என்பதால் நல்லதல்ல.

  இனிப்பின் அளவானது சில உணவுகளில் வெளிப்படையாகத் தெரியாது மறைந்திருக்கும் ஒரு துண்டு கேக்தான் சாப்பிட்டேன். ஒரு கிளாஸ் சோடாதானே குடித்தேன் என நினைப்பீர்கள். ஆனால் அவற்றில் எவ்வளவு அதிகமாக சீனி இருக்கிறது என அறிவீர்களா?

  100 கிறாம் அளவுள்ள ஒரு சொக்கிளட் ஸ்லப்பில் 14 தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது என்பதை அறிந்திருக்கிறீர்களா?

  100 கிறாம் அளவுள்ள சொக்கிலட் பிஸ்கற்றில் 11 தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது. அத்தகைய தனி பிஸகட் ஒன்றில் சுமார் ஒன்றரைத் தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது

  அதேபோல 50கிறாம் அளவுள்ள ஒரு சாதாரண அல்லது பழக் கேக்கில் சுமார் 5 தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது. ஐஸ்கிறீம் 100 கிராமில் 4 ½ தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது.

  'உணவு செமிக்கயில்லை சும்மா ஒரு கிளாஸ் லெமனேட் மாத்திரம் குடித்தேன்' என்பார்கள் சிலர். 200 மில்லி லீட்டர் அளவுகள் லெமனேட் குடித்திருந்தால் அது 3 தேக் கரண்டி சீனி குடித்ததற்கு சமனாகும்.

  களையாகக் கிடக்கு என்று சொல்லி மோல்டற் மா வகைகள் குடிப்பவர்கள் பலருண்டு. நெஸ்டமோலட். ஹோர்லிக்கஸ், விவா எனப் பல வகை மா வகைகள் இருக்கின்றன. இவற்றில் எதையாவது குடித்தால் அதில் 2 தேக்கரண்டி சீனி சேர்ந்திருக்கிறது.

  எனவே சீனி அதிகமுள்ள உணவுகளான ரின்பால், கேக், புடிங், ஜாம், ரொபி, சொக்கிளற், தகரத்தில் அடைக்கப்பட்ட பழங்கள், போத்தலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள், மென்பானங்கள், பிஸ்கற் வகைகள், ஐஸ்கிறீம், ஜெலி போன்றவற்றறைத் தவிர்ப்பது நல்லது. நீரிழிவாளர்களுக்கு என ஜாம், கொக்கிளட் போன்றவை தயாரிக்கிறார்கள். இவையும் பொதுவாக நல்லதில்லை.

  உணவில் எண்ணெய் வகைகளை மிகக் குறைவாகவே உபயோகிக்க வேண்டும். அது தேங்காயெண்ணயாக இருந்தாலும் சரி, சோயா, சூரியகாந்தி அல்லது நல்லெண்ணை எதுவாக இருந்தாலும் சரி குறைவான அளவே உட்கொள்ள வேண்டும். அறவே எடுக்கக் கூடாது என்றில்லை.

  ஆனால் எண்ணெயில் பொரித்த வதக்கிய உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ரோல்ஸ், பற்றிஸ், வடை, முறுக்கு, மிக்ஸர் போன்ற நொறுக்குத் தீனிகள் அனைத்திலும் மாப்பொருளும், கொழுப்பும் மிக அதிகமாக உள்ளன. அவை நீரிழிவை மோசமாக்கும். கொலஸ்டரோல் அதிகரிப்பிற்கும் எடை அதிகரிப்பதற்கும் காரணமாகும்.

  டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
  MBBS(Cey), DFM (Col), FCGP (col)
  குடும்ப மருத்துவர்
  -hai nalama-
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: நீரிழிவு உங்கள் உணவில் அவதானிக்க வேண்டியவை? Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top